Published:Updated:

தில்லுமுல்லு - சினிமா விமர்சனம்

தில்லுமுல்லு - சினிமா விமர்சனம்

##~##

மீசைக்குப் பதில் பூனைக் கண், காந்திக்குப் பதில் முருகன், பாட்டு கிளாஸுக்குப் பதில் கராத்தே... பழைய தஞ்சாவூர் தாம்பாளத்தில் புதிய பீட்ஸா. செம 'தில்லுமுல்லு’ ரீமேக் செய்திருக்கிறார் இயக்குநர் பத்ரி.

சிவா எந்த இடத்திலும் ரஜினியை இமிடேட் செய்யாதது பெரிய ஆறுதல். 'பசுபதி’ என்ற தன் பெயருக்கு சிவா பெயர்க் காரணம் சொல்லும் இடத்திலேயே அவரது காமெடி கவுன்ட் டவுன் ஆரம்பம். மேஜை டிராயரை இழுப்பது, பெட்ஷீட்டைப் போர்த்துவது என சின்னச் சின்ன வேலைகள் மூலம் இஷாவுக்குக் கராத்தே சொல்லித்தருவதும், கராத்தே மாஸ்டர் கங்குலி சைனீஸ் மொழியில் ராஜினாமா கடிதம் கொடுப்பதும், சைனீஸ் பாடல்களை ரிங்டோனாக வைத்திருப்பதுமாக... கலகலக்கவைக்கிறார் சிவா.

'ஹெலிகாப்டர் ஷாட் எப்படி இருந்துச்சு?’ என்று கொதிப்பதும், கோவை சரளாவைப் பார்த்ததும் விருது கிடைத்த சந்தோஷத்தில் நெகிழ்வதும், 'வளர்ந்த பின்னாடி கேக்ல முட்டை போடுவாங்கன்னு தெரியும். குழந்தையா இருக்கும்போதே எப்படித் தெரிஞ்சுக் கிட்டே?’ என்று வெவ்வேறு சிச்சுவேஷன்களில் வியந்து கேட்பதுமாகப் பின்னுகிறார் பிரகாஷ்ராஜ்.

இஷா... அழகு. மற்றபடி... நெக்ஸ்ட்!

ஒரிஜினலில் ரஜினியை மிரட்டிப் பணம் பறிக்கும் சிறுவன் கேரக்டருக்குப் பதிலாக, சிவாவின் தங்கை யைக் காதலிக்கும் சூரி பாத்திரம். கவாஸ்கர் முதல் சசிகுமார் வரை நண்பனின் தங்கையைக் காதலிக்கும் காதலன் கதைகளாக சூரி நீட்டி முழக்குவது... செம லந்து!

தில்லுமுல்லு - சினிமா விமர்சனம்

க்ளைமாக்ஸில் சந்தானம் வரும் 15 நிமிடங்கள் 20-20 பவர் ப்ளேயில் கிறிஸ் கெயிலின் ருத்ரதாண்டவம். பிரகாஷ்ராஜை 'ஆங்ரி பேர்டு மூக்கன்’ என்பது, தனக்குப் பதிலாக டூப்பை ஓடச் சொல்வது, 'அவனுங்களுக்கு வேட்டி- சட்டை போட்டிருந்தாப் போதும்’ என்றபடி சர்க்கரைப் பொங்கல் சாப்பிடுவது, 'வாராவாரம் டி.வி-ல தில்லுமுல்லு படத்தைப் போடுறாங்க. அதைப் பார்த்துட்டும் இப்படி ஏமாந்திருக்கானே?’ என்று பிரகாஷ்ராஜை வாருவதுமாக சிரிக்கக்கூட இடைவெளிவிடாமல் சலம்பித் தள்ளுகிறார் மனுஷன்.

எம்.எஸ்.விஸ்வநாதன் - யுவன்ஷங்கர் ராஜா கூட்டணியில் 'தில்லுமுல்லு தில்லுமுல்லு...’,  'ராகங்கள் பதினாறு’ பாடல்கள் இனிப்பு. 'ஏம்மா... எதை எதையோ பார்த்துக் காதலிக்கிறீங்க... மூஞ்சியைப் பார்த்துக் காதலிக்க மாட்டீங்களா?’, 'டேய்... உனக்கு துபாய் சென்ட் வாங்கிட்டு வந்திருக்கேன். நீ இங்கே இருந்து கௌம்பு’, 'கராத்தே ஒண்ணும் தண்ணியை வடிகட்டுற பிசினஸ் ஒண்ணும் இல்லை!’ பாலாஜி, ரமேஷ் வைத்யாவின் வசனங்கள் படம் முழுக்கப் படீர் காமெடி வெடிக்கிறது.

'இந்திரன் - சந்திரன்’ பாத்திரங்களை வித்தியாசப்படுத்த ஒட்டு மீசை போகவும் ரஜினி எவ்வளவு மெனக்கெட்டிருப்பார்? ரஜினி-மாதவி இடையிலான காதலில் எவ்வளவு ஈர்ப்பு இருக்கும்? கடைசி வரை வழிக்கு வராத தேங்காய் சீனிவாசனை எவ்வளவு பிரயத்தனங்களுக்குப் பிறகு மடக்குவார்கள்? இப்படியெல்லாம் ஒப்பிட்டு ஏங்கி ஏமாற மாட்டீர்கள் என்றால், இந்த 'தில்லுமுல்லு’ கொஞ்சம் ஜாலி கண்ணு!

- விகடன் விமர்சனக் குழு