முட்டி மோதி முறைத்துக்கொண்டு எதிரும் புதிருமாக நிற்கும் இரண்டு பெரியவர்களை 'ரெட்டைச்சுழி' பசங்க சேர்த்துவைக்கும் கதை!
கதர்ச் சட்டை பாலசந்தருக்கும் தோழர் பாரதிராஜாவுக்கும் 40 ஆண்டு காலப் பகை. அது ஊரில் இருக்கும் நண்டு சிண்டு பட்டாளத்தையும் இரண்டு அணிகளாகப் பிரிந்து மோதிக்கொள்ளவைக்கிறது. மோதலால் பிரிந்த இதயங்களைக் காதலால் இணைப்பதுதானே, தமிழ் சினிமா சரித்திரம்!
பாலசந்தர் வீட்டு ஆரி(அறிமுகம்), பாரதிராஜா வீட்டு அஞ்சலி இடையே காதல். காதலர்களைச் சேர்த்துவைக்க, பெரியவர்கள் இருவரும் பகை மறந்து பச்சை கொடி காட்டினார்களா என்பது க்ளைமாக்ஸ்!
தமிழ் சினிமாவின் கம்பீர இயக்குநர்களை ஒருங்கிணைத்த கதைக் களத்துக்காகவே அறிமுக இயக்குநர் தாமிராவுக்கு ஒரு பெரிய சபாஷ். படம் நெடுக வாண்டுகள் லூட்டி என்றாலும், ஆங்காங்கே வாழைப்பழ ஊசியாகப் பேசும் அரசியல்... நல்ல ரசனை. ஒரு குட்டிப் பெண்ணுக்கு குஷ்பு என்று பெயரிட்டு, 'குஷ்பு நீ எதுவும் பேசாதே. நீ எது சொன்னாலும் பிரச்னை ஆகுது!', 'குஷ்பு கோயில் வந்துருச்சு பார்...
செருப்பை வெளியவே கழட்டிப் போடு!' என்று ஆங்காங்கே கலாய்த்து இருப்பது செம ஜாலி ஐடியா. 60 வயதுக்கு மேல் வளர்ந்த குழந்தைகளாகவே நடமாடும் இரு மனிதர்களை பெரியமனுஷத்தனம் நிரம்பிய குழந்தைகள் தங்கள் வழிக்குக் கொண்டுவரும் களம் கலர்ஃபுல். ஆனால், அதைத் திருத்தமான திரைக்கதையில் பொருத்தி இருக்கலாம்.
புகார் சொல்ல வந்த பால்காரரிடம் பூர்ஷ்வாத்தனம்பற்றி வகுப்பு எடுக்கும் தோழர் பாரதிராஜா, 'தோழர்' வேலராகக் கனகச்சிதம். கண்ணாமூச்சி விளையாட்டில் ஆகாத வீட்டுச் சிறுவனைப் பிடித்துவிட்டு கடுகடுக்கும்போதும், 'உசிரைவிடப் பிடிச்சிருக்கு' என்று அஞ்சலி சொன்னதும் துடிதுடிக்கும்போதும்... பாவனை ராஜா! பழம் பெருமை பேசும் கதர்ச் சட்டை காங்கிரஸ்காரராக பாலசந்தர் பக்கா பாத்திரம். 'என் ஆணவம் செத்துப் போச்சுடா!' என்று நெகிழ்கிற இடத்தில்... பலேசந்தர்.
அத்தனை பெரிய வாண்டுக் கூட்டத்தில் தனிகவன ஈர்ப்பு வாசிப்பது சிறுவன் அக்ஷய்தான்(அறிமுகம்). பாராதிராஜாவுடன் சரிக்குச் சமமாகக் கை கட்டி நடந்தபடி, 'வணக்கம் தோழர்... அப்புறம் இயக்க வேலைகள்லாம் எப்படிப் போகுது?' என்று விசாரிக்கும்போதும், 'அட! என்னைப் பார்த்துப் பேசாதீங்க. கண்டுபிடிச்சுருவாங்கள்ல!' என்று அதட்டும்போதும்... அட்டக£சப்படுத்துகிறான். படத்தையே தூக்கி நிறுத்தும் பாத்திரங்களைத் தாங்கிய அஞ்சலிக்கு இந்தப் படத்தில் பகுதி நேர வேலைகூட இல்லை.
படத்தைக் காமெடியாகவே நகர்த்திச் செல்வதா அல்லது சீரியஸ் தொனி சேர்ப்பதா என்ற குழப்பத்தில் இருந்து இயக்குநர் விடுபடுவதற்குள் படமே முடிந்துவிடுகிறது. வாண்டுகள் சூட்டிகையாக இருக்க வேண்டியதுதான்... அதற்காக எல்லா நேரமும் அதிகப்பிரசங்கித்தனமாகப் பேசி, ஹீரோவின் காதலுக்குச் சொதப்பல் ஐடியாக்கள் கொடுத்துக்கொண்டேவா இருப்பார்கள்?
'பசங்க' படம் மாதிரியே எதிர்எதிர் வீடு. அதில் அப்பாக்கள். இதில் தாத்தாக்கள். இருவர் வீட்டு வாண்டுக்களின் மோதல். அதே ஸ்டைல் காதல். தற்செயலாக நிகழ்ந்தது என்றாலும், ஒப்பிடத் தோன்றுகிறது.
சேரன்மாதேவி மண்ணையும், மக்களையும் கண்முன் நிறுத்துகிறது செழியனின் ஒளிப்பதிவு. கார்த்திக் ராஜாவின் பின்னணி இசை மனசை வருடும் மயிலிறகு. பாலசந்தர் வராமலேயே அவரது கைத்தடி, செருப்பினை வைத்து பில்ட்-அப் கொடுக்கும் இறுதிக் காட்சியின் சுவாரஸ்யத்தைப் படம் நெடுகவே தெளித்து இருக்கலாம்!
இமயத்தையும் சிகரத்தையும் இணைந்து நடிக்கவைத்ததே சாதனைதான். ஆனால், அது மட்டுமே போதாதே!
|