Published:Updated:

நான் இப்பவும் எப்பவும் ஹீரோதான்!

நான் இப்பவும் எப்பவும் ஹீரோதான்!

பிரீமியம் ஸ்டோரி

"நான் இப்பவும் எப்பவும் ஹீரோதான்!"
நான் இப்பவும் எப்பவும் ஹீரோதான்!
நான் இப்பவும் எப்பவும் ஹீரோதான்!
பாரதி தம்பி
படங்கள்:கே.ராஜசேகரன்
நான் இப்பவும் எப்பவும் ஹீரோதான்!

'நாளை உலகை ஆள வேண்டும் உழைக்கும் கரங்களே' என்கிறது காலர் டியூன்.

"வணக்கம்... நான் ராமராஜன் பேசுறேன்!" -எத்தனை நாளாச்சு ராமராஜன் குரல் கேட்டு? வளசரவாக்கம் வீட்டில் நுழைந்தபோது பஞ்சு மிட்டாய் கலர் சட்டையில் கை குவித்து வரவேற்கிறார் 'மேதை'! ஒரு காலத்தில் தமிழ் சினிமாவின் வசூல் மன்னன். ஏன் ஓடுகிறது, எதற்கு ஓடுகிறது என்பதே தெரியாமல் ராமராஜன் படங்கள் ஓடிய காலங்கள் உண்டு. ஆனால், இப்போது...

"அதெல்லாம் ஒரு காலம் சார். 88, 89, 90 இந்த மூணு வருஷத்துல மட்டும் என்னோட 20 படங்கள் 100 நாள் ஓடுச்சு. மதுரை நாட்டியா தியேட்டர்ல 'கரகாட்டக்காரன்' 485 நாள் ரெகுலர் ஷோ. அந்த ரசிகர்கள் அப்படியேதான் இருக்காங்க. இன்னமும் ராமராஜன் படங்களுக்குன்னு ஒரு மதிப்பு இருக்கு. அவங்களை நம்பித்தான் 'மேதை'ன்னு அடுத்த படத்தோடு வர்றேன். இது என்னோட 44-வது படம். ராமராஜன் படத்துக்கு உண்டான எல்லா அம்சங்களும் இருக்கும். என்ன ஒண்ணு... ராஜா அண்ணன் மியூஸிக் மட்டும் இல்லை. ராஜாண்ணனுக்குச் சம்பளம் குடுக்குற அளவுக்கு நம்ம மார்க்கெட் இல்லை!"

நான் இப்பவும் எப்பவும் ஹீரோதான்!

"இவ்வளவு வருஷமா எங்கே போயிருந்தீங்க, என்ன பண்ணிட்டு இருந்தீங்க?"

"2001-ல் 'சீறிவரும் காளை', 'பொன்னான நேரம்'னு ரெண்டு படம் பண்ணேன். ரெண்டுமே கை கொடுக்கலை. எவ்வளவோ கஷ்டம். நிறைய பணப் பிரச்னை. என்னை மாதிரி காசு பார்த்தவனும் இல்லை. என்னை மாதிரி காசை இழந்தவனும் இல்லை. சம்பாதிச்ச பணத்தை முறையா சேர்த்துவெச்சிருந்தா இன்னிக்கு 500 கோடி கையில இருந்திருக்கணும். ஒண்ணுமே இல்லாமப் போச்சு. சொந்த வாழ்க்கையிலயும் நிறைய அடி. பையன் இப்படி இருக்கானேன்னு நினைச்சு எங்க அம்மா, அப்பாவுக்கு ரொம்பக் கவலை. இந்த எட்டு வருஷத்துல அந்தக் கவலையிலயே அவங்க இறந்துட்டாங்க. ஆனாலும், நான் அதை எல்லாம் நினைச்சு மனம் தளரலை. சினிமாவை விட்டுப் போகணும்னு நினைக்கலை. நிறைய திரைக்கதைகள் எழுதியிருக்கேன். ஸீன்கள் பண்ணியிருக்கேன். ஆயிரம் பேர், ஆயிரம்விதமாக் கிண்டல் பண்ணாலும் சினிமா மேல உள்ள அந்தப் பசி மட்டும் அடங்கலை!"

"பிரபு, கார்த்திக் எல்லாம் கேரக்டர் ரோல் பண்ண ஆரம்பிச்சுட்டாங்களே... நீங்க அதுபோலப் பண்ண மாட்டீங்களா?"

"இல்லை சார். நாம ஒண்ணும் பெரிய ஹீரோ ஆகணும்னு நினைச்சு சினிமாவுக்கு வரலை. மேலூர் டூரிங் டாக்கீஸ்ல டிக்கெட் கிழிச்சுட்டு இருக்கும்போது சினிமாவுல நடிக்கணும்னு ஆசை மட்டும்தான் இருந்துச்சு. எப்படியாச்சும் ஒரு ஸீன், ரெண்டு ஸீன்ல தலைகாட்டிட்டா போதும்னு மெட்ராஸ§க்கு ஓடிவந்தேன். வந்த இடத்துல அசிஸ்டென்ட் டைரக்டராகி, டைரக்டராகி, ஹீரோவாகி அப்படியே பிக்-அப் ஆச்சு. அவ்வளவு பெரிய ஹீரோ ஆவேன்னு நினைச்சதே இல்லை. என் திறமையைவிட அதிகமான பேரும், புகழும், பணமும், வெற்றியும் எனக்குக் கிடைச்சுது. அதனால் அந்த ரூட்டுலயே போயிடலாம்னு பார்க்குறேன். கேரக்டர் ரோல்ல நடிக்கச் சொல்லி எத்தனையோ வாய்ப்புகள் வந்துச்சு. பெரிய சம்பளம் கூடத் தர்றேன்னு சொன்னாங்க. எனக்கு இருக்குற பணக் கஷ்டத்துக்கு நடிச்சிருக்கலாம். ஆனா, நான் முடியாதுன்னுட்டேன். நடிச்சா ஹீரோதான் சார். அப்படி முடியலேன்னா சினிமாவை விட்டு ஒதுங்கிடுவேன். இனிமே படமே கிடைக்கலேன்னாலும் பரவாயில்லை... 'கரகாட்டக்காரன்'னு ஒரு படம் பத்தாதா சார்? அந்தப் படம், தமிழ் சினிமா இருக்குற வரைக்கும் ராமராஜன் பேர் சொல்லும்!"

"பெரிய வசூல் ஹீரோவா இருந்துட்டு திடீர்னு ஏன் இந்த வீழ்ச்சின்னு யோசிச்சீங்களா?"

"சொன்னா நம்ப மாட்டாங்க சார். எல்லாம் ஜாதக அமைப்புதான் காரணம். இன்னிக்கு பிரதீபா பாட்டீல் இந்தியா ஜனாதிபதியா இருக்காங்க. அவங்க ராஜஸ்தான்ல கவர்னரா இருக்கும்போது 'இவங்கதான் இந்தியாவோட ஜனாதிபதியா வரப்போறாங்க'ன்னு யாராலயும் சொல்ல முடிஞ்சுதா? ஒரு ஜனாதிபதியால் பதவிப் பிரமாணம் செஞ்சு வைக்கப்பட்ட பிரதீபா பாட்டீல் இன்னிக்கு எல்லா கவர்னர்களுக்கும் பதவிப் பிரமாணம் செஞ்சுவைக்கிற ஜனாதிபதி. எப்படி இது? எல்லாம் காலநேரம்தான்!"

"இப்ப தமிழ் சினிமா நிறைய மாறிடுச்சே... உங்களால சமாளிக்க முடியுமா?"

நான் இப்பவும் எப்பவும் ஹீரோதான்!

"சினிமாவுக்குன்னு ஓர் இலக்கணம் இருக்கு சார். அது எல்லாக் காலத்துலயும் ஒண்ணுதான். சி... னி... மா... தான். அதை னிசிமா, மானிசி அப்படின்னு எல்லாம் மாத்த முடியாது. மாறிடுச்சுன்னு சொல்றீங்க. இப்போ எந்தப் படம் ரெகுலர் ஷோ ஓடுது சொல்லுங்க? எல்லாம் ஒரு ஷோ, ரெண்டு ஷோதான். காரணம்? போட்ட காசை உடனே எடுக்கணும். தயாரிப்பாளர்கள் எல்லாருக்கும் உடனடி லாபம்தான் நோக்கமா இருக்கு. ரெண்டு கோடி கையில இருந்தா படம் எடுத்து வித்து ரெண்டே மாசத்துல லாபம் பார்க்கணும். நல்ல கம்பெனின்னு பேர் எடுக்கணும், நிலைச்சு நிக்கணும்னுலாம் யாருக்கும் ஆசை இல்லை. 25 நாள் ஓடுற படத்தை 30 கோடி கொட்டி எடுத்தா அப்புறம் எப்படி சார் சினிமா உருப்படும்?"

"இடைப்பட்ட காலத்தில் சினிமாவில் உங்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் யார்?"

"நடிகர்கள், நடிகைகள், தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் இப்படி நான் அறிமுகப்படுத்தின பலர் இன்னிக்கும் பேர், புகழ், வசதியோடு நல்லா இருக்காங்க. ஆனா, 'என்னண்ணே, நல்லா இருக்கீங்களா?'ன்னு ஒரு போன் கூட

நான் இப்பவும் எப்பவும் ஹீரோதான்!

யாரும் பண்ணது இல்லை. ராமராஜன் எங்கே இருக்கான்னுகூடப் பலருக்குத் தெரியாது. ஆனா, 'இந்த கேரக்டர் இன்னிக்கு நம்மளால சினிமாவுல ஓஹோன்னு இருக்கு'ன்னு நமக்குத் தெரியும். ஆனா, அதைப் பத்திலாம் நான் வருத்தப்படலை. நாளைக்கு 'மேதை' நல்லா ஓடுச்சுன்னா இதே ஆளுங்க மறுபடியும் வருவாங்க. அதுதான் சினிமா!"

" 'ராமராஜன் கலர்'னு கிண்டல் பண்ற அளவுக்கு ஏன் இந்த மாதிரி கலர்லயே டிரெஸ் போடுறீங்க?"

"அப்படியே பழகிப்போச்சு சார். எம்.ஜி.ஆரைப் பார்த்துதான் இந்த மாதிரி கலர்ல டிரெஸ் போட ஆரம்பிச்சேன். எல்லோரும் சொல்லிச் சொல்லி இப்பக் கொஞ்சம் குறைச்சிருக்கேன்!"

நான் இப்பவும் எப்பவும் ஹீரோதான்!
நான் இப்பவும் எப்பவும் ஹீரோதான்!
                            
      
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு