Published:Updated:

ஆல் ஹீரோஸ் அலர்ட்!

ஆ.அலெக்ஸ் பாண்டியன், படம்: வீ.சக்தி அருணகிரி

ஆல் ஹீரோஸ் அலர்ட்!

ஆ.அலெக்ஸ் பாண்டியன், படம்: வீ.சக்தி அருணகிரி

Published:Updated:
##~##

ஏழெட்டு டாடா சுமோக்கள், 27அடியாட்கள், உருட்டுக்கட்டைகள், அரிவாள்கள், கழுத்தை நெறிக்கும் தங்கச் சங்கிலிகள் என வளையவந்த 'பொன்னம்பல’ பாணி வில்லன்களைக் காணோம்.

'டயலாக் பேப்பர் மட்டும் தாங்க சார்’ என பவ்யம் காட்டி, திரையில் பயங்கரம் காட்டும் புது டீம் வந்தாச்சு. நடுநடுவே அண்ணன், குணச்சித்திரம், தியாகச் செம்மல், காமெடி பம்மல் என 'மானே... தேனே’வும் போட்டுக்கொள்கிறார்கள். அப்படியாப்பட்ட வில்லன்கள் சிலரிடம் 'எப்டி இப்டி?’ என  விசாரித்ததில்...  

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''ரஜினிக்கு ஒரு கதை!''

''எனக்கு ரஜினியை வெச்சு ஒரு படம் டைரக்ட் பண்ணணும்னு ஆசை. 'பாபா’ தலைப்பாக்கட்டு நம்ம ஐடியாதான்.  'கதிர்வேல்’னு ஒரு கதையையும் ரெடி பண்ணி லேப்டாப்ல ஏத்தி ரஜினி சார்கிட்ட கொடுத்தேன். அப்புறம் தி.மு.க. எம்.பி., டி.கே.எஸ். இளங்கோவன் மகளை லவ் பண்ணிக்

ஆல் ஹீரோஸ் அலர்ட்!

கட்டிக்கிட்டேன். வீட்ல நான், அம்மா, சம்சாரம்... அப்புறம் தமயந்தி, வேம்புனு ரெண்டு குட்டி நாய்கள்!'' - வரிக்கு வரி ஆச்சர்யச் செய்திகளுடன் ஆரம்பிக்கிறார் ஜான் விஜய். 'ஓரம் போ’ முதல் 'நேரம்’ வரை ரகளை செய்யும் ஜோர் வில்லன்!

''டாக்டர், இன்ஜினீயர் கனவோட இருந்தேன். ஆனா, படிப்பு ஏறலை. விஸ்காம் முடிச்சுட்டு விளம்பரங்கள், டி.வி. ஷோக்கள்னு  திரிஞ்சேன். 'ரேடியோ ஒன்’ல  நிகழ்ச்சி இயக்குநரா இருந்தப்போ, தனுஷ், சிம்பு, த்ரிஷா, சத்யராஜ்னு 70-க்கும் மேற்பட்ட பிரபலங்களை வெச்சு ஷோ பண்ணினேன். நம்ம வாழ்க்கை, பயங்கர பனிப்பாறைக்கு முந்தைய டைட்டானிக்கா அமைதியாப் பயணிச்சுட்டு இருந்தப்போ, என் ஜூனியர்ஸ் புஷ்கர் - காயத்ரி அமெரிக்காவில் இருந்து வந்து 'ஓரம் போ’ படத்துல என்னை நடிக்க வெச்சாங்க... அதுவும் வில்லனா!

நான் சினிமாவில் நடிக்கிறது, என் அம்மாவுக்கு ஆரம்பத்துல இருந்தே பிடிக்காது. 'என் புள்ளை இப்படி உருப்படாமப் போய்ட்டானே’னு புலம்புவாங்க. அவங்க துயரத்தை அதிகப்படுத்துற மாதிரி சில சம்பவங்களும் அடிக்கடி நடக்கும். நான், அம்மா, தமயந்தி மூணு பேரும் வேம்புகூட பீச்ல வாக்கிங் போனோம். 'ஓரம் போ’ படத்துல நான் சொன்ன 'ஈக்கும் பீக்கும் ஃப்ரெண்ட்ஷிப்’ங்கிற  டயலாக் பிரபலம். அதை ஞாபகத்துல வெச்சுக்கிட்டு, 'டேய் ஈயும் பீயும் நாயோட போகுது’னு கலாய்ச்சுட்டுப் போவாங்க ஏரியா பசங்க. அம்மா உடனே, 'இதுல யாருடா ஈயி, யாருடா பீயி?’னு கேட்டு அழுது புலம்ப ஆரம்பிச்சுருவாங்க. ஆனா, மத்த படங்களையும் பார்த்துட்டு அம்மா இப்ப ரொம்ப ஹேப்பியா இருக்காங்க!''  

ஆல் ஹீரோஸ் அலர்ட்!

'யு ஆர் எ குட் ஆக்டர்!’  

கணீர் குரல், கம்பீரப் பார்வையுடன் திரையில் மிரட்டும் 'ஆடுகளம்’ நரேன், பாலு மகேந்திரா பட்டறையில் வளர்ந்தவர். சந்தானத்துக்கு சவால்விடுவது போல, 'ஆரம்பம்’, 'வாலு’, 'ஆல் இன் ஆல் அழகுராஜா’, 'நய்யாண்டி’ என மாஸ் ஹீரோக்கள் நடிக்கும் படங்களில் தவறாமல் இடம்பிடிக்கிறார் நரேன்.

''பள்ளிக்கூடக் காலத்துலயே, 'எனக்கு சினிமாதான் பிடிச்சிருக்கு. நடிப்பு கத்துக்கப் போறேன்’னு சொல்லிட்டேன். இப்பதான் என் முகம் பரிச்சயமாகி இருக்கு. ஆனா, நான் இதே சினிமாவில்தான் 20 வருஷமா இருக்கேன். பாலு மகேந்திரா சார் இயக்கிய 'கதை நேரம்’ சீரியல்ல நடிச்சேன். அங்கே எனக்கு தோஸ்த் ஆனவன்தான் இயக்குநர் வெற்றிமாறன். ரெண்டு பேரும் 'வாடா போடா’ நண்பர்கள். எப்பவும் சினிமா சினிமானே அலைஞ்சுட்டு இருந்ததால, 13 வருஷமா வீட்டுச் செலவுக்குனு ஒரு பைசாகூட நான் கொடுத்தது இல்லை. மனைவிதான் வேலைக்குப் போய் வீட்டுச் செலவையும் சமாளிச்சு, எனக்கும் பணம் தருவா.  

'கதை நேரம்’ சீரியலில் எனக்கு நெகட்டிவ் ரோல். அப்போ தெருவுல நடந்தா பொம்பளைங்கள்லாம் என்னை அடிக்க வருவாங்க. ஆனா, இப்போ 'நண்பன்’, 'சுந்தரபாண்டியன்’ படங்கள் என்னைக் கொஞ்சம் மரியாதையாப் பார்க்கவெச்சிருக்கு. படங்கள்ல முறைச்சுக்கிட்டே நடிச்சாலும்  நேர்ல சிரிச்சுட்டே இருப்பேன். பாலு மகேந்திரா சார், கதை நேரத்தில் என் நடிப்பைப் பார்த்துட்டு, 'யு ஆர் எ குட் ஆக்டர்’னு பாராட்டினார். அந்த சந்தோஷத்தின் வீரியத்தை இப்போ ஒவ்வொரு நாளும் அதிகரிச்சுட்டே இருக்கு சினிமா!'' கரகர குரலில் நெகிழ்வாக முடிக்கிறார் நரேன்.  

ஆல் ஹீரோஸ் அலர்ட்!

''ரகுவரன் கணக்கா வரணும்!''

'டிஷ்யூம் டிஷ்யூம்’ குடும்பம். 'நான் கடவுள்’ படத்தில் வில்லனாக நடிப்பதற்கு முன் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம், பெங்காளி என 500-க்கும் மேற்பட்ட படங்களில் ஸ்டன்ட் ஆர்டிஸ்ட்டாக சுற்றிச் சுழன்றிருக்கிறார் 'நான் கடவுள்’ ராஜேந்திரன்!

''என் அப்பா எஸ்.அருணாச்சலம் 'நாடோடி மன்னன்’, 'உத்தமபுத்திரன்’னு அந்தக் காலத்துல எம்.ஜி.ஆர்., சிவாஜிக்கெல்லாம் டூப் போட்டவர். அண்ணன்கள் எல்லாருமே சினிமா ஸ்டன்ட் ஆளுங்கதான். 1977-ல் சினிமாவுக்கு வந்தேன். 36 வருஷம் ஆகிடுச்சு சார். 'நான் கடவுள்’ல வில்லனா நடிக்க ஆரம்பிச்ச இந்த அஞ்சு வருஷத்துல படங்கள்ல கொடூரமா நடிக்கிறது போக, நேர்ல பார்க்கிற எல்லார்கிட்டயும், 'நான் ரொம்பக் கொடூரமானவன் இல்லைங்க. எனக்கும் சம்சாரம், புள்ளைக் குட்டிங்கல்லாம் இருக்கு. நான் அன்பானவன், பாசமானவன், நேசமானவன்’னு சொல்லிச் சொல்லியே பிராணம்போகுது!  

மூத்த பொண்ணுக்கு கல்யாணம் முடிச்சாச்சு. ரெண்டு பசங்க இன்ஜினீயரிங் முடிச்சுட்டு வேலைக்குப் போறாங்க. எனக்கு, சினிமாவுல எப்படியாவது ரகுவரன் சார் மாதிரி பேர் வாங்கணும்னு ஆசை. ரஜினி, கமல், அஜித், விஜய்னு எல்லாருக்கும் வில்லனா நடிச்சு, அவங்ககிட்ட சபாஷ் வாங்கணும்னு ஆசை.'' என்று பணிவாகச் சிரிக்கிறார்.  

'இவன் கூட ஏன் சுத்துற?’

தயாரிப்பாளர் பஞ்சு அருணாச்சலத்தின் மகன் சுப்பு, 18 படங்களில் தயாரிப்பாளராக திரைக்குப் பின் பரபரப்பாக இருந்தவர், இப்போது திரையிலும் தகதகக்கிறார்.  

''ஒரு தயாரிப்பாளரா இயக்குநர் சமுத்திரக்கனியுடன் அறிமுகமானேன். அந்த சமயம் 'அரசி’ சீரியல்ல ஒரு கேரக்டரில் நடிக்க வேண்டியவர் வராததால், என்னை நடிக்க வெச்சார் சமுத்திரக்கனி. ரொம்பக் கொடூரமான வில்லன் ரோல். ஒருநாள், மனைவிகூட வெளியே போகும்போது வீதியில் எங்களைப் பார்த்த பெண்கள் என் மனைவிகிட்ட, 'இவன்கூட எதுக்கும்மா சுத்திட்டு இருக்க? ரொம்பக் கொடுமைக்காரன்மா’னு சொல்ல, 'இவருதாங்க என் வீட்டுக்காரர்’னு சொன்னா, 'இந்தப் படுபாவியைக் கட்டிக்கிட்டு எப்படித்தான் குடும்பம் நடத்துறியோ!’னு பாவப்பட்ட கதை எல்லாம் நடந்துச்சு. அந்த ஏச்சுப் பேச்சு எல்லாம் 'பாஸ் (எ) பாஸ்கரன்’ படத்துக்கு அப்புறம்தான் நின்னுச்சு.

ஆல் ஹீரோஸ் அலர்ட்!

ஒரு தடவை ரஜினி சார் வீட்டுக்குப் போயிருந்தப்ப என்னை வெச்ச கண் வாங்காமப் பார்த்துட்டே இருந்தவர், 'ம்ம்ம்ம்... கொஞ்சம் லேட் பண்ணிட்ட; இன்னும் சீக்கிரம் வந்திருக்கலாம்’னு சொன்னார். இத்தனை வருஷ அனுபவத்துல நான் சினிமாவில் கத்துக்கிட்ட ஒரே விஷயம்... திறமை மட்டும்தான் இங்கே அடிப்படைத் தேவை. அது இருந்தா, வெற்றி தேவதை உங்களை ஆசீர்வதிப்பா!''  

ஆல் ஹீரோஸ் அலர்ட்!

அப்பாவி அப்பாவின் சோகம்!

'' 'பார்வையிலேயே மிரட்டினார்’, 'பார்த்ததும் பயம் வருகிறது’னு பத்திரிகை, டி.வி-னு வில்லன் நடிகர்களை எல்லாரும் பாராட்டுவாங்க. ஆனா, வெளிய சொல்ல முடியாத அளவுக்கு ஒரு கஷ்டம் இருக்கு எங்களுக்கு!'' என்று இன்ட்ரோ கொடுக்கிறார்   'நான் மகான் அல்ல’ அருள் தாஸ்.

'நான் மகான் அல்ல’ படம் பார்க்க என் மனைவி, மூணாவது படிக்கும் மகளோட தியேட்டருக்குப் போயிருந்தேன். படத்துல நான் அரிவாளோட ஆட்களைத் துரத்தினப்போ தியேட்டரே கைதட்டி ரசிக்குது. ஆனா, என் பொண்ணு பொலபொலனு அழ ஆரம்பிச்சுட்டா. 'என்னம்மா?’னு கேட்டா, 'நீங்க நல்லவர் இல்ல... எல்லாரையும் கொல்லப் பார்க்குறீங்க. அருவா வெச்சுருக்கீங்க. ஏம்ப்பா இப்படி பண்றீங்க?’னு என் பக்கத்துலயே வர மாட்டேன்னு சொல்லிட்டா. அவளை சமாதானப்படுத்தி,  'அது சினிமா... அப்பா சும்மா நடிக்கிறேன்’னு சொல்லிப் புரியவைக்க ரொம்பவே கஷ்டப்பட்டேன். இப்போ நான் நடிச்ச

ஆல் ஹீரோஸ் அலர்ட்!

படத்துக்கு என் பொண்ணைக் கூட்டிட்டுப் போறதே இல்லை!'' நறநற ஆக்ரோஷத்துடன் வசனம் பேசி அப்ளாஸ் அள்ளும் அருள் தாஸ், அப்பாவி அப்பாவாக சோகம் சொல்கிறார்.

''சொந்த ஊரு மதுரை. சினிமா ஆசையோட கேமராவும் கையுமாத் திரிஞ்சேன். படத்துலதான் சார் நான் வில்லன். நேர்ல செம காமெடி பீஸ். யார்கிட்டயும் ஜாலியாப் பழகிடுவேன். அந்தப் பழக்கம்தான் சினிமாவில் எனக்கு ஒரு அடையாளத்தைக் கொடுத்திருக்கு. ஆரம்ப காலங்களில் 50 ரூபாய் பேட்டாவுக்கு நாயா பேயா வேலை செய்வேன். இப்போ லட்சங்கள்ல சம்பளம். சந்தோஷமா இருக்கேன் சார்!'' என்கிறார் அருள்தாஸ்.

ஆல் வில்லன்களுக்கும் வாழ்த்துகள்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism