ஜெயா ப்ளஸ் டி.வி-யில் ஹலோ டாக்டர், லிவ் அண்ட் டைன் போன்ற நிகழ்ச்சிகளை நடத்தி வருபவர் சரண்யா. ''ராஜ் டி.வி-யில் 2 வருஷம், ஜெயா ப்ளஸ்-ல் 1 வருஷம்னு எனக்கு 3 வருஷ அனுபவம். பெரியார் பல்கலைக்கழகத்தில் கரஸ்ல பி.ஏ., ஜர்னலிசம் ஃபைனல் இயர் படிக்கிறேன். டைம்ஸ் நவ், என்.டி.டி.வி. மாதிரியான சேனல்ல நியூஸ் ரிப்போர்ட்டர் ஆகி, பல விஷயங்களை அம்பலப்படுத்தி கலக்கணும் என்பதுதான் என்னோட ஒரே லட்சியம். அதுவரைக்கும் ஜெயா பயணம் தொடரும்'' என்பவர் தன்னுடைய 'லிவ் அண்ட் டைன்' நிகழ்ச்சி
மூலம் உலகத்தின் எந்த மூலையில் இருப்பவர்களுக்கும் சென்னையில் உள்ள ஸ்டார் ஹோட்டல்கள், ரிசார்ட்டுகளைப்பற்றி அறிமுகப்படுத்தி வருகிறார்!
'ஸ்டார்ஸ் உங்களுடன்', 'லைட்ஸ் கேமரா ஆக்ஷன் கட்', 'கவுன்ட் டவுன்' என ஜெயா டி,வி-யில் சினிமா தொடர்பான நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்குகிறார் வினோ. ஹலோ எஃப்.எம்-ல் அவர் நடத்தும் 'அஞ்சலி அபார்ட்மென்ட்' நிகழ்ச்சி செம பிரபலம். ''அஞ்சலி அபார்ட்மென்ட் நிகழ்ச்சியில் ஒரு அபார்ட்மென்ட்டின் மேனேஜருக்கும், குடியிருக்கும் எனக்குமான பிரச்னைகள்தான் கதை. என் கேரக்டர் பேரு சந்திரமுகி. இப்போ நான் தமிழ்நாடு முழுக்கப் பிரபலம் தெரியுமா?'' என்பவருக்கு லீவு கிடைக்காததால் சம்மருக்குக்கூடசென்னையைத் தாண்ட முடியவில்லை என்பதுதான் இப்போது ஒரே பிரச்னை. இருந்தாலும், ஒருநாள் லீவில் திருப்பதி சென்று பாலாஜியைத் தரிசனம் செய்து திரும்பியிருக்கிறார் வினோ!
|