Published:Updated:

காதல் ஒரு கல்தோசை!

ஆ.அலெக்ஸ் பாண்டியன்

##~##

“இப்போ தமிழ் சினிமால காமெடி டிரெண்ட்னு சொல்றாங்க. ஆனா, மூணு நாலு வருஷத்துக்கு முன்னாடியே 'கருப்பசாமி குத்தகைதாரர்’, 'வெடிகுண்டு முருகேசன்’னு காமெடி பேக்கேஜ் மட்டும் வெச்சே படங்கள் கொடுத்தேன். ஆனாலும், அந்தப் படங்கள்ல என்னவோ தப்பு இருந்திருக்கு. ரெண்டரை வருஷம் காத்திருந்து என்னை நானே சீஸன் பண்ணிக்கிட்டுப் புடிச்சதுதான் இந்தக் கதை!''- நம்பிக்கையோடு பேச ஆரம்பிக்கிறார் கோவிந்தமூர்த்தி. 'பப்பாளி’ என்ற தலைப்பிலேயே நிமிர்ந்து பார்க்கவைக்கும் மூன்றாவது முயற்சிபற்றிப் பேசத் தொடங்கினார்.

''உலகத்துக்கு புதுக் கதையெல்லாம் சொல்ல வரலைங்க. சென்னையில் கையேந்திபவன் வெச்சிருக்கிற ஒரு அப்பாவோட பையன், படிச்சு ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆக ஆசைப்படுறான். ஆனா, அந்த அப்பாவோ, 'நான்தான் கடைசி வரை பிளாட்ஃபாரக் கடைலயே வாழ்ந்துட்டேன். என் பையனாச்சும் சரவணபவன் ரேஞ்சுக்கு ஒரு பெரிய ஹோட்டல் முதலாளி ஆகணும்’னு ஆசைப்படுறார். இதுக்கு இடையில் தவிர்க்க முடியாம, ஒரு காதல். கடைசியில், அவன் ஐ.ஏ.எஸ். ஆனானா... ஹோட்டல் வெச்சா னானு படம் முடியும். மொத்தத்துல பதினஞ்சு நிமிஷம் மட்டும் படம் சீரியஸா இருக்கும். மத்தபடி காமெடி... காமெடி மட்டும்தான்!''

காதல் ஒரு கல்தோசை!

''இரண்டரை வருஷத்துக்கு அப்புறம் படம் பண்றீங்க. டாபிக்கல் சப்ஜெக்ட் எதுவும் எடுக்கலையா?''

''நம்ம எல்லார் குடும்பத்துலயும் காலங்காலமா நடக்கிற விஷயம்தான் இது. தாத்தாவின் நிறைவேறாத ஆசை, அப்பா மேல விழும். அப்பாவின் லட்சியங்கள், மகன்கள் மேல் திணிக்கப்படும். இது தினமும் யாருக்கோ, எங்கேயோ நடந்துட்டே இருக்கும். அதனால இந்த சப்ஜெக்ட் எப்பவும் டாபிக்கல்தான். பையனின் பேருக் குப் பின்னால் கல்யாணப் பத்திரிகையில் போடணு மேனு கடனுக்குப் படிக்கவெச்சுட்டு, அப்புறம் தன் கடைக் கல்லாவிலேயே உட்காரவைக்கிற அப்பாக்கள்தான் இங்கே நிறைய. பையனின் ஆசையையும் அப்பாக்கள் காது கொடுத்துக் கேட்கணும். திட்டும்போதுகூட பாசிட்டிவாத் திட்டணும். இதுதான் படத்தின் மெசேஜ்!''

''உங்க முதல் இரண்டு படங்களின் பெரிய பலம் வடிவேலுதான். ஆனால், இப்போ அவர் இல்லாம வர்றீங்களே?''

''பெரிய வருத்தம்தான். அதுக்காகத்தான் சிங்கம் புலி, ஜெகன், இளவரசுனு நிறைய பேரை வெச்சிருக்கோம். ஹீரோ சரவணன் தொடங்கி, ஹீரோயின் அம்மா சரண்யா வரைக்கும் எல்லோரும் இந்தப் படத்தில் காமெடியன்தான். ஜெகன், ஒரு வீட்டுப் புரோக்கர்; சிங்கம் புலி, ஏரியா கவுன்சிலர். எல்லோருமே அவங்கங்க தொழிலைச் சம்பந்தப்படுத்தியேதான் வசனம் பேசுவாங்க.

'காதல்ங்கிறது கல் தோசை மாதிரி. ரெண்டு பக்கமும் நல்லா வெந்தாத்தான் சாப்பிட முடியும்’ - இது கையேந்தி பவன் சரவணன்.

காதல் ஒரு கல்தோசை!
காதல் ஒரு கல்தோசை!

'காதலி, வாடகை வீடு மாதிரி. எப்போ வேணாலும் மாத்திக்கலாம். ஆனா மனைவி, சொந்த வீடு மாதிரி. ஒரு தடவை குடியேறிட்டா, வேற வழியே இல்லை!’ - இது வீட்டு புரோக்கர் ஜெகன்.

'அரசியல் கட்சியோட கொள்கையும் காதலி போடுற கண்டிஷனும் ஒண்ணு. அதை நாம ஃபாலோ பண்ணலைன்னாதான், நடக்க வேண்டியது நடக்கும்!’ - இது கவுன்சிலர் சிங்கம் புலி.

இப்படிப் படம் முழுக்கக் காமெடி வசனம் களை கட்டும். அதுக்கு 'பப்பாளி’ டீம் கியாரன்ட்டி!'' - கண்கள் மின்னச் சிரிக்கிறார் கோவிந்தமூர்த்தி.