சினிமா
Published:Updated:

நம்ம வில்லன்கள் ரொம்பப் பாவம் பாஸ்!

அறிவு

##~##

ம்ம இந்திய சினிமாவில் முரட்டுத்தனமான, முட்டாள்தனமான,  பாவமான, ரொம்பப் பரிதாபமான ஒரு கேரக்டர் உண்டு என்றால், அது 'வில்லன்’கேரக்டர்தான்!  

காலங்காலமாக கதாநாயகனிடம் அடிபட்டுக்கொண்டிருக்கும் வில்லன்களும், அவர்களின் அடியாட்களும் இனிமேலாவது சூதானமாகப் பிழைத்துக்கொள்ள இதோ சில டிப்ஸ்...

• நீங்கள் யாரையாவது கடத்தி வைத்திருக்கும்போது உங்கள் வீட்டில் எந்த ஆடல், பாடல் நிகழ்ச்சியையும் நடத்திவிடாதீர்கள். இந்த முறையில்தான் பெரும்பாலும் ஹீரோக்கள் உங்கள் ஏரியாவுக்குள் மாறுவேடத்தில் வருகிறார்கள். மீறி நடத்தினால், ஆடுபவனைக் கவனித்துக்கொண்டே இருங்கள். தாடி, மீசை, மச்சம் இவற்றை நன்கு பரிசோதிக்கவும். கடத்தப்பட்டவரைப் பார்த்து கண்ணடித்தால், உடனே போட்டுத் தள்ளிவிடுங்கள். பன்ச் டயலாக் பேசுவதற்கு அது நேரமன்று. அதுவும் போக, ஹீரோ தன் குடும்பப் பாடலை பாடி எப்போதோ பிரிந்தவர்களை அப்போதே ஒன்றுசேர்க்கும் வாய்ப்பும் இருப்பதால், 'ஆடல்-பாடல்’ நிகழ்ச்சிகள் உங்களுக்குப் பெருந்தொல்லையாகவே முடியும்... உஷார்!

• உங்களுக்கு உதவியாளராக, 'திறந்த மனம்’ கொண்ட அழகிகளை எந்தக் காரணம்கொண்டும் வைத்துக்கொள்ளாதீர்கள். டாஸ்மாக்கில் கூலிங் பீர் கிடைக்கும் என்று நம்பிச் செல்வது எப்படி அபத்தமோ, அப்படித்தான் இவர்கள் உங்களுக்கு நம்பிக்கையாக இருப்பார்கள் என்று எதிர்பார்ப்பதும். ஹீரோவின் அசகாய சூரத்தனங்களில் மயங்கி கடைசி நேரத்தில் அவர் பக்கம் சாய்ந்து உங்களுடைய ரகசியங்களையும் பலவீனங்களையும் அவரிடம் சொல்லிவிடுவார்கள் அந்த அழகிகள். ஆனானப்பட்ட ஜேம்ஸ்பாண்டே இன்னும் அந்த அழகிகளை நம்பித்தான் வில்லன் வேட்டைக்குக் கிளம்புகிறார். ஆக, சீறும் ஹீரோக்களைக்கூட நம்புங்கள்... சிரிக்கும் ஃபிகர்களை நம்பாதீர்கள்!

நம்ம வில்லன்கள் ரொம்பப் பாவம் பாஸ்!

• ஹீரோவைக் கட்டிப்போட்டிருக்கும்போது... அவர் 'நீ சரியான ஆம்பளையா இருந்தா கட்டை அவிழ்த்துவிடு’, 'சரியான வீரனா இருந்தா...’ என்றெல்லாம் சொல்லி உங்களை உசுப்பேத்துவார். அவர் எது சொன்னாலும் ஒரு ஜென் துறவி போல அமைதி காத்து, உங்கள் வேலையில் கவனமாக இருக்கவேண்டும். அமாவாசை அன்று அமைச்சர் பதவி பறிபோவது எவ்வளவு உண்மையோ, அதேபோலத்தான் கட்டவிழ்த்துவிடப்பட்ட ஹீரோ உங்களை அடித்துத் துவைப்பான் என்பதும்!

• உங்களது அலுவல் சார்ந்த மிக முக்கிய(?!) ஃபைல், கேசட், பென் டிரைவ் என எதுவாக இருந்தாலும் பல பிரதிகள் எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். ஒன்று மட்டுமே உள்ளதெனில், அது கடைசியில் ஹீரோவிடம் சென்றடையும் என்பதுதான் உலக நியதி. க்ளைமாக்ஸில் அந்தச் சிறு பென் டிரைவை வைத்துதான் ஹீரோ உங்கள் முதுகில் குத்துவார்!

• வரிசையில் நின்று காத்திருந்து ஒரு பொருளை வாங்குவது என்பது, ரேஷன் கடைகள், டிக்கெட் கவுன்டர்கள் போன்ற இடங்களில் செய்யவேண்டிய நல்ல பழக்கம். ஹீரோ கொடுக்கும் அடி, உதையைக்கூடவா  வரிசையில் சென்று வாங்குவது? கும்பலாகப் போய் அட்டாக் பண்ணுங்க... குஜாலா இருங்க!

• கடத்தி வரப்பட்ட ஹீரோயின் ஒளிந்துகொள்கிறார். அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை எனில், பதட்டப்படாதீர்கள். ஹீரோயினுக்குத் தும்மலோ, அவர் வைத்திருக்கும் செல்போனுக்கு இன்கமிங் காலோ வந்தே தீரும். அதுவரை அமைதி காக்கவும்!

• வில்லன்கள் பரவலாகச் செய்யும் தவறு, 'டாய்ய்ய்ய்ய்ய்’ என்று கத்திக்கொண்டே கத்தியால் குத்தச் செல்வது. ஹீரோக்கள் அந்தச் சத்தத்திலேயே சுதாரித்துவிட மாட்டார்களா? உங்களுடைய‌ கத்தி மட்டும்தான் பேச வேண்டும், நீங்கள் கத்திப் பேசக் கூடாது!

• ஹீரோவை அடிக்கும்போது ரத்தம் வராமல் அடிக்க வேண்டும். ரத்தத்தைப் பார்த்த பின்னர்தான் பல ஹீரோக்களுக்கு வீரமே வரும். ஆக, ரத்தம், சத்தம் இரண்டுமே உங்கள் வெற்றிக்கு உதவாது!

• நீங்கள் இந்தி பேசுபவராக இருந்து, ஹீரோ தமிழ் பேசுபவராக இருந்தால் ஹீரோவிடம் இந்தியில் பேசி, அவரைக் குழப்புவதுதான் புத்திசாலித்தனம். அதைவிட்டு, தமிழில் பேசி உங்கள் திட்டங்களை எல்லாம் விவரித்து நீங்களே ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்காதீர்கள்!

நம்ம வில்லன்கள் ரொம்பப் பாவம் பாஸ்!

• குதிரை ரேஸ் பந்தயம், டெண்டர் ஏலம்விடும் இடங்களுக்கு எல்லாம் ஹீரோ இருக்கும் சமயம் போகவே போகாதீர்கள். பந்தயமோ, டெண்டரோ எப்படியும் ஹீரோதான் ஜெயிப்பார். அதுவும் இல்லாமல் பல சமயங்களில் தான் ஏலம் எடுக்காமல் ஏலத் தொகையை அதிகமாக்கி உங்களை நஷ்டப்படுத்திவிடுவார். அதனால், உங்கள் பொன்னான நேரமும் பொன்னும் பொருளும்தான் விரயம் ஆகும்!

• ஹீரோவின் நண்பன், தோழி... ஏன் காதலியைக்கூட கடத்தி நீங்க சித்ரவதை செய்யலாம். ஆனால், ஹீரோவின் அம்மா, தங்கச்சியை மட்டும் டச் பண்ணிடாதீங்க. ஏன்னா, அம்மா சென்ட்டிமென்ட்தான் ஒரு பூனையைக்கூட புலி ஆக்கும். அதனால், ஹீரோவின் அம்மா கால்ல விழுந்து ஆசீர்வாதம் வாங்கிவெச்சுக்கங்க. அது எதிர்காலத்துல எப்படியும் உதவும்!

• வரலாற்றைத் திரும்பிப் பார்த்தால், வளவளன்னு பேசித்தான் வில்லன்கள் தோல்வி அடைந்திருக்கிறார்கள். நீங்கள் பேசப் பேசத்தான் அவர்களுக்கு ஏதேனும் ஐடியா தோன்றி உங்களை வெற்றிகொள்கிறார்கள். துப்பாக்கி வெச்சிருக்கீங்களா... சட்டுபுட்டுனு சுட்டுப்புடுங்க. பேசித் தீர்க்கிறதை விட்டுட்டு தீர்த்துட்டுப் பேசுங்க. ஆனா, ஒன் பாயின்ட்... நெஞ்சுல சுடுறப்ப டாலரை விட்டுத் தள்ளி சுடுங்க. டாலர்ல சுட்டுத்தான் நிறைய ஹீரோக்கள் தப்பிச்சுருக்காங்க!

நம்ம வில்லன்கள் ரொம்பப் பாவம் பாஸ்!

• துப்பாக்கியில் தோட்டா தீர்ந்திடுச்சுன்னாலும் தோட்டா இருக்கிற மாதிரியே, பில்டப் கொடுத்துட்டே இருங்க!

• பில்டப் கொடுப்பதிலும், பன்ச் வசனம் பேசுவதிலும் நம் ஹீரோக்களை யாராலும் அடித்துக்கொள்ள முடியாது. அதிலும் சண்டைனு வந்தா, 'அடிச்சுக்கவே’ முடியாது. அதனால், 'எப்படியும் நீங்கதான் ஜெயிக்கப் போறீங்க.. அதனால 'லாஸ் கன்ட்ரோல் ஸ்கீம்’ படி இன்னின்ன ஏற்பாடுகளைப் பண்ணிக்கலாம்’னு சொல்லி சமாதான உடன்படிக்கை போட்டுக்கங்க. ஏன்னா, அடியைக்கூடத் தாங்கிடலாம். ஆனா, அவங்க பேசுற பன்ச் வசனங்களைத் தாங்கிக்கவே முடியாது!

• நீதி, நேர்மை, நியாயம், தர்மம் இதற்கெல்லாம் கட்டுப்பட்டே ஆகணும்னு சொல்றது ஹீரோ மாதிரி நல்லவங்களுக்குத்தான். நீங்க அதையும் தாண்டிக் கொடூரமானவங்க. உங்களுக்கு அது தேவையே இல்லை. அதனால் ஹீரோ ஆயுதம் இல்லாம நிக்கிறப்ப, நீங்களே அவருக்கு ஆயுதம் கொடுக்கிறதோ அல்லது உங்க ஆயுதத்தைக் கீழே போடுறதோ வேண்டாம். ஹீரோ வெறுங்கையோட இருக்கிறப்பவே, நீங்க பட்டுனு காரியத்தை முடிச்சிடுங்க. என்னதான் மத்தவங்களுக்கு அவர் ஹீரோவா இருந்தாலும், உங்களுக்கு அவர்தான் வில்லன். அதனால் உத்தமனா இருக்க முயற்சி செய்யாதீங்க... அப்படி நீங்க உத்தமனாவே இருந்தாலும், உங்களை 'உத்தமவில்லன்’னு சொல்லாது இந்த உலகம். ஏன்னா, எ வில்லன் இஸ் ஆல்வேஸ் வில்லன்தான்!