கிராமத்துப் படம் என்றாலே மதுரைதான் என்ற க்ளிஷேவை உடைத்து, கதைக் களத்தை தஞ்சா வூருக்குக் கடத்தி இருக்கிறார், அறிமுக இயக்குநர் ஏ.சற்குணம். உர மூட்டைகள், உழவு மாடு, விதை நெல், கூட்டுறவு சொசைட்டி, பூச்சி மருந்து, நெற்கதிர் என்று மருத நிலம் அப்படியே திரையில். 'அங்க நெருதுளி ஆவுது', 'ஆயி' என்பதாக அசல் வட்டார வழக்கும் ஆங்காங்கே ஈர்க்கிறது. யமஹா, பல்சர், வெள்ளைச் சட்டை வேட்டி, பீர் குடி இளைஞர்கள், கிரிக்கெட் சிறுவர்கள், துபாய் சம்பாத்தியப் பெற்றோர் கள், கிராமத்துத் திருவிழா 'ரீட்டா' டான்ஸ், மாட்டு வண்டி என சமகாலக் கிராமம் அச்சு அசலாக! கிராமத்து உதார் சண்டியராக விமல். முன் பின் இருக்கை பேருந்துப் பெண்களிடம் அடுத்தடுத்து 'சைன்' போட்டு மயக்கி, பார்க்கும் பெண்களிடம் எல்லாம் 'கட்டிக்கிறேன்னு சொல்லு!' என்று காதலாகிக் கசிந்துருகி, ஃபுல் மப்பில் 'ஆங்... ஃப்ரைட் ரைஸ் ஒண்ணு, ஆம்லேட் ஒண்ணு!' என்று டாஸ்மாக் பார் சைட் டிஷ் காசை அமுக்கி.... தமிழ் சினிமாவின் தற்போதைய ஹீரோக்கள் எவரும் பிரயோகிக்காத அஸ்திரங்களால் மனதைக் கொள்ளைகொள்கிறார். பாக்கெட் பேனா சீப்பும், பவுடர் கர்ச்சீப்புமாக 'வெள்ளுடை வேந்தன்' விமல் நடிப்பில் அத்தனை யதார்த்தம்.
ஸ்கூல் பொண்ணுபோலவே குட்டிப் பெண்ணாக இருக்கும் ஓவியா ஓவிய அழகு ப்ளஸ் குறும்பு. விமலிடம் சிரித்துவிட்டு, "சிரிச்சே ஸீன் போட்டேன்... விட்டுட்டான்!" என்று தோழிகளிடம் 'களுக்'கும்போதும், பாவாடையைத் தூக்கிச் செருகி நாற்று நடும்போதும் இயல்பும் நேர்த்தியுமான வார்ப்பு.
'களவாணி'யின் மிகப் பெரிய பலம் சரண்யாவும் இளவரசுவும். "ஆடி போயி ஆவணி வரட்டும்... அவன் டாப்பா வருவான்" என்று சரண்யா கண்கள் விரியச் சொல்லும்போது எல்லாம் கை தட்டல் அள்ளுகிறது. துபாய் ரிட்டர்ன் அப்பாவாக 'களவாணி' மகனைச் சமாளிக்க முடியாமல் திண்டாடி தியேட்டரில் தீபாவளிப் பட்டாசு கொளுத்துகிறார் இளவரசு. மிரட்டல் வில்லன் உடல் மொழி திருமுருகனிடம் கனகச்சிதம்!
'கோர்ட் வாசலையே மிதிக்காம சொந்தக் காசு 200 ரூபா போட்டு எனக்கு டைவர்ஸ் வாங்கிக் கொடுக்குறதுல உங்களுக்கு என்னடா சந்தோஷம்!' என்று புலம்புவதும் 'உங்க கால்ல விழுந்து கும்புடுதேன்... அந்தப் பொண்ணு பாலிடாயில் குடிக்கலை!' என்று கதறிச் சிதறுவதுமாகக் காமெடி போதை ஊட்டுகிறார் கஞ்சா கருப்பு.
|