மணிரத்னத்தின் மாடர்ன் ராமாயணம்! காட்டு வாழ் மக்களின் தலைவன் விக்ரம்(ராவணன்). அவரது தங்கச்சி ப்ரியா மணி (சூர்ப்பனகை). என்கவுன்ட்டர் ஸ்பெஷலிஸ்ட் எஸ்.பி. பிருத்விராஜ் (ராமன்). அவரது மனைவி ஐஸ்வர்யா ராய் (சீதை).
அரசாங்கத்தைப் பொறுத்தவரையில் விக்ரம்... குற்றவாளி. அவரைப் போட்டுத்தள்ள அலைகிறார் எஸ்.பி. பிருத்விராஜ். போலீஸின் தேடுதல் வேட்டையில் சிக்கி குதறப்படுகிறார் ப்ரியாமணி. கொதித்துக் கொந்தளிக்கிற விக்ரம், ஐஸ்வர்யாவைக் காட்டுக்குக் கடத்துகிறார். அங்கே, பழி வெறியைத் தாண்டி ஐஸ் மேல் விக்ரமுக்கு வேறுவிதமான காதல் முளைக்கிறது. இவர் காதலில் குழைய, பிருத்வி வேட்டை வெறியில் அலைய... மெகா மோதலுக்குப் பிறகு நடப்பது அதிரடி க்ளைமாக்ஸ்!
கிடுகிடு மலை மேல் திடுதிடுவென விக்ரம் நிற்கிற ஆரம்பக் காட்சியே ஐஸ் கத்தி. காட்டு நதியில் விழுந்து நீந்தி, படகில் ஐஸ்வர்யாவை அவர் கடத்துகிற துவக்கக் காட்சியிலேயே துள்ளி நிமிர்கிறது தியேட்டர். அங்கே இருந்து, தொங்கு பாலத்தில் நடக்கிற க்ளைமாக்ஸ் மோதல் வரை நிச்சயமாக இது விஷ§வல் விருந்து. மலை உச்சியில் கொண்டுவந்து ஐஸ்வர்யாவை விக்ரம் சுடப் போக, 'என் முடிவு உன் கையில இல்லை' என்றபடி திகீரென ஐஸ் மலையில் இருந்து குதிக்கிற காட்சி... அற்புதம். அதேபோல் மழை, சகதி, மலைக் குகை, நதிகள் எனக் கடந்து போகிற பல காட்சிகளில் இன்ச் இன்ச்சாக மிளிர்கிறது தொழில்நுட்ப உழைப்பு.
ஆனால், அதன் பிறகு வரிசை கட்டி வருகிற பெரும்பாலான காட்சிகளில் உணர்ச்சிகளும் இல்லை... கதைக்கான நியாயங்களும் இல்லை. ஐஸைப் பார்த்ததுமே 'உசுரே போகுது...' என உடனடியாக உருகுகிறார் விக்ரம். ஆவேசமான காட்டு மனிதனுக்குள், தலைவனுக்குள் இவ்வளவு அவசரமாகவா காதல் பூத்துவிடும்? அங்கேயே அந்தப் பாத்திரத்தின் சூடு குறைந்து விடுகிறதே? ப்ரியாமணி ஃப்ளாஷ்பேக் தவிர, ஐஸ்வர்யாவுக்கு விக்ரம் மேல் ஈரமோ, நியாயமோ தோன்றுகிற ஒரு தருணம்கூடப் படத்தில் இல்லை. இன்னொரு பக்கம் பிருத்விராஜின் தேடல் வேட்டையிலும் சுவாரஸ்யமான ஐடியாக்கள் இல்லை.
|