ஸ்பெஷல் -1
சினிமா
Published:Updated:

“நாளை நமதே!” - முஷ்டி முறுக்கும் அஞ்சு ஹீரோக்கள்

க.ராஜீவ்காந்தி

##~##

 சிம்பு-ஹன்சிகா காதல், கனகா வதந்தி, சேரன் மகள் காதல், 'தலைவா’ படத்துக்குத் தடை  என,  தமிழ் சினிமாவைச் சுற்றியே மீடியா வெளிச்சம் படர்ந்திருக்கிறது. ஆனால், அந்த வெளிச்ச நிழலில்  பூதாகரப் பிரச்னை ஒன்றும் புகைந்துகொண்டிருக்கிறது. எந்த நேரத்திலும் வெளிச்சத்துக்கு வந்து சினிமா உலகில் பேரதிர்ச்சிகளை உண்டாக்கலாம் என்றநிலையில் இருக்கும் அந்தப் பிரச்னை... நடிகர் சங்கம் தொடர்பானது! தற்போது தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவராக இருக்கும் சரத்குமார், பொதுச் செயலாளர் ராதாரவி இருவர் மீதும் கிரிமினல் வழக்கே பாய்ச்சும் அளவுக்கு புகார்க் கணைகளைத் தொடுக்கிறார் கள்.

சென்னையில் அமைந்திருக்கும் தென்னிந்திய நடிகர் சங்க அலுவலகக் கட்டடம் மற்றும் நிலத்தின் தற்போதைய மதிப்பு, சுமார் 200 கோடி ரூபாய். சங்கத்துக்கு நிரந்தர வருமானம் அளிக்கும் முயற்சியாக, அந்த நிலத்தில் அமைந்திருக்கும் பழைய கட்டடங்களை இடித்துவிட்டு பலமாடி வணிக வளாகம், அலுவலகங்கள் மற்றும் திரை அரங்கங்களைக் கட்டத் திட்டமிட்டு இருக்கிறார்கள். இதற்காக, சென்னையின் பிரபல திரையரங்கக் குழுமத்துடன் ஒப்பந்தங்கள் போடப்பட்டு இருக்கின்றன. சுமார் ஒன்றரைக் கோடி ரூபாயை முன் பணமாகப் பெற்றுக்கொண்டு போடப்பட்ட இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டவர்கள் இருவர் மட்டுமே. அந்த இருவர் சரத்குமார் மற்றும் ராதாரவி. ஒப்பந்தம் கையெழுத்தாகி 40 நாட்களுக்குப் பிறகே, செயற்குழுவைக் கூட்டி, இந்தத் திட்டத்துக்கான அனுமதி பெற்றிருக்கிறார்கள் என்பது ஒட்டு மொத்தக் குமுறல்களில் முதன்மையான குற்றச்சாட்டு!  

“நாளை நமதே!” - முஷ்டி முறுக்கும் அஞ்சு ஹீரோக்கள்

இந்த விவகாரம் தொடர்பாக பல நடிகர்கள் ஆதங்கம் தெரிவித்தாலும், வழக்கு நீதிமன்ற நிலுவையில் இருக்கும்போது யாரும் தங்கள் அடையாளத்தை வெளிப்படுத்திக்கொள்ள விரும்பவில்லை. நடிகர் சங்க விவகாரத்தின் நீதிமன்ற நடவடிக்கைகளைக் கையாளும் அந்தச் சங்கத்தின் முன்னாள் செயற்குழு உறுப்பினர் எஸ்.முருகன், பல தகவல்களைத் தெரிவித் தாலும், பின்னணி ரகசியங்களைப் பற்றிக் கேட்டால், மௌனமா கிறார். டாப் ஸ்டார் முதல் பிராமிஸிங் ஸ்டார் வரையிலான நடிகர்களிடம் பேசிச் சேகரித்த விவரங்கள் இங்கே தொகுக் கப்பட்டு உள்ளன...  

நடிகர் சங்கம் தொடர்பான முறைகேடுகள் நீதிமன்றக் கவனத்துக்குக் கொண்டுசெல்லப்பட்டபோது, நீதிபதி சந்துரு தனது தீர்ப்பில், 'சங்கத்தில் நிர்வாகக் குளறுபடிகள் நடந்திருப்பதும், விதிகளை சரியாகப் பின்பற்றவில்லை என்பதும் அப்பட்டமாக தெரிகிறது’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.

விஜயகாந்த், நடிகர் சங்கப் பொறுப்புகளில் இருந்து வெளியேறியபோது, சங்கத்தின் கடன்களை அடைத்துவிட்டு, சுமார் 8 கோடி ரூபாயை இருப்பு நிதியாக வைத்துச் சென்றார். தொடர்ந்து நடைபெற்று வந்த உறுப்பினர் சேர்ப்பின் மூலம் மேலும் பல லட்சங்கள் கணக்கில் சேர்ந்திருக்கும்.  ஆனால், இன்று வரை சங்க இருப்பில் எவ்வளவு நிதி இருக்கிறது என்பது உள்பட முறையான வரவு - செலவு கணக்குகள் இல்லை.

தற்போது நடிகர் சங்க செயற்குழு உறுப்பினர்களாக இருப்பவர்கள் சார்லி, சின்னி ஜெயந்த், சோனா, நளினி போன்ற சிலரே. பிரபல நடிகர்களோ, சங்க நடவடிக்கைகளில் ஆர்வம் உள்ளவர்களோ செயற்குழுவில் இல்லை. 'கோடிகளில் கொழிக்கும் சினிமா துறையினர் தங்கள் சங்க நிலத்தை ஏன் தனியாருக்குத் தாரைவார்க்க வேண்டும்?’ என்ற கேள்வி எழுப்பப்படும்போது எல்லாம், ரஜினிகாந்த் கூறியதை சுட்டிக்காட்டு வாராம் சரத்குமார்.  

2009-ம் வருடம், நடிகர் சங்கம் சார்பில் 'நாடக விழா’ நடந்தது. அதில் ரஜினியும் கலந்துகொண் டார். அப்போது மேடையில் பேசிய சரத்குமார், 'சங்க நிதி செலவாகிக்கொண்டே இருக்கிறது. எனவே, சங்கத்தின் வளர்ச்சி நிதிக்காக ஸ்டார் நைட் ஒன்று நடத்தலாம். அதற்கு ரஜினியின் தேதி வேண்டும்’ என்று பேசியிருக்கிறார். அப் போது ரஜினி, 'தங்கத் தட்டில் தேங்காயை வைத்துக்கொண்டு நாம் ஏன் கஷ்டப்பட வேண்டும்? இந்த இடத்தின் மதிப்பே பல கோடி ரூபாய் இருக்கும். வங்கியில் கடன் பெற்று மியூஸிக் அகாடமி போல ஒரு கட்ட டம் கட்டி வாடகைக்கு விடலாம். அது நிரந்தர வருமானம் தருமே?’ என்று சொல்லி இருக்கிறார். இந்த வார்த்தைகளை சொல்லிச் சொல்லியே நிலத்தைத் தனியாருக்குத் தாரை வார்க்கும் தங்கள் செயல்பாடுகளை நியாயப்படுத்திப் பேசியிருக்கிறார்கள்.      

“நாளை நமதே!” - முஷ்டி முறுக்கும் அஞ்சு ஹீரோக்கள்

நடிகர் சங்கத்தில் முறைகேடுகள் நடக்கின்றன என்று பேசிக்கொண்டே இருந்தாலும், பூனைக்கு மணி கட்டியவர் விஷால்தான். ' 'விஸ்வரூபம்’ பட வெளியீடு தொடர்பான பிரச்னையில் கமலுக்கு, நடிகர் சங்கம் துணை நிற்கவில்லை’ என்று அவர் சமூக வலைதளத்தில் கருத்துசொன் னதற்கு, விளக்கம் கேட்டது நடிகர் சங்கம். அதற்கு விளக்கம் அளித்த கையோடு, சங்க முறைகேடுகள் தொடர்பாக அவர் கேள்வி எழுப்பியிருக்கிறார். முதல் குரலை விஷால் எழுப்பியவுடன் பிற நடிகர்களின் ஆதரவு நேரிடையாகவும் மறைமுகமாகவும் அவருக்குக் குவிந்தது. சூர்யா, விஷால், ஜீவா, ஜெயம் ரவி, கார்த்தி உள்ளிட்ட ஐந்து ஹீரோக்கள் இந்த விவகாரத்தைக் கையில் எடுத்து நடவடிக்கைகளை ரகசியமாக முடுக்கிவிட்டிருக்கிறார்கள். முன்னாள் நீதிபதியை நியமித்து சங்க முறைகேடுகளை விசாரிக்க வேண்டும் என்பதில் தொடங்கி, சரத்குமார், ராதாரவி இருவரும் பதவி விலக வேண்டும், இதுவரையிலான வரவு-செலவு கணக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்பது வரை சுமார் பத்துக்கும் மேற்பட்ட கோரிக்கைகளை முன்வைத்து இயங்குகிறார்கள் அந்த ஹீரோக்கள்.

இந்த சங்க மீட்பு தொடர்பான நடவடிக்கைகளின் முதல் கட்டமாக சூர்யா, கார்த்தி, நாசர், பொன்வண்ணன், சச்சு ஆகியோர் அடங்கிய குழு சரத்குமார், ராதாரவி இருவரிடமும் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறது. சரத்குமார் தரப்பு வழக்கறிஞரின் விளக்கத்துக்கு கார்த்தி ஏகத்துக்கும் எதிர்ப்பு காட்டியிருக்கிறார். இதனால் சுமுகமான முடிவு எட்டப்படாமலே  கலைந்திருக்கிறார்கள். தொடர்ந்து ரஜினிகாந்திடம் விவரத்தைச் சொல்லி ஆதரவு கேட்டிருக்கிறார்கள் அந்த இளம் ஹீரோக்கள். 'பொதுக்குழுவைக் கூட்டுங்கள். நான் வந்து கேட்கிறேன்’ என்று தைரியம் சொல்லியிருக்கிறார். கமல்ஹாசனோ, சரத்குமாருக்கு எதிராக அழுத்தமாக தன் ஆதரவை தெரிவித்திருக்கிறாராம். விஜயகாந்தின் ஆதரவும் அந்த ஐந்து ஹீரோக்கள்  வசம்தான். 'நேரடி ஆதரவு தந்தால் அதில் அரசியல் புகுந்துவிடும். மற்றபடி நான் என்ன செய்ய முடியுமோ அத்தனையும் செய்கிறேன்’ என்று ஊக்கப்படுத்தி இருக்கிறார் விஜயகாந்த்.

சரத்குமார், ராதாரவி இருவரை யும் சந்தித்து வந்த நாசரிடம் இது குறித்துப் பேசினோம். ''இது, சங்கத் துக்குள் நடக்கும் பிரச்னை என்பதால், இப்போதைக்கு எதுவும் வெளியில்சொல்ல முடியாத நிலை. இதுகுறித்து நீங்கள் பேசவேண் டியது சரத்குமாரிடமும் ராதாரவியிடமும்தான்!'' என்பதோடு முடித்துக்கொண்டார்.

சரத்குமார், ராதாரவி ஆகிய இருவரிடமும் இந்த விவகாரம் தொடர்பான விளக்கம் கேட்ட போது, ''விரைவில் சங்கத்தின் செயற்குழுக் கூட இருக்கிறது. அதில் நாங்கள் விவாதித்து ஒருமித்த முடிவு எடுப்போம். இந்த மாதிரியான அவதூறு களுக்கு விளக்கம் அளிக்க விரும்பவில்லை. விவ காரம் நீதிமன்றத்தில் இருக்கிறது. எதுவாக இருந் தாலும் நல்ல முடிவாக கிடைக்கட்டும். தமிழ் சினிமாவின் நூற்றாண்டு விழாவை நல்லபடியாக நடத்திய பிறகே மற்ற விவகாரங்களைக் கவ னிக்க முடியும்!'' என்று ஒருமித்த குரலில் கூறி னார்கள்.  

“நாளை நமதே!” - முஷ்டி முறுக்கும் அஞ்சு ஹீரோக்கள்

'நடிகர் சங்கம், பட ரிலீஸ் பிரச்னையோ, சம்பளப் பஞ்சாயத்தோ எந்த விவகாரத்திலும் நடிகர்களுக்கு ஆதரவான நிலைப்பாடு எடுப்பதுஇல்லை. ஆனால், தேவையில்லாத சச்சரவுகளில் விளக்கம் அளிக்க மட்டும் நிர்பந்திக்கிறது. இந்த நிலையை மாற்றினால்தான் சினிமாவில் நமது எதிர்காலம் பாதுகாப்பாக இருக்கும். இதுபோன்ற இக்கட்டான சூழ்நிலையில்தான் நாம் ஒற்றுமை யாக இருக்க வேண்டும்!’ என்று சொல்லிச் சொல்லியே விஷால் கிட்டத்தட்ட நடிகர்கள் அனைவரின் ஆதரவையும் திரட்டிவிட்டாராம்.

சரத்குமார் ஒருவருக்காக ஒட்டுமொத்த நடிகர்களையும் பகைத்துக்கொள்ள விரும்பாததால், இந்த விவகாரத்தில் தமிழக அரசாங்கத்தின் ஆதரவு சரத்குமாருக்குக் கிடைக்கவில்லையாம்.  அதனாலேயே முதல்வர் முன்னிலையில் தமிழ் சினிமாவின் 100-வது ஆண்டு விழாவை நடத்த விறுவிறு முனைப்பில் இருக்கிறாராம் சரத்குமார். தற்காலிக சமாதான நடவடிக்கைகள் மேற் கொண்டு, ஒரு மாத காலத்துக்கு சண்டை சச்ச ரவைத் தள்ளிப்போட்டிருக்கிறார்களாம். ஆனால், 'நாளை நமதே’ என்று திட்டமிட்டுச் செயல்படும் இளம் நடிகர்கள் படை, நடிகர் சங்கத்தை மிக விரைவில் கைப்பற்றும் என்பதே இந்த ஆக்ஷன் சினிமாவின் க்ளைமாக்ஸாக இருக்கும் என்கிறார்கள்!