Published:Updated:

அன்னக்கொடி - சினிமா விமர்சனம்

அன்னக்கொடி - சினிமா விமர்சனம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

##~##

மின்வெட்டு அல்ல... மின்சாரமே இல்லாத காலத்துக் கதை.

ஜாக்கெட் அணியாமல், செருப்பு அணியாமல் ஆடு மேய்க்கும் கார்த்திகாவுக்கும் லக்ஷ்மணுக்கும் காதல். சாதி இருவரையும் பிரிக்க, அம்மா வாங்கிய கடனுக்காக மைனர் ஷோக்கு மனோஜைக் கல்யாணம் செய்துகொள்கிறார் கார்த்திகா. ஆனால், அவர் 'ஃபியூஸ்’ போன பார்ட்டி என்பது தெரியவருகிறது. நடுவில், கார்த்திகாவின் மாமனார் வேறு 'இன்ப வெறி’யோடு அலைய... கார்த்திகா இறுதியில் என்ன முடிவெடுக்கிறார் என்பதே வதை... ஸாரி கதை!

(நமது யூகப்படி) 50 வருடங்களுக்கு முன் நடக்கும் கதை, 50 வருடங்களுக்கு முன் வர வேண்டிய திரைப்படம்போலவே இருக்கிறதே? அதிலும் முக்கால்வாசிப் படம் வரை வரும் அந்த ஒற்றைச் செருப்பு... முடியலை முதலாளி!

அறிமுக லக்ஷ்மண், பாரதிராஜா சொன்னதை அப்படியே செய்திருக்கிறார். என்ன, அவரது அழுகைக்கும் சிரிப்புக்கும் ஆறு ஒற்றுமைகளே இருப்பதால், என்ன ரியாக்ஷன் என்று கண்டுபிடிக்கச் சிரமப்பட வேண்டியிருக்கிறது.

அன்னக்கொடி - சினிமா விமர்சனம்

இத்தனை சின்ன வயதில் மொத்தப் படத்தையும் தன் 'முதுகில்’ தாங்கியிருக்கிறார் கார்த்திகா. ரவிக்கை இல்லாமல் ஒரு சமயம் முழு முதுகையும் காட்டி கிராமத்துக் கதையைக் கில்மா கதையாக மாற்றியிருக்கிறார். காதல் கை கூடாமல், கணவனின் சந்தேகத்துக்கு இரையாகும்போது, அந்த கிராமத்துக் குயிலின் 'த்ரெட்டிங்’ கண்களே பாதி நடித்துவிடுகிறது!

ஏக பில்டப் கொடுக்கப்பட்ட கேரக்டரில் மனோஜ்.  வட்டிக்குக் கடன் கொடுத்து ஊரையே கிடுகிடுக்கச் செய்யும் அவரது 'சடையன்’ கேரக்டர் ஒட்டுமீசையெல்லாம் வைத்துக் கொண்டு... செம்ம்ம்ம காமெடி. இயலாதவருக்கு ஏன் இத்தனை பொம்பளை ஷோக்கு?

ஊரில் பாட்டிகளெல்லாம் ரவிக்கை அணிந்திருக்க, கார்த்திகாவும் மீனாளும் மட்டும் 'காத்தோட்டமாக’ நடமாடுவது ஏன் முதலாளி? அதிலும் க்ளைமாக்ஸில் மனோஜ் தனக்குத்தானே 'ஆப்பு’ வைத்துக்கொள்ளும் அந்தக் காட்சி... அடேங்கப்பா! எந்த அறிவியல் விதிக்கும் கட்டுப்படாத வன்முறை மிராக்கிள்!

'எல்லாத்தையும் மேல இருக்குற பாரதிராஜா சார் பார்த்துப்பாரு’ என்று அனைவரும் நினைத்துவிட்டார்கள்போல! இசை, ஒளிப்பதிவு, எடிட்டிங் அனைத்தும் 'என்னமோ ஏதோ’ என்று கடக்கிறது. ஊருக்கு நடுவில் பெண் கேட்டு வந்த நாயகனையும், அவனது அப்பாவையும் மரத்தில் கட்டிவைத்து அடித்துச் சாணி ஊற்றுகிற ஒரு இடத்தில் மட்டும் 'பழைய’ பாரதி ராஜா டச். மற்றபடி 'எ ஃபிலிம் பை பாரதிராஜா’ என்று நம்பிப் போனால், பங்காளி... ரெண்டு மணி நேரமும் தக்காளிச் சட்னி!

- விகடன் விமர்சனக் குழு

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு