ம.கா.செந்தில்குமார்
##~## |
''நான் நல்லா வருவேன்னு எனக்கு நம்பிக்கை இருந்துச்சு. 'எம் மகன், மேல வந்துடுவான்’னு எங்க அம்மா நம்பினாங்க... ஆனா, ஊர்ல உலகத்துல வேற யாருமே என்னை நம்பலை. 'இவன்லாம் எங்கே உருப்படப்போறான்’னு நினைச்சுச் சிரிச்சவங்கதான் அதிகம். என் ஒவ்வோர் அவமானமும் என்னை அதிகமா வேதனைப்படுத்துச்சு. அந்த அவமானத்தைவிட அம்மா படுற கஷ்டம்தான் எனக்கு ரொம்ப வலிக்கும். அந்த வலிதான் இன்னைக்கு இந்த இடத்துக்கு என்னைக் கொண்டுவந்திருக்கு. சினிமாவுக்கும் நண்பர்களுக்கும் நன்றி!'' - வார்த்தைகளைக் கோத்துக் கோத்துப் பளிச்செனப் பேசுகிறார் ஒளிப்பதிவாளர் வேல்ராஜ்.
'பொல்லாதவன்’, 'ஆடுகளம்’, 'எங்கேயும் எப்போதும்’ படங்களின் கதை தளத்துக்கே நம்மை அழைத்துச் சென்ற ஒளிப்பதிவுக் கலைஞர்.
''தனுஷ்-வெற்றிமாறன்... இந்த டீமிலேயே தொடர்ந்து பயணிக்கிறீங்களே!''
''இந்தக் கேள்வியை நான் அடிக்கடி எதிர்கொள்கிறேன். அன்பு, நம்பிக்கை, சுதந்திரம்... தனுஷ்-வெற்றிமாறன் கூட்டணியில் தொடர்ந்து வேலை பார்க்க இந்த மூணும்தான் காரணம். வெற்றி, இரவு நேரக் காட்சிகளை நிறைய உருவாக்குவதற்கு, 'கேமரா பின்னிட்டான்ல’னு நான் அப்ளாஸ் அள்ளணுங்கிறது மட்டும்தான் காரணம். தனுஷ், கேமராவைத் தாண்டி சினிமாவுக்குள்ள என்னை அழைச்சுட்டுப் போகணும்னு நினைக்கிற மனுஷன். இந்த அன்பும் நட்பும் எனக்குப் பிடிச்சிருக்கு!''

''நிறைய இளைஞர்கள் பளீர் திறமையோட முதல் சினிமாவிலேயே சாதிக்கிறாங்க. ஒரு சீனியரா அவங்களோட போட்டிபோட உங்களை நீங்க எப்படி தயார்ப்படுத்திக்கிறீங்க?''
''அட, வெளியே ஏன் பார்க்கணும்? நம்ம உதவியாளர்களே நம்மைவிட திறமைசாலிகளா இருக்காங்களே! ஒளிப்பதிவாளரா ஒன்பது வருஷத்துல நான் கத்துக்கிட்டதை இன்னைக்கு ரெண்டே படத்துல கத்துக்கிறாங்க பசங்க. அவங்களோட போட்டிபோடணும்னா நிச்சயமா அப்டேட் பண்ணிட்டே இருக்கணும். நிறையப் படங்கள் பார்க்கிறது, புத்தகங்கள் படிக்கிறது, நண்பர்களிடம் கேட்டுத் தெரிஞ்சுக் கிறதுனு ஏதோ ஒருவகையில் நானும் ஓடிட்டே இருப்பேன். கேமரா, புதுப்புது உபகரணங்கள்னு வரும்போது என் குரு, ஒளிப்பதிவாளர் திரு சார் அதை முதல் ஆளா சென்னைக்கு வரவழைப்பார். அப்போ நான் அங்கே கண்டிப்பா இருப்பேன்!''
''உங்களுக்குக் கிடைச்ச மறக்க முடியாத பாராட்டு எது?''
''பாலுமகேந்திரா சார், ஷங்கர் சாருக்காக 'பொல்லாதவன்’ படத்தை ஸ்பெஷல் ஷோ பண்ணோம். படம் பார்த்துட்டு வெளியில வந்ததும் ஷங்கர் சார் கேட்ட முதல் கேள்வி, 'கேமராமேன் யார்?’னுதான். வெற்றிமாறன் என்னைஅறிமுகப்படுத்தியதும் தட்டிக்கொடுத்துப் பாராட்டினார். அந்த நிமிடங்களை மறக்கவே முடியாது!''

''ஒளிப்பதிவாளர் டு இயக்குநர் புரமோஷன்... அதுவும் தனுஷை வெச்சு முதல் படம்... எப்படி சாத்தியமாச்சு?''
''படப்பிடிப்பு இடைவேளைகளில் சும்மா கிண்டல் அடிச்சுப் பேசிட்டு இருப்போம். அப்போ, 'டைரக்ஷன் எவ்ளோ பெரிய கஷ்டம் தெரியுமா? வேணும்னா உங்களுக்கு கால்ஷீட் தர்றேன். ஒரு படம் பண்ணிப் பாருங்க’னு தனுஷ் அடிக்கடி சொல்வார். அது இப்போ உண்மையாகியிருக்கு.
நான் டைரக்ட் பண்ற படம், அழகான ஒரு காதல் கதை. தனுஷ§க்கு அமலா பால் ஜோடி. என் வாழ்க்கையில் எல்லாமே எதிர்பார்க்காமத்தான் நடந்தது. இந்த வாய்ப்பும்கூட!''
''ஒளிப்பதிவாளர் கனவோடு வரும் இளைஞர்களுக்கு என்ன சொல்ல விரும்புறீங்க?''
''நான் சொல்லி புதுப் பசங்க எந்த விஷயமும் கத்துக்க வேண்டியது இல்லை. சினிமாவில் ஜெயிக்க ஒரே சட்டம், கடின உழைப்பு. அத னால உடம்பையும் கொஞ்சம் கவனிச்சுக்கங்க. ஒவ்வொரு ஒளிப்பதிவாளரும் ஒரு ஸ்டன்ட் கலைஞருக்கு சமமா ரிஸ்க் எடுக்கணும். அதனால உடம்பு பத்திரம்!''