Published:Updated:

ஒரு அப்பாவின் சினிமா கனவு!

பாரதி தம்பி, படங்கள்: வீ.சக்தி அருணகிரி

##~##

ண்முகத்துக்கு 65 வயது.கொடைக்கானல் அருகே உள்ள தாண்டிக்குடி என்னும் மலைக் கிராமத்து விவசாயி. இரண்டு மகன்கள். ஒரு மகள். மூத்த மகன் ஜெயபாரத், புனே யில் கால்நடை மருத்துவக் கல்லூரியில் பணிபுரிகிறார். குதிரைகளுக்குப் பிரசவம் பார்ப்ப தில், இந்தியாவின் முன்னோடி மருத்துவர்களில் ஒருவர். பொறியியல் படித்த இரண்டாவது மகன் ஜெயசுந்தர்ராஜன், இந்திய விமானத் துறையில் பணியில் சேர்ந்தார். மகள் பிரியாவின் விருப்பம், பேஸ்கட் பால் பிளேயராவது.அதே போல் அவரை விளையாட்டு வீராங்கனையாக உருவாக்கினார் அந்த அப்பா.

ஒரு விடுமுறை நாளில் அனை வரும்  புனேயில் ஒன்றுசேர்ந்தனர். பிள்ளைகள் மூவரும், ''நாங்க ஆசைப்பட்ட மாதிரியே எங்களை உருவாக் கிட்டீங்க. ரொம்ப நன்றிப்பா'' என் றார்கள் நெகிழ்ச்சியோடு. அப்போது அவர்களின் அம்மா சொன்னார், ''உங்கஆசை நிறைவேறிடுச்சு.ஆனா, அவர் ஆசை இன்னும் நிறைவேறலையே'' என்று.

அந்த வயதில் அப்பாவுக்கு அப்படி என்ன ஆசை?

நடிக்க வேண்டும்! எப்படியாவது திரையில் தன் உருவத்தைப் பார்க்க வேண்டும். இளமையில் இருந்து சண்முகத்தை ஆட்டிப் படைத்துவரும் ஆசை அது. தங்களை, தங்கள் விருப்பப்படி ஆளாக்கிய தந்தையின் கனவை நிறைவேற்ற முடிவுசெய்தார்கள் அந்தப் பிள்ளைகள். விமானத் துறையில் பணிபுரிந்த ஜெயசுந்தர்ராஜன் தன் வேலையை ராஜினாமா செய்துவிட்டு தாண்டிக் குடிக்கு வந்தார். ''விவசாயத்தை நான் பார்த்துக் கிறேன். நீங்க சென்னைக்குப் போங்க. உங்க சினிமா கனவை நிறைவேற்ற முயற்சி செய்யுங்க!'' என்றார். 60 வயதுக்குப் பிறகு தன் வாழ்நாள் கனவை அடையும் லட்சியத்தோடு சென்னைக்கு வந்தார் அவர். பிள்ளைகள் மாதா மாதம் அவர் செலவுக்குப் பணம் அனுப்பினார்கள். ஐந்து வருடப் போராட்டத்துக்குப் பிறகு, சின்னச்சின்ன தாக சினிமாவில் தலைகாட்டத் தொடங்கியிருக் கிறார் 'தாண்டிக்குடி’ சண்முகம்.

ஒரு அப்பாவின் சினிமா கனவு!

''மக்கள் மனசுல நிற்கிற மாதிரி ஒரு கேரக்டர் செஞ்சுடணும். ஆளைப் பார்த்ததுமே 'தாண் டிக்குடி சண்முகம்’னு அடையாளம் கண்டு பிடிக்கணும். அவ்வளவுதான் என் ஆசை'' - சிறு குழந்தை போல சிரிக்கிறார் சண்முகம்.கோடம் பாக்கத்தில் அவர் தங்கியிருக்கும் வீட்டின் கதவு முகப்பில் 'வயதோ, உடல் பலமோ எனக்குத் தடையில்லை. என் லட்சியத்தை அடையும் வரை விடாமல் உழைப்பேன்’ என்ற ஸ்டிக்கர் பளிச்சிடுகிறது.

''தாண்டிக்குடியில் நாங்க ஊருக்குப் பஞ்சாயத்து செய்யும் பெரிய குடும்பம். எங்க அப்பா, ஊர் கணக்குப்பிள்ளையா இருந்தார். நான் இப்போ தாண்டிக்குடி முருகன் கோயில் நிர்வாகி. எப்படியோ சின்ன வயசுலேர்ந்து நாடகம், நடிப்புனு ஆர்வம் வந்துடுச்சு. மதுரை அமெரிக்கன் கல்லூரியில் படிச்சுட்டு இருந்தப்போ, 'ராஜமாணிக்கம் பிள்ளை நாடகக் கம்பெனி’யில் மூணு மாசம் பயிற்சி எடுத்தேன். எனக்குக் கல்யாணம் ஆன பிறகு, விவசாயத்தைப் பார்க்க வேண்டி இருந்தது!'' என்றபடி சிரிக்கிறார்.

ஒரு அப்பாவின் சினிமா கனவு!

''சினிமானு வந்தாச்சு. அதனால முதல்ல தகுதியை வளர்த்துக்குவோம்னு நடிப்புப் பயிற்சி, பாடிலாங்வேஜ் பயிற்சி, பாட்டுப் பயிற்சி எல்லாம் எடுத்துக்கிட்டேன். முதன்முதலா ஒரு நகைக் கடை விளம்பரத்துலதான் நடிச்சேன். அது எல்லா டி.வி-லயும் வந்துச்சு. எங்க ஊர் சனங்களும், என் பிள்ளைங்களும் பார்த்துட்டு சந்தோஷமாப் பேசினாங்க. பிறகு, ஒரு சீரியல்ல சித்தவைத்தியரா நடிச்சேன். 'தெனாவெட்டு’ படத்துல ஒரு காட்சியில் போஸ்ட் மாஸ்டரா வந்துட்டுப் போவேன். பிறகு 'மன்னாரு’, 'கண்டுபிடி கண்டுபிடி’ படங்கள்ல சின்னச் சின்ன ரோல் பண்ணேன்.  

ஒரு அப்பாவின் சினிமா கனவு!

ஷூட்டிங் இருக்கும் நாள் போக, மத்த நாட் கள்ல தினமும் கிளம்பி ஒரு சினிமா ஆபீஸ்போயி ருவேன். என் போட்டோ, விசிட்டிங் கார்டு களைக் கொடுத்து இயக்குநர், உதவி இயக்குநர் களைச் சந்திச்சு வாய்ப்புக் கேட்பேன். பெரும்பா லும் மரியாதைக் குறைவாத்தான் நடத்துவாங்க. வயசானவர்னுகூட பார்க்காம அவமானப்படுத்து வாங்க. 'தாண்டிக்குடிக்குள்ள நமக்கு என்ன மரியாதை இருக்கும். இங்கே இப்படிப் பண்றாங் களே’னு சில சமயங்கள்ல வருத்தமா இருக் கும்.நேத்துகூட என் மனைவி போன்ல, 'ஊரே குளிரைத் தேடி கொடைக்கானலுக்கு வருது. நீங்கஇந்தவேகாதவெயில்லமெட்ராஸ்ல கெடக்கீகளே’னு பேசுறா. என்ன செய்ய?ஆசைப் பட்டாச்சு... வந்தாச்சு. பாதியில் விடமுடியுமா?

வந்து அஞ்சு வருஷமாச்சு. பையன் அனுப்புற காசைவெச்சு வீட்டு வாடகை கொடுத்து, சாப்பிட்டுக்கிறேன். நல்ல குணச்சித்திர நடிகரா வரணும். 'மைண்ட்ல வெச்சிருக்கேன்’னு எந்த டைரக்டரும் சொல்லாத நிலை வரணும். விசிட்டிங் கார்டு கொடுக்காம என் பேரைச் சொன்னா எல்லாருக்கும் அடையாளம் தெரியணும்... அவ்வளவுதான்'' நம்பிக்கையுடன் முடிக்கிறார் 'தாண்டிக்குடி’ சண்முகம்!