Published:Updated:

ஒரே மேடையில் கருணாநிதி, ஜெயலலிதா?

அரங்கேறுமா அசத்தல் க்ளைமாக்ஸ்ம.கா.செந்தில்குமார், எம்.குணா, க.ராஜீவ்காந்திஓவியம்: ஹாசிப்கான்

##~##

 'இந்திய சினிமாவின் தந்தை’ எனப்படும் தாதா சாகேப் பால்கே, தன் முதல் படமான 'ராஜா ஹரிச்சந்திரா’வை 1913-ம் ஆண்டு மே மூன்றாம் தேதி வெளியிட்டதில் இருந்து தொடங்குகிறது இந்திய சினிமாவின் வரலாறு! 1913-ல் கறுப்பு வெள்ளை ஊமைப்படமாகத் தொடங்கிய நம் சினிமா உலகம், தன் 100 வருடப் பயணத்தில் இன்று 3டி, பெர்ஃபாமன்ஸ் மோஷன் கேப்சரிங் டெக்னாலஜி வரை வளர்ந்து நிற்கிறது.

தென்னிந்தியத் திரைப்பட வர்த்தக சபை, இந்திய சினிமாவின் நூற்றாண்டை, 'சினிமா 100’ என்ற தலைப்பில் கொண்டாட உள்ளது. சென்னை, நேரு உள்விளையாட்டரங்கில் செப்டம்பர் 21-ம் தேதி தொடங்கும் இந்த விழா, 24-ம் தேதி வரை நான்கு நாட்கள் தொடந்து நடைபெற உள்ளது. இந்த விழாவை, 21-ம் தேதி தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா தொடங்கி வைக்கிறார். முதல் நாள் தமிழ் சினிமாக் கலைஞர்களின் கலை நிகழ்ச்சியும், அடுத்தடுத்த நாட்களில் கன்னடம், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட சினிமாக் கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகளும் சென்னையில் அரங்கேற இருக்கிறது.

24-ம் தேதி மாலை, உச்சக்கட்ட விழாக்கோலம். அந்நிகழ்வில், இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, தமிழக ஆளுநர் ரோசய்யா, தமிழக முதல்வர் ஜெயலலிதா, ஆந்திர முதல்வர் கிரண்குமார், கேரள முதல்வர் உம்மன் சாண்டி, கர்நாடக முதல்வர் சித்தராமையா ஆகியோர் கலந்துகொள்கிறார்கள். அப்போது பாலிவுட் பிரபலங்கள் அமிதாப் பச்சன், ஷாரூக் உள்ளிட்ட பலரும் கலந்துகொள்கிறார்கள்.

கல்யாணம், காது குத்து நிகழ்ச்சி என்றாலே, 'என்னைக் கூப்பிடலை, என் பேரை பத்திரிகைல போடலை’ என உறவினர்கள் முறுக்கிக்கொண்டு திரிவது வாடிக்கை. அப்படியிருக்க,  நான்கு மாநில அரசியல் பிரமுகர்கள், நடிகர், நடிகைகள், தொழில்நுட்பப் பிரபலங்கள் என ஆயிரக்கணக்கானோர் சங்கமிக்கும் இந்த விழாவை 100 சதவிகிதம் சலசலப்பு இன்றி நடத்துவது என்பது சவால்தான். சின்னச் சின்ன சச்சரவுகள்கூட உண்டாகலாம்தான். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் முதல்வர்களில், தமிழகம் தவிர மற்ற மாநிலங்களை ஆட்சி செய்வது மத்தியில் ஆளும் காங்கிரஸ் கட்சியின் முதல்வர்கள். காங்கிரஸ்-ஜெயலலிதா இடையிலான உறவு ஏழாம் பொருத்தமாக இருக்கும் சூழலில், இந்த நிகழ்ச்சியில் அவர்களின் பங்கேற்பு, பங்களிப்பு எவ்வாறாக இருக்கும் என்பது அரசியல்ரீதியிலான எதிர்பார்ப்பு.

ஒரே மேடையில் கருணாநிதி, ஜெயலலிதா?

இந்நிலையில் இப்படியான சர்ச்சை சந்தேகங்களைத் தாண்டி, ஒரு படைப்பாளியாக தன் வசனங்கள் மூலம் தமிழ் சினிமாவை வேறொரு தளத்துக்கு எடுத்துச்சென்றவரும், தமிழக முதல்வர் பதவியை ஐந்து முறை அலங்கரித்தவருமான கருணாநிதிக்கு, அந்த மேடை உரிய அங்கீகாரம் வழங்குமா என்பது இப்போது விடை தெரியாத கேள்வியாக தொக்கி நிற்கிறது! சென்னையில் நடைபெறும் இந்த விழாவின் அசைவையும் ஏற்பாட்டையும் தீர்மானிப்பது, தமிழக அரசின் 'வழிகாட்டுதல்’தான் என்கிறார்கள் தென்னிந்தியத் திரைப்பட வர்த்தக சபை நடைமுறை அறிந்தவர்கள்!

விழா நடைபெறும் ஒவ்வொரு நாளும், அந்தந்த மொழியின் சினிமா வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றிய 50-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் கௌரவிக்கப்பட இருக்கிறார்கள். தவிர, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி யால் சிலர் கௌரவிக்கப்பட உள்ளனர். இதற்காக நான்கு மொழி சினிமாவில் இருந்தும் சுமார் 30 கலைஞர்கள் தேர்வாகி உள்ளனர்.

அதற்கான தமிழ்க் கலைஞர்கள் பட்டியல்களில் தவிர்க்க முடியாத நபராக கருணாநிதி இருப்பார் என்பது சினிமா ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு. ஆனால், இந்தக் கட்டுரை அச்சேறும் வரை, கருணாநிதிக்கு விழா அழைப்பிதழே சென்று சேரவில்லை என்பதுதான் அதிர்ச்சி ப்ளஸ் ஆச்சரியம்!

'இந்திய சினிமா 100’ கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, ஒன்பது நாட்களுக்கு சென்னை சத்யம் திரையரங்கில் தினமும் ஒரு காட்சி என தென்னக மொழிகளின் க்ளாஸிக் திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளன. தெலுங்கில் 'சத்ய ஹரிச்சந்திரா’, மலையாளத்தில் 'செம்மீன்’ ஆகிய படங்கள் திரையிடப்படும் பட்டியலில் இடம்பிடிக்க, தமிழில் தேர்வாகி இருப்பது 'ஆயிரத்தில் ஒருவன்’. கருணாநிதியின் 'மாஸ்டர் பீஸ்’களாக் கருதப்படும் 'பராசக்தி’, 'மனோகரா’, 'பூம்புகார்’ உள்ளிட்ட படங்களுக்கு தடா.  மறந்தும் கருணாநிதி கதை-வசனத்தில் வந்த படங்கள் விழா நிகழ்வில் எங்கும் சுட்டிக்காட்டப்படக் கூடாது என்பதில் கவனமாக உள்ளது விழாக் குழு. அதோடு கருணாநிதி ஆதரவாளர்களுக்கான அங்கீகாரத்தைத் தவிர்ப்பதற்காக நடிகர் சங்கம் உள்ளிட்ட தமிழ் சினிமாவின் பல்வேறு சங்கங்கள் புறக்கணிக்கப்படுவதாகவும் முணுமுணுக்கிறார்கள்!

நடிகர் சங்க பொதுச் செயலாளர் ராதாரவியிடம் நடிகர் சங்கத்தைப் புறக்கணிப்பது பற்றிக் கேட்டபோது... ''நடிகர் சங்கத்தை யாரும் புறக்கணிக்க முடியாது. ஆனால், விழா ஏற்பாடுகளில் எங்களுக்கு எந்தப் பங்கும் இல்லை. இத்தனைக்கும் இந்த விழாவில் கலந்துக்கணும்னு சொல்லி, ஜனாதிபதி, தமிழக முதல்வர் ஆகியோரின் நேரம் வாங்கித் தந்தது சரத்குமார். மத்திய அரசு, இந்திய சினிமான்னா இந்தி சினிமா மட்டும்தான்னு பார்க்குது. தென்னக சினிமாக்காரங்களைப் புறக்கணிக்கிறாங்க. இந்த நூற்றாண்டு விழாவுக்கு எதிர்ப்பையும் மனவருத்தத்தையும் பதிவு பண்ணினாலும், தமிழக முதல்வர் அம்மா அவர்களுக்காக நாங்க கலந்துக்கிறோம்'' என்கிறார் ராதாரவி.

கருணாநிதி நிராகரிக்கப்படும் போக்கை தமிழ் சினிமா உலகினர் உணர்ந்திருந்தாலும், அதுகுறித்து யாரும் வெளிப்படையாகக் கருத்துத் தெரிவிக்க மறுத்துவிட்டார்கள். அதனாலேயே வேறு வழியில்லாமல் தி.மு.க. தரப்பினரே இந்த விவகாரத்திலும் குரல் கொடுக்கிறார்கள்.  

''65 ஆண்டுகளாக சினிமாவில் கதை, வசனம் எழுதிவரும் கலைஞரை 'சினிமா 100’ விழாவில் கௌரவிக்காவிட்டால் சும்மாவிட மாட்டோம்!'' என்கிறார் நடிகர் சங்கப் பொருளாளர் வாகை சந்திரசேகர். ''பூக்கள் இல்லாத பூங்கா மாதிரிதான் கலைஞரைக் கௌரவிக்காத சினிமா நூற்றாண்டு விழாவும். 1948-ல் 'ராஜகுமாரி’ படத்துக்கு கதை, வசனம் எழுதி சினிமா பிரவேசத்தைத் தொடங்கிய கலைஞர், 50-க்கும் மேற்பட்ட படங்களுக்கு கதை, வசனம் எழுதியுள்ளார். எம்.ஜி.ஆருக்குப் பெயர் வாங்கிக்கொடுத்த 'மந்திரிகுமாரி’க்கு கலைஞர்தான் கதை-வசனம். ஒரே இரவில் சிவாஜியை உலகறியச் செய்த 'பராசக்தி’க்கும் கலைஞரின் பேனாதான் உயிர் கொடுத்தது. நூற்றாண்டு கால இந்திய சினிமா வரலாற்றில் எப்படி எம்.ஜி.ஆர்., சிவாஜி போன்றோர் தவிர்க்க முடியாத சக்தியோ... அதுபோல கலைஞரும் தவிர்க்க முடியாதவர். 'சினிமா 100’ விழாவில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கையால் அவருக்கு விருது கொடுத்துக் கௌரவிக்கப்பட வேண்டும்.

இன்று ஆளும் அ.தி.மு.க. அரசுக்கு ஆராதனை செய்யும் இதே திரைக்கலைஞர்கள் அன்று கலைஞருக்கு வெளியிட்ட சினிமா மலரில் அவரை ஆஹா... ஒஹோவெனப் புகழ்ந்து எழுதிய கட்டுரைகளை மறக்கக் கூடாது. 'மனசாட்சி உறங்கும்போது மனக்குரங்கு ஊர்சுற்றக் கிளம்பிவிடுகிறது’ - இது கலைஞர் எழுதிய புகழ்பெற்ற வசனம். அதுபோல தமிழ் சினிமா உலகினர் கலைஞரை மறந்து மனசாட்சியை உறங்கவைத்துவிட்டு மனக்குரங்கை ஊர் சுற்றவிடக் கூடாது''  என்கிறார் ஆற்றாமையோடு.

ஒரே மேடையில் கருணாநிதி, ஜெயலலிதா?

புதிதாகத் தேர்வுசெய்யப்பட்ட தமிழக தயாரிப்பாளர் சங்கத் தரப்பில் கேட்டால், ''இந்த விழா பற்றி எங்களுக்கு ஒரு செய்தியாகத்தான் தெரியுமே தவிர, இதில் எங்கள் பங்களிப்பு எதுவும் கிடையாது'' என்பதோடு முடித்துக் கொண்டார்கள்.  

வர்த்தக சபையின் நிர்வாகிகள் என்ன சொல்கிறார்கள்? மூச்ச்! வெளிப்படையாகக் கருத்துச் சொல்ல மறுக்கிறார்கள். 'ஆஃப் தி ரெக்கார்ட்’டாக விசாரித்ததில் கிடைத்த தகவல் இதுதான்.

'இது, 100 வருட இந்திய சினிமாவின் விழா. விழா நிகழ்ச்சிகள் அனைத்தும் 'முதல்வர் அம்மா’வின் வாழ்த்துகளோடும் ஆதரவோடும் நடக்குது. சினிமா வளர்ச்சிக்கு யாரெல்லாம் உழைச்சாங்களோ, அவர்களுக்கு மரியாதை செலுத்தப்படும். கருணாநிதி அரசியல் தலைவரா இருப்பதால், விழாவுக்கு வேறொரு கலர் வந்துடக் கூடாதுன்னு அவருக்கு அழைப்பிதழ் தரலை. மத்தபடி இதை சினிமா நிகழ்ச்சியா மட்டுமே பார்க்கிறோம்!’

இந்நிலையில், 'தமிழகத்தில் நடக்கும் சினிமா விழாவில் கலைஞருக்கு அழைப்புகூட இல்லாமல் இருப்பது சரியா?’ என்ற கொந்தளிப்போடு டெல்லி தலைமையை நாட முடிவெடுத்திருக்கிறார்கள் தி.மு.க. முகாமில். இதனால், 'கருணாநிதிக்கு கடைசி நேரத்தில் சிறப்பு அழைப்பு அனுப்பப்படும். அவரை மேடையேற்ற 'டெல்லி’யிலிருந்து உத்தரவாதம் அளிக்கப்படும்’ என்றும் சொல்கிறார்கள். ஒருவேளை அப்படியான சம்பவங்கள் அரங்கேறினால், விழாவை ஜெயலலிதா புறக்கணிப்பாரா? அல்லது ஜெயலலிதா-கருணாநிதி இணைந்தே மேடையேறி உலகின் எட்டாவது அதிசயத்தை நிகழ்த்துவார்களா என்ற அதிர்ச்சி க்ளைமாக்ஸுக்குக் காத்திருக்கிறது கோடம்பாக்கம்!

டெயில் பீஸ்: தமிழ் சினிமா இயக்குநர்களில் சீனியரான முக்தா சீனிவாசன் நினைவுகூர்ந்த ஒரு சம்பவம் இங்கு குறிப்பிடத்தக்கது. ''பெரியாருக்கு சினிமாவே பிடிக்காது. அப்படிப்பட்டவரை நான் இயக்கி முத்துராமன், ஜெயலலிதா நடித்த 'சூரியகாந்தி’ படத்தின் 100-வது நாள் விழாவுக்கு விருது

ஒரே மேடையில் கருணாநிதி, ஜெயலலிதா?

கொடுக்க அழைக்கச் சென்றேன். 'நான்தான் சினிமாவே பாக்க மாட்டேன்னு தெரியும்ல. அப்புறம் எதுக்கு என்னைக் கூப்பிடுற...’ என்று முறைத்தார். 'படத்துல கணவனைவிட மனைவி அதிகமா சம்பாதிப்பதால் ரெண்டு பேருக்கும் மனஸ்தாபம்’னு தொடங்கி கதையைச் சொன்னதும், 'நல்லாருக்கே...’ என்று வீரமணியை அழைத்து தேதி கொடுக்கச் சொன்னார். விழாவில் நீண்ட நேரம் இருந்து, ஜெயலலிதா உட்பட அனைவருக்கும் விருது கொடுத்தார்!''

அப்படித் தனக்கு விருப்பம் இல்லாவிட்டாலும் கலைக்கும் கலைஞர்களுக்கும் உரிய மரியாதை கொடுப்பதே சான்றோர்களின் மாண்பு!

யார் யார் பிரசென்ட்... ஆப்சென்ட்?

ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகிய இருவருக்கும் நேரில் சென்று அழைப்பிதழ் வைத்திருக்கிறார்கள்.  'நிச்சயம் வர்றேன்!’ என்பது ரஜினியின் உறுதி. அழைப்பிதழ் அளித்த விழாக் குழுவினருடன் ஒன்றரை மணி நேரம் சினிமா நினைவுகளைப் பகிர்ந்துகொண்டிருக்கிறார் கமல். 'கண்டிப்பாக நான் விழாவில் இருப்பேன்’ என்று அவரும் உத்தரவாதம் கொடுத்திருக்கிறார். பொதுவாக மேடை நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளாத அஜித்கூட, 'சினிமாவுக்கான விழா என்பதால் நிச்சயம் கலந்துகொள்வார்’ என்கிறார்கள். 'தலைவா’ பிரச்னை காரணமாக நீண்ட விவாதத்துக்குப் பிறகே விஜய்க்கு அழைப்பு அனுப்பியிருக்கிறார்கள். அவர் கலந்துகொள்வாரா, மாட்டாரா என்பது கடைசி நிமிடம் வரையிலான சஸ்பென்ஸாக இருக்கும். நடிகர் சங்கத்தின் முன்னாள் தலைவர், இந்நாள் தமிழக எதிர்க்கட்சித் தலைவரான விஜயகாந்துக்கு அழைப்பே இல்லையாம்!

அடுத்த கட்டுரைக்கு