Published:Updated:

தங்க மீன்கள் - சினிமா விமர்சனம்

தங்க மீன்கள் - சினிமா விமர்சனம்
தங்க மீன்கள் - சினிமா விமர்சனம்

தங்க மீன்கள்

##~##

மீன் குஞ்சுகளிடையே தன் மகளை 'தங்க மீனாக’ வளர்க்க ஆசைப்படும் தந்தையின் கதை!  

நிலையான வேலையும் நிரந்தர வருமானமும் இல்லாத ராம், தன் மகள் சாதனாவை தேவதையாக வளர்க்க ஆசைப்படுகிறார். அச்சு எழுத்துகளுக்கு அஞ்சும் சாதனாவுக்கோ, மலை, குளம், பறவைகள், மீன்கள் என செயல்வழிக் கற்றலில்தான் ஆர்வம். பள்ளியில் அவள் மட்டம் தட்டப்பட, 'மகளுக்கு ஃபீஸ் கட்டக்கூட வக்கில்லையே’ என்று வீட்டில் ராம் குத்திக்காட்டப்பட... இருவரும் தங்கள் அடையாளத்தைத் தக்கவைக்கிறார்களா என்பதே படம்!  

கல்விக் கட்டணங்கள், ஓர் ஏழைக் குடும்பத்தை அலைக்கழிக்கும் கதையை கையில் எடுத்ததற்கும், அப்பா-மகள் பாசத்தை முதல் புள்ளியாக வைத்து சமூகத்தின் பல இழைகளைப் பின்னிய துணிச்சலுக்கும்... இயக்குநர் ராமுக்கு வாழ்த்து.

அல்லாடும் தந்தையாக 'நடிகர்’ ராம் அறிமுகம். 'எதுக்கு நாயை அடிச்சீங்க?’ என்று மனைவி கேட்க, 'அப்போ வேற யாரைத்தான்டி நான் அடிக்கிறது’ என்று தன் இயலாமையில் வெடிக்கும்போதும், 'காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சுனு காக்கா வந்து உங்ககிட்ட சொல்லுச்சா மிஸ்’ என்று பள்ளிக்கூடத்தில் அடக்கப்பட்ட ஆத்திரத்துடன் குமுறும்போதும்... மனதில் பதிகிறார். சமயங்களில் பெரிய மனுஷித்தன்மையோடு பேசினாலும், தெற்றுப் பல் சிரிப்பிலும், மழலை உச்சரிப்பிலும் குட்டி தேவதையாக மனம் ஈர்க்கிறாள் சாதனா. தன்னை எவிட்டாவாகப் பாவித்து, 'அவ தங்க மீனாகிடுவா’ என்று தோழியிடம் கதை சொல்லும் இடம்... க்ளாஸிக்! 'நானும் செல்லம்மா மாதிரிதானேங்கே’ என்று கணவனிடம் இறைஞ்சுவதும்,

தங்க மீன்கள் - சினிமா விமர்சனம்

'விளையாட்டுக்குக்கூட அவளை 'திருடி’னு சொல்லாதீங்க மாமா’ என்று மாமனாரை அதட்டுவதும், மாமியார், மாமனார், கணவன் என்று அனைவரிடமும் வாங்கும் இடிகளுக்கு ஒருகட்டத்தில் பொறுமை இழந்து மகளிடம் வெடிக்கும்போதும்... ஒவ்வோர் உணர்விலும் உருக்கம் சேர்க்கிறார் ராமின் மனைவியாக வரும் ஷெல்லி கிஷோர். 'நான் நாளைக்கு சாகுறேனே... ஏன்னா, இன்னைக்கு எங்கம்மா பூரி பண்ணித் தர்றேன்னு சொல்லியிருக்காங்க’ என்று குறுகுறுக்கும் சாதனாவின் குட்டித் தோழி சஞ்சனா தோன்றும் காட்சிகளில் எல்லாம் உள்ளம் கொள்ளை கொள்ளுகிறாள்.

'அப்போ தாத்தாதான் காக்காவா?’,  'காசு இல்லாதவன்லாம் முட்டாப் பயனு நினைக்காதீங்கடா’, 'விளம்பரம் போடும்போது, 'இதைப் பணம் இல்லாதவங்க பார்க்காதீங்க’ன்னா போடுறாங்க?’, 'கிறிஸ்துமஸ் தாத்தா சொன்னா ஜீசஸ் கேப்பார்... ஹெட் மாஸ்டர் கேப்பாரா?’, 'விளம்பரத்துல நாய் வந்ததுல இருந்து சிம்கார்டு வித்துச்சோ இல்லையோ, நாய் நல்லா விக்குது’, 'அவன் ரொம்ப நல்லவன்... கொஞ்சம் கெட்டவனாத்தான் திரும்பி வரட்டுமே’, 'உங்ககிட்ட நான் விட்டுட்டுப்போன குழந்தையைக் கொன்னுட்டீங்க’ - சூழலுக்குப் பொருத்தமான சுளீர் வசனங்கள் கோபம், ஏக்கம், சோகம், கலகலப்பு சுமந்து படம் நெடுகப் பரவிக்கிடக்கின்றன.

ஓட்டுத் தாழ்வார வீடு, மலை, குளம், ரயில், சைக்கிள், படகு இல்லம் என ஒவ்வொரு தளத்தையும் ஒவ்வொரு பாத்திரமாக மனதில் பதியவைக்கிறார் ஒளிப்பதிவாளர் அர்பிந்துசாரா. பரந்து விரியும் பச்சைப் பசேல் மலைப்பரப்போ, இருள் கவிழ்ந்த ஒற்றை அறையோ இருப்பிடம் கொண்டு சேர்க்கிறது ஒளிப்பதிவு. பாடல்களில் 'ஆனந்த யாழ்’ மீட்டிய யுவன், பின்னணி இசையில் உயிர் உருக்குகிறார். அர்த்தம் செறிந்த வசனங்களுக்கு இணையாக ஸ்கோர் செய்கிறது பிரவாகமான யுவனின் பின்னணி இசை.

தங்க மீன்கள் - சினிமா விமர்சனம்

ராம் - சாதனா கதாபாத்திரங்கள்தான் பிரதானமென்றாலும், படத்தின் ஒவ்வொரு கேரக்டர் செதுக்கல்களிலும் தேர்ச்சி. குறிப்பாக, எவிட்டா மிஸ்! க்ளைமாக்ஸ் காட்சி தவிர வசனங்கள் இல்லை, பாடல்கள் இல்லை,  சோகம் ததும்பும் சூழல்தான்... ஆனாலும் 'எவிட்டா மிஸ்’ஸாகக் கலங்கடிக்கிறார்  பத்மப்ரியா. பத்மப்ரியாவின் கணவர் நள்ளிரவில் ராமை எதிர்கொள்ளும் சூழலும், சில நிமிடங்களில் மனம் தெளிந்து ராமின் தோள் பிடித்து அரவணைப்பதும்... நெகிழ்ச்சியான சிறுகதை! 'நல்லாசிரியர் விருது’ பெற்ற பூ ராமு, மருமகளின் மீது கோபமும் பாசமும் பொழியும் ரோகினி, 'டேய் என் அண்ணன் வாங்கிக் கொடுத்த சாக்லேட்... எனக்கும் குடுடா’ எனும் தங்கை ரம்யா, பார்வையிலேயே அதட்டல் போடும் ஸ்டெல்லா மிஸ் லிஸ்ஸி... நம்மோடு குடியிருக்கும் நம்மைக் கடந்து செல்லும் ஆளுமைகளே ஒவ்வொரு ஃப்ரேமும்... அழகு!

இத்தனை 'நல்லன எல்லாம்’ பார்த்துப் பார்த்துச் சேகரித்திருக்கும் ராம், பின்பாதி மையச் சரடில் குழம்பியது ஏன்? பள்ளிக் கட்டணம் 2,000 ரூபாய் மட்டும்தான் ராமுக்கு சிக்கல். ஆனால், 2,000 ரூபாய் சம்பாதிக்க எண்ணற்ற வழிகள் இருக்க, கேரளா சென்றவர், பிறகு 22 ஆயிரம் ரூபாய் 'நாய்’ என்று இலக்கு வைத்து காடு, மலை, மேடேறுவதெல்லாம்... வழி தவறிய பயணம்!

எவிட்டா டீச்சரின் சந்தேகப் புத்திக் கணவனின் இயல்பை வார்த்தைகளே இல்லாமல் பதிவுசெய்த இடம், சாதனா - சஞ்சனா இருவரிடையிலான குழந்தை நட்பை அச்சு அசலாகப் பிரதியெடுத்த சித்திரிப்புகள்... அந்த அத்தியாயங்களின் நேர்த்தியைப் பின்பாதியிலும் புகுத்தியிருக்கலாம் ராம்!  

ஆனாலும், கண்ணாடித் தொட்டிக் கட்டுப்பாட்டுக்கு அடங்காமல், குளத்தின் நீள அகலத்துக்கு வளையவரும் இந்தத் 'தங்க மீனி’ன் உற்சாகத்தை ரசிக்கலாம்!  

- விகடன் விமர்சனக் குழு

அடுத்த கட்டுரைக்கு