சினிமா
Published:Updated:

“ஒரு ரொமான்டிக் ஃபிலிம் எடுக்கணும்!”

'அட’ ராம்கோபால் வர்மா எம்.குணா, படம்: பா.கார்த்தி

##~##

ந்திய சினிமாவின் பரபரப்பு இயக்குநர்.... ராம்கோபால் வர்மா! மும்பை தாஜ் ஹோட்டல் தீவிரவாதிகள் தாக்குதல், ஆந்திராவின் சாதிக் கலவரம் என்று இந்தியா வின் கறுப்புப் பக்கங்களை செல்லு லாய்டில் பதிவுசெய்பவர், நீண்ட இடைவேளைக் குப் பின்னர், தமிழில் 'நான்தாண்டா’ என்ற படத்தை  இயக்குகிறார்.  

''யாரிடமும் உதவி இயக்குநராகப் பணிபுரியாமல் இவ்வளவு உயரத்தைத் தொட்டது எப்படி?''

''உலகின் முதல் சினிமா எடுத்த இயக்குநர் யாரிடமும் அசிஸ்டென்ட் ஆக வேலை பார்த்தது இல்லையே! ஆர்வமும் முயற்சியும்தான் என்னை இயக்குநர் ஆக்கியது. எல்லோரும் ஸ்கூல் பிரேயர் வரிசையில் நிற்கும்போது, நான் தியேட்டர் டிக்கெட் கவுன்ட்டர் வரிசையில் நின்றேன். என்னை இயக்குநராக்கியது என் நண்பர்கள்தான். புதுப் படங்களைப் பார்த்துவிட்டு வந்து என் ஸ்டை லில் நண்பர்களுக்கு அந்தக் கதையைச் சொல்வேன். சொல்லும்போதே நடு நடுவில் மியூஸிக் வாசிப்பேன். சண்டைக் காட்சிகளின்போது நானே ஸ்டன்ட் பண்ணுவேன். அதே ஆர்வத்துடன் தியேட்டரில் அந்தப் படத்தைப் பார்த்த நண்பர்கள், 'நீ சொன்னப்ப கதை கேட்க நல்லா இருந்துச்சு. ஆனா, படம் பார்க்கிறப்ப நல்லாவே இல்லை’ என்று சொன்னார்கள். அப்படி எனக்குள் கதை சொல்லும் திறன் இருக்கு என்பதை என் நண்பர் கள்தான் கண்டுபிடிச்சாங்க. தைரியம் கொடுத் தாங்க. சினிமாவுக்கு அனுப்பிவைச்சாங்க!''

“ஒரு ரொமான்டிக் ஃபிலிம் எடுக்கணும்!”

''அப்போ மானசீகக் குருவாகக்கூட நீங்கள் யாரையும் நினைப்பது இல்லையா?''

''தெலுங்கில், சொல்லிக்கொள்ளும் மாதிரி ஒருத்தரும் இல்லை. தமிழ் சினிமாவில் ஸ்ரீதர், பாலசந்தர், மகேந்திரன் இயக்கிய படங்கள் என் மனதில் பாதிப்பு ஏற்படுத்தியிருக்கு!''

''எப்போதும் இந்தி, தெலுங்கில் படங்களை இயக்கும் நீங்கள், திடீரென்று நேரடித் தமிழ் படம் இயக்குவது ஏன்?''  

''1989-ல் என் முதல் படமான 'சிவா’வின்  ப்ரிவியூ ஷோவில் சதீஷைச் சந்திச்சேன். அப்போ சதீஷிடம் ஆரம்பிச்ச நட்பு, இப்போ வரை  ஆரோக்கியமா இருக்கு. திடீர்னு ஒருநாள், 'நீங்க இயக்கும் படத்தை நான் தயாரிக்கணும்’னு சொன்னார். அப்போ நான் சொன்ன கதைதான் 'நான்தாண்டா’. சென்னை... பல ஊர் ரவுடிகளின் சங்கமம். அங்கே எல்லாரையும் தூக்கிச் சாப்பிடுற ஒரு ரவுடிதான் படத்தோட ஹீரோ. பொதுவா ரவுடிகள் தலைமறைவாகத்தான் கிரிமினல் வேலை பார்ப்பாங்க.  ஆனா, படத்தில் ஹீரோ சர்வானந்த் ஒரு நிறுவனம் ஆரம்பிச்சு, கிரிமினல்களிடம் பணம் பறிக்கிற எத்தனுக்கு எத்தனா இருப்பார்.  சுருக்கமா, இது ரத்தமய ரணகளக் கதை!''

“ஒரு ரொமான்டிக் ஃபிலிம் எடுக்கணும்!”

''தமிழ் சினிமாவைக் கவனிக்கிறீங்களா?''

''இந்தி, தெலுங்கு சினிமாக்கள் ரெண்டுமே, தங்களுக்குன்னு ஒரு ரூட் பிடிச்சு அதிலே ஸ்டெடியா போய்க்கிட்டு இருக்கு. ஆனா, தமிழ் சினிமா வுக்கு அப்படி எந்த ஃபார்முலாவும் இல்லை. அதுதான் தமிழ் சினிமாவின் பலம். விதவிதமான ஐடியாக்கள், வித்தியாசமான ஏரியாக்கள்னு ஒவ்வொரு தமிழ் சினிமாவும் ஆச்சர்யப்படுத்துது!''

''இன்னமும் யுத்த ரத்தம், ஆக்ரோஷ சத்தம்னு வன்முறை சினிமாக்களையே இயக்குகிறீர்கள்... வேற சினிமா எடுக்கும் ஐடியாவே இல்லையா?''

''உண்மைதான். எனக்கும் அந்த சலிப்பு எப்பவோ வந்திருச்சு. எனக்கும் ஒரு மாற்றம் தேவைப்படுது. 'ரங்கீலா’ படத்துக்குப் பிறகு, லவ் சப்ஜெக்ட் எடுத்தே ரொம்ப வருஷமாச்சு. ஒரு ஸ்க்ரிப்ட் ரெடி பண்ணிட்டு இருக்கேன். சீக்கிரமே அந்தப் படத்தை இயக்குவேன்!''

''இந்த அந்தஸ்துக்குப் பிறகும் புது முகங்களை, இளம் நடிகர்களை வெச்சுத்தான் பெரும்பாலும் படம் பண்றீங்க... ஏன்?''

''நான் ஸ்டார்களை நினைச்சுக் கதைப் பண்றது இல்லை. என் கதைக்கு யார் நடிச்சா பொருத்தமா இருக்கோ, அவங்களை நடிக்கவைக்கிறேன். அதனால, பெரிய ஹீரோக்கள் யாரும் என்னைத் தேடி வந்தது இல்லை; நானும் அவங்களைத் தேடி போய் நின்னதும் இல்லை!''