விகடன் பொக்கிஷம்
ஹாலிடே விகடன்
சினிமா
Published:Updated:

சுறா -சினிமா விமர்சனம்

சுறா
பிரீமியம் ஸ்டோரி
News
சுறா

சினிமா விமர்சனம்

குப்பத்தை ஆக்கிரமித்து தீம் பார்க் கட்ட நினைக்கிற வில்லனைத் தீர்த்துக் கட்டுபவனே... சுறா!

மீனவக் குப்பத்தைச் சேர்ந்த மக்களுக்கு விஜய்தான் காட்ஃபாதர். அவர்களுக்கு நல்ல வீடு கட்டிக் கொடுப்பதுதான் விஜய்யின் லட்சியம். மந்திரி தேவ் கில் (அறிமுகம்) குப்பத்தை வளைத்து, தீம் பார்க் கட்ட நினைக்கிறார். அப்புறம் என்ன? ஹீரோ பில்ட்-அப், அடிதடி, பஞ்ச் டயலாக்கைத் தொடர்ந்து மந்திரியை முந்திரி மாதிரி வறுத்து எடுக்கிறார் விஜய். சுபம்!

விஜய்யின் 50-வது படம். கொஞ்சம் எதிர்பார்த்துப் போனால், 'பாட்டி வடை சுட்ட மாதிரி' பழைய கதை. இளைய எம்.ஜி.ஆர். ஆக்க, முடிந்த அளவுக்கு முழு வேகத்தில் விஜய்யின் புகழ் பாடி இருக்கிறார் இயக்குநர் எஸ்.பி.ராஜகுமார்.

வழக்கம்போல ஆட்டத்தில் பின்னிப் பெடல் எடுக்கிற விஜய், நடிப்பில் வித்தியாசம் காட்ட வேண்டுமே? 'வேட்டைக்கார'னில் கை வீசி நடந்தவர், இதில் கையைப் பின்னால் கட்டிக்கொள்கிறார். மற்றபடி 'மேல கை வைக்கிறதுக்கு முன்னாடி ஒரு தடவைக்கு நூறு தடவை யோசிக்கணும். கை வெச்சுட்டா, அப்புறம் யோசிக்கவே முடியாது' என்று தன் புகழ் பாடுகிறார். 'எனக்குப் பின்னாடி ஒரு கூட்டமே இருக்கு. ஒவ்வொருத்தரும் சிங்கக் குட்டிங்க' என்று ரசிகர் புகழ் பாடுகிறார். திடீரென்று தமிழர்களுக்காகக் கவலைப்படுகிறார். நல்லவர்களுக்கு உதவுகிறார். சினிமா டு கோட்டைக்கு 'இதுதான் ரூட்' என்று சொல்லிவிட்டார்கள்போல.

நாயைக் காணவில்லை என்பதற்காக மேக்கப் போட்டுக்கொண்டு கடலில் தற்கொலை செய்யப் போகும் (உட்கார்ந்து யோசித்திருக்கிறார்கள்போல!) லூசுப் பெண்ணாக... தமன்னா. படத்தில் நடிப்பைவிட அதிகமாக இடுப்பைத்தான் காட்டுகிறார். தமன்னா வந்ததுமே டூயட் வந்துவிடுகிறது. படத்தில் இரண்டே இடங்களில் ஆறுதல் அளிப்பது அம்பர்லாவாக வரும் வடிவேலு. என்கவுன்ட்டர் கைதிக்குப் பயந்து 'சேவை' செய்யும்போதும், கிங்காங்கை போலீஸ் என்று நினைத்துப் பணம் கொடுக்கும்போதும் வயிற்றைப் பதம் பார்க்கிறார்.

புதுமுக வில்லன் தேவ் கில்லுக்கு வழக்கமான கோடம்பாக்க வில்லன் கேரக்டர். 'அவனைச் சும்மா விடக் கூடாது' என்று உறுமிக்கொண்டு கடைசி வரை சும்மாவே இருக்கிறார். நேரம் கிடைக்கும்போது எல்லாம் அவரும் தன் பங்குக்கு விஜய் புகழ் பாடுகிறார். வில்லன் குடிசைகளுக்குத் தீ வைக்கும் காட்சியைப் பார்த்து எவ்வளவு நாட்களாகிவிட்டது? ஆஹா!

'குப்பத்துக்கே விஜய்தான் வழிகாட்டி' என்று படம் முழுக்க பில்ட்-அப் கொடுக்கிறார்கள். ஒரு காட்சியில்கூட விஜய் குப்பத்துக்குச் சேவை பண்ணியது மாதிரி இல்லையே? அதிகபட்சம் ரேஷன் கார்டுகளைப் பாதுகாக்கிறார். அங்கும் இங்கும் நடக்கிறார். அவ்வளவே!

சுறா -சினிமா விமர்சனம்

விஜய் கடலில் காணாமல் போகும்போதும், தீயில் மாட்டிக்கொள்ளும்போதும் குப்பத்து மக்கள் எப்படித் துடிதுடிக்க வேண்டும்? ரொம்பச் சாதாரணமாக 'சுறா போயிட்டான்' என்று அடுத்த வேலையைப் பார்க்க ஆரம்பித்துவிடுகிறார்கள்.

குப்பத்துக்கு வீடு கட்ட நூற்றுச் சொச்சம் கடத்தல் லேப்-டாப்களை விற்று, 100 கோடி சம்பாதிக்கிறார் விஜய் (எங்கேயோ போயிட்டீங்க பாஸ்!). குப்பத்து மக்கள் நடுத் தெருவில் நிற்கும்போது, ஆடி காரில் வலம் வருகிறார். ஜிகுஜிகு கோட், டை கட்டி ஆடுகிறார். வீடு கட்டுகிற வழியைத்தான் காணோம். இருக்கிற இம்சைகள்

சுறா -சினிமா விமர்சனம்

போதாது என்று 'எப்பவும் வெடிக்க ரெடியா இருக்குற எரிமலை மாதிரியே இருக்குறான்', 'சுனாமி வருது... சூறாவளி வருது... ரெண்டும் சேர்ந்து வருது' இப்படிப் படம் முழுக்க ஜால்ரா அடித்து ஜவ்வு கிழிக்கிறார்கள். மணிசர்மாவின் இசையில் தெலுங்கு இறக்குமதியாக இருந்தாலும் சில பாடல்கள் மனதுக்குள் ரவுண்டு கட்டுகிறது. ஆக்ஷனில் தீப் பிடிக்கும் ஏகாம்பரத்தின் கேமரா, காதல் காட்சிகளில் கவிதை வாசிக்கிறது.

சுறா, மனிதர்களைத் தாக்கும் என்பது விதி!

 
சுறா -சினிமா விமர்சனம்
-விகடன் விமர்சனக் குழு
சுறா -சினிமா விமர்சனம்