சினிமா
Published:Updated:

“படத்துக்கு பாட்டெல்லாம் எதுக்குங்க?”

க.ராஜீவ் காந்தி

##~##

ஹிட் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி தன் 'ஹீரோ’ கனவை நனவாக்கும் முயற்சி களில் அடுத்த படி ஏறுகிறார். 'நான்’ பட நடிப்பு நல்ல இமேஜ் கொடுக்க, 'சலீம்’, 'திருடன்’ என அடுத்தடுத்த படங்கள் மூலம் பிஸி பிஸி!

''அப்போ... இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி?''

''இங்கேயேதான் இருக்கான். சவுண்ட் இன்ஜினீயரா இருந்து ரொம்பக் கஷ்டப்பட்டு மேல வந்தவன் அவன். அதனால, வாழ்க்கை கொடுத்த இசையை எப்பவும் மிஸ் பண்ணிர மாட்டான். இப்பவும் நான் ஹீரோவா நடிக்கிற, தயாரிக்கிற படங்களுக்கு என் மியூஸிக்தான். நடிக்கிறதுக்கு முன்னாடியும் ஒரு வருஷத்துல மூணு, நாலு படங்களுக்குத்தான் மியூஸிக் பண்ணியிருப்பேன். அந்த கவுன்ட் குறையாம பார்த்துப்பேன்!''  

''அது ஏன் சொந்த கம்பெனி படங்கள்லயே நடிக்கிறீங்க?''

'' 'நான்’ படத்துக்கு பின்னணி இசை சேர்க்க மட்டும் நாலு மாசம் எடுத்துக்கிட்டேன். அந்த சுதந்திரம் மத்த இடங்கள்ல கிடைக்கணுமே! நான் நடிக்கிற படங்களுக்கு நானே தயாரிப்பாளராகவும் இருக்கிறதால, எனக்குத் திருப்தி தரும் கதையையும் ஆட்களையும் தேர்வுசெய்ய முடியுது. அதனால என் லிமிட் தாண்டி எதுவும் பண்றது இல்லை. 'சலீம்’ என்னுடைய பேனர்தான். ஆனா, அடுத்ததா நடிக்கிற 'திருடன்’ என் பேனர் கிடையாது.''

“படத்துக்கு பாட்டெல்லாம் எதுக்குங்க?”

''தப்போ - ரைட்டோ இப்ப காமெடிப் படங்கள்தானே இங்கே ஜெயிக்குது?''

''எனக்கு காமெடி செட் ஆகாது. அந்த விஷயத்துல நான் அன்லக்கி. ஆனா, நான் ஜாலியான ஆள். அதனாலதான் 'ஆத்திசூடி...’, 'நாக்க... முக்க...’லாம் பண்ண முடிஞ்சது. இப்போ நான் நடிக்கும் படங்களில் காமெடி தனியா தூக்கலா இருக்காது. ஆனா, உங்களை அறியாமலே பல இடங்கள்ல சிரிப்பு வரும். ஆனா, வெங்கட் பிரபு, பிரேம்ஜி, யுவன் கூட்டணியைப் பார்க்கும்போது பொறாமையா இருக்கும். வாழ்க்கையை அவ்ளோ சீரியஸாக் கொண்டாடுறாங்க. வேலையை அவ்ளோ ஜாலியா முடிக்கிறாங்க!''

“படத்துக்கு பாட்டெல்லாம் எதுக்குங்க?”

''உங்களுக்கு அப்புறம் வந்த இளம் இசையமைப்பாளர்கள் தடதடனு ஹிட் அடிச்சுட்டாங்களே!''

''பிரமாதமாப் பண்றாங்க. 'வாகை சூடவா’ ஜிப்ரான், 'எதிர்நீச்சல்’ அனிருத், 'சூது கவ்வும்’ சந்தோஷ் நாராயண்... ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு வெரைட்டி. நான் சான்ஸ் தேடின காலத்துல, ஒரு பாட்டை கேசட்ல பதிவு பண்ணிக் கொடுத்துட்டு வந்துருவேன். அவங்க முடிவுக்காகக் காத்திருப்பேன். 'எங்கே நம்ம ட்யூனை காப்பி அடிச்சுடுவாங்களோ!’னு பயமா  இருக்கும். ஆனா, இப்போ அப்படி இல்லை. யூ-டியூப்ல ஒரு பாட்டை ரிலீஸ் பண்ணி பிரபலம் ஆகிடலாம். அப்புறம் அந்த லிங்க் வைச்சுட்டே வாய்ப்பு தேடலாம். தொழில்நுட்ப வளர்ச்சியை இளைஞர்கள் கெட்டியாப் பிடிச்சுக்கிட்டாங்க!''

''நீங்க நடிக்கும் படத்துக்கு 'திருடன்’னு டைட்டில் வெச்சிருக்கீங்க. அதை மனசுல வெச்சுட்டு சொல்லுங்க... இப்போ பிரபல இசையமைப்பாளர்களே பல ட்யூன்களை காப்பி அடிக்கிறாங்களே!''

''இயக்குநர்களோட ஒப்பிடும்போது நாங்கள்லாம் பெரிசா காப்பி அடிக்கிறதே இல்லைங்க. ஒரு மியூஸிக்கை அப்படியே காப்பி அடிச்சு போட்டா ஹிட் ஆகும்னு எனக்கு நம்பிக்கை இல்லை. நம்ம இசையமைப்பாளர்களே உலகத் தரத்துக்குப் பண்றாங்க. ஏதாச்சும் குறை சொல்லணுமேனு நினைக்கிறவங்க, அதை காப்பினு சொல்றாங்க. எதைக் கேட்டாலும் கொடுக்கும்  திறமை இங்கே இருக்கு. அதுக்குக் காரணம் எம்.எஸ்.வி-யும் இளையராஜாவும்தான். உள்ளே போனதுதான் நமக்கே தெரியாம சில சமயங்களில் வெளியே வருது. அதே சமயம் பாடல்கள்தான் தமிழ் சினிமாவைக் குட்டிச் சுவராக்குது. வெளிநாடு மாதிரி பாடல்களே இல்லாம படங்கள் வரணும். ஆனா, தியேட்டர்ல படத்தோட லைஃப் குறைஞ்சுட்டதால, பாடல்கள்தான் கொஞ்ச நாள் சேனல்கள்ல ஒரு படத்தை லைவ்வா வெச்சிருக்கும். அதனாலதான் பிடிக்கலைன்னாலும் நாங்க பாட்டுக்கு மியூஸிக் பண்ணிட்டு இருக்கோம். மத்தபடி ஒரு படத்துக்கு பாட்டு எதுக்குங்க?''