மிக முக்கியமான முயற்சிதான். திகில், த்ரில் இணைந்த இந்த ஃபேன்டஸி தமிழுக்குப் புதுசுதான். ஆனாலும், இவன் 'ஆயிரத்தில் ஒருவன்'தானா?
12-ம் நூற்றாண்டில் சோழ வாரிசையும், பாண்டியர்களின் குலதெய்வச் சிலையையும் ஒரு தீவில் பதுக்கிவைக்கிறார்கள் சோழர்கள். சில நூற்றாண்டுகளுக்குப் பிறகு ஒரு தொல்பொருள் ஆராய்ச்சியாளர் தொலைந்துபோக, அவரைத் தேடும் படலமாகவும், அந்தச் சிலையை மீட்டெடுக்கவுமாகப் புறப்படுகிற குழுவில் ரீமாசென், ஆன்ட்ரியா, கார்த்தி! பற்பல பலிகளுக்குப் பிறகு, இலக்கை அடைகிறார்கள். அங்கே, ஆச்சர்ய அதிர்ச்சியாகச் சில நூறு சோழ வம்சத்தினர் காலங்கள் கடந்தும் பிழைத்திருக் கிறார்கள். அவர்களின் மன்னனாக பார்த்திபன். திடீர்த் திருப்பமாக வில்லி அவதாரம் எடுக்கிறார் ரீமாசென். சோழர்களைப் பாதுகாத்து தாய் மண்ணுக்கு அழைத்து வரும் பொறுப்பு கார்த்தி கையில். யார் ஜெயித்தார்கள் என்பது கிளைமாக்ஸ்!
சில பல ஆங்கிலப் படங்களின் சாயல்கள் தெளித்த களம். சாகசம், காதல், மோதல், பீர், போர் எனப் பல விஷயங்களைக் கோத்து செம நீளமாகச் சொல்லியிருக்கிறார் இயக்குநர் செல்வராகவன். மெக்கனஸ் கோல்டு, மம்மி, அபோகலிப்டோ, டாவின்சி கோட் போன்ற ஹாலிவுட் ஹிட் படங்களின் சாயலிலேயே நகர்கிற கதையில், முதல் பாதி கவர்ச்சி ப்ளஸ் அதிர்ச்சி வசன ரகம். சோழ வம்சத்தினர் இன்னமும் ரகசியமாக வாழ்கிறார்கள் என்று துவங்கும் பின்பாதி குழப்ப ரகம்.
படத்தில் இரண்டு நாயகர்கள். முதல் பாதி கார்த்தி. இரண்டாவது பாதி ரீமாசென். ஆதிவாசிகளைப் பார்த்து அலறுவதும், ஆன்ட்ரியாவைப் பார்த்து உளறுவதுமாக காமெடி ரௌடியாக கார்த்தி. விதவித எக்ஸ்பிரஷன்களைக் கொட்டிக்கொண்டே இருக்கிறார். பேய் பிடித்ததும் கூச்சலிட்டபடியே கார்த்தியைச் சுடுவதில் இருந்து தூள் பறக்கிறது ரீமா ராஜ்ஜியம். விரகதாபம் காட்டி பார்த்திபனை வீழ்த்தத் துடிக்கும் காட்சிகளில் கில்லி வில்லி. பேய் பிடிக்கும்போது மட்டும் நடிப்பு காட்டும் ஆன்ட்ரியா, மற்ற நேரங்களில் ரீமாவுக்குப் போட்டியாக இடுப்பு காட்டுகிறார்.
குனிந்தபடி நடந்து மிருகம் போலச் சண்டை போடும் சோழ மன்னன் பார்த்திபனின் பாடி லாங்குவேஜ் வித்தியாசம். ரீமாவின் சூழ்ச்சியில் ஏமாந்து கண் கலங்கும்போதும், இயந்திரத் துப்பாக்கிகளைப் பார்த்து 'இது என்ன களம்?' என்று வியப்பு காட்டும்போதும்... அப்ளாஸ்! ஆற்றங்கரையோரம் 'தங்களைக் காப்பாற்ற சோழர்களின் கப்பல் வந்துவிட்டது' என்று விழி விரித்து உயிர் உறையுமிடத்தில் ஈழத்தை நினைவூட்டும் வலி.
|