Published:Updated:

மெட்ராஸ் கஃபே... கதை என்ன?

டி.அருள் எழிலன்

மெட்ராஸ் கஃபே... கதை என்ன?

டி.அருள் எழிலன்

Published:Updated:
##~##

பா.ஜ.க., தனது நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்தை நரேந்திர மோடியை வைத்து ஹைதராபாத்தில் தொடங்க,  காங்கிரஸ் கட்சியோ 'மெட்ராஸ் கஃபே’ படம் மூலம் தனது பிரசாரத்தைத் தொடக்கியிருக்கிறது!

ஜான் ஆப்ரஹாம் தயாரித்து நடித்திருக்கும் 'மெட்ராஸ் கஃபே’ என்ற இந்திப் படத்தில், 'விடுதலைப் புலிகளை மிக மோசமாக விமர்சிக்கும் வகையில் காட்சிகள் அமைந்திருக்கின்றன’ என்ற எதிர்ப்பின் காரணமாக, அந்தப் படத்தின் தமிழகத் திரையிடல் சிக்கலாகி இருக்கிறது. அப்படி எதிர்ப்பவர்களுக்கான சிறப்புத் திரையிடலில் படத்தைப் பார்த்தேன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

'நம் பிரதமர் (ராஜீவ் காந்தி) என்ன தப்பு செய்தார்? நாம் ஏன் அவரை இழந்தோம்?’- கேள்விகளுடன் தொடங்கும் படத்தின் ஆரம்பக் காட்சிகளில் ஆயுதம் தாங்கிய இரண்டு குழுக்கள், அப்பாவிப் பெண்களையும் குழந்தைகளையும் சுட்டுக்கொல்கிறார்கள். அடுத்த சில காட்சிகளில் பாஸ்கரன் (பிரபாகரன்) ஆயுதமேந்தி தனி நாடு கேட்டுப் போராடுகிறார். ஈழத் தமிழர்களுக்கு நன்மை செய்ய நினைக்கும் ராஜீவ் காந்தி, இலங்கை-இந்தியா ஒப்பந்தத்தில் கையெழுத்திடுகிறார். ஆயுத விரும்பியான பாஸ்கரன் அதை எதிர்க்க, அவரை ஒழித்துக்கட்ட 'ரா’ செய்யும் ராஜதந்திர அரசியலும் அதையும் மீறி ராஜீவ் காந்தி கொல்லப்படுவதும்தான் 'மெட்ராஸ் கஃபே’யின் கதை!

மெட்ராஸ் கஃபே... கதை என்ன?

ரா அதிகாரி விக்ரம் (ஜான் ஆப்ரஹாம்), புலிகளை பலவீனப்படுத்த இலங்கைக்குச் சென்று ஸ்ரீயையும் (சிறி சபாரத்தினம்) மல்லையாவையும் (மாத்தைய்யா) புலிகளுக்கு எதிராகத் தூண்டுகிறார். இடையில் பல சம்பவங்கள் நடக்க, ராஜீவைக் கொல்லுமாறு பாஸ்கரன் உத்தரவிடுகிறார். அந்தச் சங்கேதத் தகவலை ரா இடைமறித்துப் பதிவுசெய்து, ராஜீவை எச்சரிக்கிறார்கள். ஆனால், அதையும் மீறி ராஜீவ் காந்தி கொல்லப்படுகிறார்.

இலங்கையின் இனப்பிரச்னையை புலிகள் தொடக்கிவைக்கவும் இல்லை, முடித்துவைக்கவும் இல்லை. இடையில் 30 ஆண்டு காலம் அவர்கள் நடத்திய ஆயுதப் போராட்டம் பற்றிய தெளிவான புரிந்துணர்வு இல்லை. இலங்கையில் சிங்கள இனவெறி  எப்படியெல்லாம் தமிழர்களை அழித்தொழித்தது என்ற பதிவும் இல்லை. 'எந்த வேலையாக இருந்தாலும் பணம்தான் ஃபைனல்’ என்று புலிகள் சொல்வதுபோன்ற காட்சிகளுடன் குடிகாரர்கள், ஆயுதப் பிரியர்கள், எதற்கும் அடங்காமல் அக்கிரமம் செய்கிறவர்கள் என்ற ரீதியில்தான் புலிகளைச் சித்திரிக்கிறது மொத்தப் படமும். ஆனால், ஈழ ஆதரவாளர்களை சமாளிக்க வேண்டும் என்பதற்காக, 'பாஸ்கரன் நல்லவர், கொள்கை வீரர்’ என்று சம்பிரதாயத்துக்கு ஆங்காங்கே சில வசனங்கள்.

ஏதோ ஒரு வசனத்தை நீக்கி, ஒரு காட்சியை வெட்டி இந்தப் படத்தை வெளியிட்டுவிட முடியாத அளவுக்கு வஞ்சகம் நிரம்பியிருக்கிறது திரைக்கதையின் ஒவ்வோர் இடுக்கிலும்! சமீபமாக ஈழத் தமிழர் அபிமானிகளாகக் காட்டிக்கொள்ளும் கருணாநிதியும் ஜெயலலிதாவும் 'தலைவா’ ஆர்வத்தை இந்தப் படத்தின் மீதும் பாய்ச்சுவார்களா?

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism