சினிமா
Published:Updated:

ஆர்யாவை அழ வைத்த அஜித்!

ஆரம்பம் ரகசியம்க.ராஜீவ் காந்தி

##~##

'மாஸ் ஓப்பனிங்’... அஜித் ஸ்பெஷல். ஆனால், அவர் நடிக்கும் படத்துக்குத் தலைப்பு பிடிப்பதையே மாஸ் கொண்டாட்டம் ஆக்கிவிட்டது 'ஆரம்பம்’ டீம்!  

''உங்க நெஞ்சைத் தொட்டுச் சொல்லுங்க... ஒரு படத்துக்கு டைட்டில் வைக்கிறதுக்கே ஒரு வருஷ பில்டப்... ரொம்ப டூமச்தானே?'' என்று படத்தின் இயக்குநர் விஷ்ணுவர்தனிடம் கேட்டேன்.

''அட... பில்டப் கொடுக்கணும்னு நாங்க எதுவுமே பிளான் பண்ணலைங்க. ஷூட்டிங் முடிச்சுட்டு நல்ல டைட்டில் பிடிச்சுக்கலாம்னு இருந்தோம். ஆனா, அதுக்குள்ளே 'வலை, தல’னு அஜித் ரசிகர்களே ஆளாளுக்கு பேர்வைக்க ஆரம் பிச்சுட்டாங்க.  தினமும் கிளம்பும் ஒவ்வொரு புதுத் தலைப்பையும்மறுக்கிறதுக்குப் பதிலா, உடனே ஒரு டைட்டில் ஃபிக்ஸ் பண்ணிரலாம்னுதான் பேர் வெச்சிட்டோம்!''

''இவ்ளோ ஹைப்புக்கு அப்புறம் அது என்ன... 'ஆரம்பம்’?''

''அஜித் சார் படத்தில் ஒரு விஷயத்தை ஆரம்பிப்பார். அது ஒரு பெரிய போராட் டத்துக்கான ஆரம்பப் புள்ளி. அந்த ஆரம்பம்தான் மொத்தப் படத்தையும் நகர்த்திட்டுப் போகும். முதலில் கதைக்கு சம்பந்தம் இல்லாத, இன்னும் மாஸா இருக்கிற வேற டைட் டில்தான் சாய்ஸ் வெச்சேன். ஆனா, அஜித் சார் அப்படி டைட்டில் வைக்க வேண் டாம்னுட்டார். கதைக்கும் படத்துக்கும் பொருத்தமான டைட்டில்தான் இருக்கணும். பில்டப் கொடுத்து ரசிகர்களை ஏமாத்த வேணாம்னு சொல்லிட்டார். அதான் 'ஆரம்பம்’!''

ஆர்யாவை அழ வைத்த அஜித்!

''படத்தில் அஜித்துக்கு போலீஸ் ஆபீஸர் வேடம். ஒரு கொலையைப் பற்றி வரும் ஒரு இமெயிலைத் தொடரும் விசாரணைகள் நாட்டையே உலுக்கும். அந்த வழக்கை பெரிய போராட்டங்களுக்கு மத்தியில் சக்சஸ் பண்றார் அஜித். இதுதான் படத்தின் கதைனு சொல்றாங்களே... உண்மையா?''

(சின்னதாக ஜெர்க் ஆகிறார்) ''சார்... டைட்டில் தவிர வேற எதுவும் நான் சொல்லலை. மத்த எல்லா விஷயத்தையும் படத்தில் பார்த்துக்கங்க. அஜித்தின் மாஸுக்கும் அவரோட கேஷ§வல் லுக்குக்கும் செமத்தியா வேலை வைக்கிற மாதிரி படம் இருக்கணும்னு தேடித் தேடி கதையும், உக்காந்து பேசிப் பேசி சீன்களும் பிடிச்சிருக்கோம். எல்லாமே அட்டகாசமா அமைஞ்சிருக்கு. அதுக்கு மேல எதுவும் கேட்காதீங்க!''

''அஜித்-ஆர்யா-நயன்தாரா-டாப்ஸி... வம்படியா மல்ட்டி ஸ்டார் காம்பினேஷன் பிடிச்சீங்களா?''

''அஜித் சார் கேரக்டருக்கு சமமா ஒரு கேரக்டர் வேணும்னு யோசிச்சப்ப, ஆர்யாதான் என் மனசுல வந்தான். அஜித் சாரோட வேலை பார்க்கிறது சந்தோஷமா இருக்கும். ஆர்யாவோட வேலை பார்க்கிறது கொண்டாட்டமா இருக்கும். அந்த ரெண்டு அனுபவங்களும் எனக்கு இந்த ஒரே படத்தில் கிடைச்சிருக்கு. அப்புறம் அடுத்தடுத்த கேரக்டர்கள் யோசிச்சப்ப, நயன்தாரா, டாப்ஸி, அதுல் குல்கர்னி, மகேஷ்னு பெரிய டீம் அமைஞ்சது. இப்போ யோசிச்சாதான், திட்டமிட்டதைவிட படம் ரொம்பப்  பெரிய கேன்வாஸ்ல வந்து நிக்குதுன்னு புரியுது!

அஜித் சார், 'அசோகா’ நடிச்ச சமயத்துல இருந்து எனக்குப் பழக்கம். இப்போ ரெண்டு பேரும் மனசு விட்டுப் பேசிக்கிற அளவுக்கு ஃப்ரெண்ட்ஸ் ஆகிட்டோம். ஆர்யா எனக்கு 'வாடா போடா’ மச்சான். அவன்கூட நாலு படம் பண்ணிட்டேன். ஆனா, இப்போ புதுசா அவன் நடிக்க என்னென்னவோ முயற்சி பண்றான்கிறது எனக்கு ஆச்சர்யமா இருக்கு. எல்லாரையும் சகட்டுமேனிக்குக் கலாய்க்கிற ஆர்யா பயப்படுற ஒரே ஆள்... 'தல’தான். ஏன்னா ஷாட்டுக்கு முன்னாடியும் பின்னாடியும் அவனை அந்த அளவுக்கு அஜித் சார் கலாய்ச்சிடுவார். அவர், அவனைக் கிண்டல் பண்ற எதையுமே வெளியே சொல்லமுடியாது. அந்த அளவுக்கு அவனை ஓட்டி எடுத்துருவார். 'என்ன மச்சான்... இப்படிக் கலாய்க்குறாரு’னு என்கிட்ட பல சமயம் அழாத குறையா வந்து புலம்புவான். நான் அவனுக்கு ஆறுதல் சொல்லித் தேத்துவேன். செம சேட்டை காம்பினேஷன்!''

ஆர்யாவை அழ வைத்த அஜித்!

'' 'மங்காத்தா’வில் அஜித்தின் சால்ட் பெப்பர் லுக்  ஹிட் சென்ட்டிமென்ட்டை இந்தப் படத்திலும் ஃபாலோ பண்றீங்களா?''

''மங்காத்தாவுக்கு முன்னாடி இருந்தே அவர்கிட்ட, 'நீங்க மேக்கப்னு எதுவுமே பண்ண வேண்டாம். அப்படியே வாங்க சார் போதும்’னு சொல்லிட்டு இருப்பேன். அதுதான் 'மங்காத்தா’வுல பெரிய ரீச் ஆனது. இன்னொரு விஷயம், அந்த கெட்டப் அவருக்கு செம ஸ்டைலா இருக்கும். அது எல்லாருக்கும் அமையாது. அதை ஏன் நாங்க மிஸ் பண்ணணும்?''

ஆர்யாவை அழ வைத்த அஜித்!

''சமீபத்திய படங்கள் பார்க்கிறீங்களா? மாஸ் ஹீரோ, பில்டப் ஓப்பனிங், நாலு பாட்டு, அஞ்சு ஃபைட்டு இல்லாமலே சின்னப் பசங்க பெரிய மரியாதையும் கலெக்ஷனும் அள்ளுறாங்களே!''

'' 'சூது கவ்வும்’ பார்த்தேன்...  ஹாட்ஸ் ஆஃப் பசங்களா!  சினிமா ஒரு பொழுதுபோக்கு ஊடகம். இதில் ஏன் நீங்க சமூக மாற்றங்களை எதிர்பார்க்கிறீங்க? ஊர்ல, உலகத்துல அவ்ளோ கிரிமினல்ஸ் இருக்காங்க. உங்க பக்கத்துலயே எவ்வளவோ தப்புநடக்குது... அதை எல்லாம் தட்டிக்கேக்காம, சினிமா ஹீரோ மட்டும் நல்லவனா இருக்கணும்னு ஏன் ஆசைப்படுறீங்க?  இத்தனைக்கும் என் படங்கள்ல கத்தி எடுத்தவன் கத்தியால சாகுற மாதிரிதான் க்ளைமாக்ஸ் வைப்பேன். இங்கே எல்லாருக்குமே ஒரு டார்க் சைடு இருக்கு. யாருமே இங்கே புத்தன், காந்தி கிடையாது. எல்லாருக்கும் உள்ளே ஓர் அரக்கன் இருக்கான். ஆனாலும் கெட்டது எப்பவுமே ஜெயிக்காது. அந்த மெசேஜ் நிச்சயம் ஏதோ ஒரு வகையில் பாஸ் ஆகிரும்.

அதுவும் அஜித் சாருக்கு இமேஜ் பத்தி கவலையே இல்லை. இந்தப் படத்துல அவருக்கு இமேஜ் பில்டப் பண்ற மாதிரி எந்த விஷயமும் இருக்காது. ஹீரோயினைக் காதலிச்சுட்டு, நாலு பேரை அடிச்சு உதைச்சுட்டு நடுவுல கொஞ்சம் நாட்டையும் காப்பாத்திட்டு...  இது எதுவும் 'ஆரம்பம்’ல இல்லை. சொல்லப்போனா, அஜித் சார் போன்ற மாஸ் ஹீரோக்களும் இப்படியான படங்கள்ல நடிக்கலாம்கிற டிரெண்டுக்கு இந்தப் படம் ஒரு ஆரம்பமா இருக்கும்!''