நீண்ட இடைவெளிக்குப் பிறகு வரும் ஜாக்கி சான் படம். எத்தனை எதிர்பார்ப்புடன் விசில் அடிக்கத் தயாராக தியேட்டரில் அமர்ந்திருப்போம். ஆனால், படம் துவங்கி சுமார் 20 நிமிடங்கள் கழித்து, ஜாக்கி சான் திரையில் தோன்றுகிறார். தளர்ந்த உடல், முதிர்ந்த தோற்றம், கூன் விழுந்த நடை, நரைத்த முடிகள்... நூடுல்ஸ் சாப்பிடுகிறார், ஈ அடிக்கிறார், குளியலறைக் கதவுக் கைப்பிடியினைச் சரி செய்கிறார்... ஒரு குட்டிப் பையனுக்கு கராத்தே சொல்லித் தருகிறார்... ஓவர்.
ஆம், 'தி கராத்தே கிட்' படத்தின் ஹீரோ ஜாக்கி சான் அல்ல. ஹாலிவுட் ஹீரோ வில் ஸ்மித்தின் மகன் ஜேடன் ஸ்மித் என்ற 12 வயதுச் சிறுவன்தான் ஹீரோ. ஜாக்கி சானுக்கு, குணச்சித்திர வேடம். ஜாக்கி அடக்கி வாசித்தாலும், அதற்கும் சேர்த்து ஆக்ஷன் ஆர்.டி.எக்ஸ் வெடித்திருக்கிறான் ஜேடன்.
1984-ல் வெளியான 'தி கராத்தே கிட்' என்ற படத்தின் ரீ-மேக் இந்தப் படம். தந்தையை இழந்த ஜேடன், அமெரிக்காவில் இருந்து சீனாவுக்குக் குடி பெயர்கிறான். புதிதாகக் குடி வந்திருக்கும் ஜேடனை, முறைப்படி கராத்தே கற்றுக்கொண்டு இருக்கும் அந்த ஏரியா ஜூனியர் தாதா வம்புக்கு இழுத்து அடித்து வெளுக்கிறான். ஒரு முறை ஜேடனை அந்தக் கும்பலின் தாக்குதலில் இருந்து காப்பாற்றுகிறார் ஜாக்கி. தொடரும் சம்பவங்களில் ஜேடன் அந்தக் கும்பல் கலந்துகொள்ளும் கராத்தே போட்டித் தொடரில் போட்டியிட வேண்டிய நிர்பந்தம்.
கொஞ்சமும் இரக்கம் காட்டாமல் மூர்க்கமாகத் தாக்கி எதிராளியை ஊனப் படுத்துவது அவர்களின் அதிரடி வியூகம். ஜேடனுக்கு கராத்தே கற்றுக்கொடுக்கிறார் ஜாக்கி. போட்டித் தொடரில் விறுவிறுவென அரை இறுதிக்கு முன்னேறும் ஜேடனை ஆட்ட விதிகளை மீறிக் காலில் பலமாகத் தாக்கிக் காயப்படுத்துகிறான் எதிரணி வீரன். இதனால் அவன் ஆட்டத்தில் இருந்து விலக்கப்பட்டு, ஜேடன் இறுதிப் போட்டிக்குத் தேர்வாகிறான். அங்கு அவனை எதிர்பார்த்து ஆக்ரோஷமாகக் காத்திருப்பது அந்த ஜூனியர் தாதா. உடைந்த காலுடன் ஜேடன் ஜெயித்தானா என்பது நெகிழ்ச்சி க்ளைமாக்ஸ்!
|