Published:Updated:

தீயா வேலைசெய்யணும் குமாரு - சினிமா விமர்சனம்

தீயா வேலைசெய்யணும் குமாரு - சினிமா விமர்சனம்

##~##

டங்காத பொண்ணை மடக்க... கோல்மால், தகிடுதத்தம், தில்லாலங்கடி எனத் 'தீயாக வேலை செய்யும் குமாரின்’ கதை!

'காதல் போற்றுதும்’ குடும்பத்தில் பிறந்த சித்தார்த்துக்கு, ஹன்சிகா மீது காதல். ஆனால், செம மேன்லி கணேஷ் வெங்கட்ராமன் அந்தக் காதலுக்குக் குறுக்கே நிற்கிறார். காதல் ஐடியாக்களைக் கட்டணச் சேவையாகக் கொடுக்கும் 'மோக்கியா’ சந்தானத்தின் உதவியுடன், ஹன்சி காவை கரெக்ட் செய்கிறார் சித்தார்த். சித்தார்த் கரெக்ட் செய்திருப்பது தன் தங்கச்சி ஹன்சிகாவை என்று  தெரிந்துகொண்டதும், அந்தக் காதலைப் பிரிக்க வில்லன் அவதாரம் எடுக்கிறார்

சந்தானம். அதன் பின்னும் அதிரடி காமெடிக் கச்சேரி!

அட... வழக்கமான சுந்தர்.சி படங்களைப் போல் இல்லாமல் ஸ்டைல் ப்ளஸ் ட்ரெண்டியாக வசீகரிக்கிறது படம். புதிய டீம் வொர்க்குக்கு வாழ்த்துகள். காமெடிப் படத்தில் ஏது லாஜிக்? அந்த ஒரு லாஜிக்கைப் பிடித்துக்கொண்டே காமெடியில் அடிபின்னி எடுத்திருக்கிறார்கள்.  

'அப்பாவி’யாக அறிமுகம் ஆகி 'அடப்பாவி’ என்று சொல்லவைக்கிறார் சித்தார்த். பளபள பெர்சனாலிட்டிகளின் முன் தாக்குப்பிடிக்க முடியாமல் தடுமாறுவதாகட்டும், பின் கிடைத்த இடைவேளையில் ஹன்சிகா மனதில் இடம் பிடிப்பதாகட்டும்... செம வெரைட்டி. வாவ்... செம ஸ்லிம் ஹன்சிகா... காஸ்ட்யூமர் குஷ்புவின் கைவண்ணத்தில் ரசிகர்கள் 'ஜொள்ளி’க்கொள்ளும் அளவு அழகு ஹன்சி.

தீயா வேலைசெய்யணும் குமாரு - சினிமா விமர்சனம்

அஸ் யூஷ்வல்... 'சினி’ தர்மத்தின்படி படத்தின் ஹீரோ சந்தானம்தான். பாவாடை - தாவணி, கல்யாண வீடு, மாமன்-மச்சான் காமெடிகளில் இருந்து ஆப்பிள், ஆரக்கிள் என்று ஐ.டி. டிரெண் டுக்கு அப்டேட் ஆகியிருக்கிறார். ஐடியா கொடுத்த ஸ்பாட்டிலேயே கிரெடிட் கார்டைத் தேய்ப்பதும், சித்தார்த்துக்குப் பயிற்சிகள் முடிந் ததும் நீதி போதனைகள் சொல்வதுமாக லைக்ஸ் அண்ட் கமென்ட்ஸ் அள்ளுகிறார் சாண்டல். சிவப்பு விளக்குப் பகுதியில் சந்தானமும் மனோபாலாவும் சேர்ந்து அடிப்பதெல்லாம்... செம கூத்து!

'காலைல தென்னங்கன்றை நட்டுவெச்சிட் டுச் சாயந்தரமே சட்னி கேட்டா எப்படிடா?’, 'இது வீடு இல்லை... விக்ரமன் சார் படம்’... இப்படிப் படம் முழுக்கச் சிரிப்பு வெடி கொளுத்துகிறது நலன், ஸ்ரீநி மற்றும் வேங்கட் ராகவன் கூட்டணி. சத்யாவின் இசையில் 'அழகென்றால் அவள்தானா...’, 'என்ன பேச வந்தேன்...’ இரண்டு மட்டும் மனதில் பதியும் ரகம்.

சித்தார்த், கெட்ட பையன். கணேஷ் வெங்கட்ராம், ஜென்டில்மேன் என்று தெரிந்த பின்னரும், ஹன்சிகா சித்தார்த்தைக் காதலிப்பது... எப்படி குமாரு? தீயாக வேலை செய்ததில், கொளுத்திட்டே குமாரு!

- விகடன் விமர்சனக் குழு

தீயா வேலை செய்யணும் குமாரு - சினிமா விமர்சனம் - வீடியோ வடிவில்...