Published:Updated:

பாய்ச்சல் விஜய்... பதில் சொல்லும் அஜீத்!

பாய்ச்சல் விஜய்... பதில் சொல்லும் அஜீத்!

பிரீமியம் ஸ்டோரி

24-06-09
ஆஹா... அரசியல் ஆரம்பம்!
பாய்ச்சல் விஜய்... பதில் சொல்லும் அஜீத்!
பாய்ச்சல் விஜய்... பதில் சொல்லும் அஜீத்!
 
பாய்ச்சல் விஜய்... பதில் சொல்லும் அஜீத்!
பாய்ச்சல் விஜய்... பதில் சொல்லும் அஜீத்!
ப.திருமாவேலன், ஜாசன்

பாய்ச்சல் விஜய்... பதில் சொல்லும் அஜீத்!

ரசியலின் அடுத்த அதிரடி விஜய் வடிவத்தில் வருகிறது!

சினிமாவும் அரசியலும் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பங்காளிகள். கோடம்பாக்கம், சினிமா தயாரிப்பதைப் போலவே கட்சிகளையும் அவ்வப்போது உற்பத்தி செய்து வருகிறது. எம்.ஜி.ஆர். தொடங்கிவைத்த ரிலே ரேஸ், இப்போது விஜய் கையில்! அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட யோசித்துக்கொண்டு இருக்கிறார் இளைய தளபதி.

அரசியலுக்குள் அடி எடுத்துவைப்பது விஜய்யின் திடீர் முடிவல்ல. யாருக்கும் சொல்லாமல், ரகசியமாக எழுப்பி வந்த கோட்டை அடுத்த வாரத்தில் வெளிச்சத்துக்கு வரப்போகிறது. இதற்கு முக்கியமான காரணம், அவரது அப்பா எஸ்.ஏ.சந்திரசேகரன். திராவிட இயக்கச் சிந்தனையும் இடது சாரி மனோபாவமும்கொண்ட இந்த இயக்குநரின் பல படங்கள் 80-களில் தீ வசனங்களைப் பேசியவை. கண்கள் சிவக்க விஜயகாந்த் உமிழ்ந்த பல வார்த்தைகளுக்குப் பிதாமகன் இவர்தான். அப்படிப்பட்டவர் தன் மகனைச் சும்மா விடுவாரா?

"விஜயகாந்த்தைக் கோபாவேச மனிதனாகக் காட்டி, இன்றைய பிம்பத்தைக் கட்டியமைத்தவன் நான்தான். அவரைத் தலைவனாக்கிய முன் அனுபவம் எனக்கு இருக்கிறது" என்கிறார் எஸ்.ஏ.சி. '2016 - உன் கையில்!' என்று விஜய் ரசிகர்கள் போஸ்டர் அடிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். சமீபத்தில் டெல்லி நிறுவனம் ஒன்றும் தமிழகக் கல்வி நிறுவனமும் தனித் தனியாக எடுத்த கருத்துக் கணிப்பு, விஜய் கிராஃப் ஏறிக்கொண்டு இருப்பதாகச் சொல்கிறது.

சரியாகச் சொன்னால், விஜய் சினிமாவுக்கு வந்து 17 ஆண்டுகள் ஆகின்றன. எதிர்காலத்தைக் கணிக்கத் தெரிந்த சந்திரசேகரன், விஜய்யின் முதல் படத்துக்கு வைத்த தலைப்பு, 'நாளைய தீர்ப்பு'. கவனிக்கத்தக்க கவர்ச்சி அம்சங்களை வைத்துதான் ஆரம்பகாலப் படங்கள் அமைந்தன. சூப்பர் ஹிட்கள் அடுத்தடுத்து வந்தாலும், சறுக்கல்களும் இயல்புதானே! தன் இடத்தைத் தக்க வைத்துக்கொள்ளும் வகையில் ரசிகர் மன்றங்களை நற்பணி மன்றங்களாக மாற்றிச் சேவைகள் செய்ய ஆரம்பித்தார் விஜய்.

பாய்ச்சல் விஜய்... பதில் சொல்லும் அஜீத்!

விஜய்க்கு 60 ஆயிரம் மன்றங்கள் இருப்பதாகவும் 25 லட்சம் ரசிகர்கள் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. ரஜினி படம் ரிலீஸ் ஆகும்போது இருக்கும் ஆர்ப்பாட்டங்கள், பந்தா படாடோபங்கள் இவருக்கும் உண்டு. கட்-அவுட்டுக்குப் பாலபிஷேகம், பன்னீர் அபிஷேகம் ஒரு பக்கம் என்றால், விஜய்யின் பிறந்த நாள்களில் மாவட்டங்கள்தோறும் பள்ளிப் பிள்ளைகளுக்கு நோட்டுப் புத்தகம், ஆட்டோக்கள், தையல் மெஷின் என உதவித் திட்டங்கள் மறுபக்கம். உச்சகட்டமாக, ஓசூர் ரசிகர் மன்றத்தினர் தனியாக ஒரு பள்ளிக்கூடமே ஆரம்பித்தார்கள். விஜய் தன் சகோதரி வித்யா பெயரில் வைத்திருக்கும் டிரஸ்ட் சார்பில் ஏழை மாணவர்களைப் படிக்கவைக்க உதவிகள் செய்ய ஆரம்பித்தார். பத்தாம் வகுப்பில் நன்றாகப் படித்து மேல் படிப்பு படிக்க வழியற்ற சசிகலா என்ற மாணவியை கம்ப்யூட்டர் படிக்கவைத்தார், வேலூர் பூ வியாபாரி மகனை இன்ஜினீயரிங் படிக்கவைத்தார் போன்ற செய்திகள் அறிவிக்கப்பட்டன.

கடந்த ஆண்டு பிறந்த நாளின்போது 'உன்னால் முடியும்' என்று எழுதப்பட்ட பதாகையைப் பிடித்துக்கொண்டு நின்றார் விஜய். "இதுதான் ரசிகர்கள் இனிமேல் பிடிக்க வேண்டிய மன்றத்துக் கொடி" என்றார். ''இன்றைய இந்த வளர்ச்சிக்குக் காரணம் விஜய்யின் உழைப்புதான்" என்று எஸ்.ஏ.சந்திரசேகரன் எதிர்பார்ப்பைத் தூண்ட... 'வில்லு' ரசிகர்களின் விசில் பறந்தது.

ஆனால், அன்று விஜய் அடக்கியே வாசித்தார். "என் ரசிகர்கள் எல்லாக் கட்சிகளிலும் இருக்கிறார்கள். நான் பொதுவானவன். ரசிகர்கள் தங்கள் அடையாளத்துக்காக ஒரு கொடி கேட்கிறார்கள். அறிமுகப்படுத்துகிறேன்" என்றவர், "மீண்டும் சொல்கிறேன், இது மன்றக் கொடி மட்டும்தான்" என்றார். இல்லை, இல்லை என்றாலே இருக்கிறது என்பதுதானே அரசியல் அர்த்தம்!

அரசியலுக்கு வருவதற்கான க்ரீன் சிக்னல் என்பதால், மாவட்டத் தலைவர் பதவியைப் பிடிக்கப் பகீரத முயற்சிகள் நடந்தன. பெரம்பூரில் ரசிகர்கள் இரண்டு தரப்பாகப் பிரிந்து கைகலப்பில் இறங்கினர். தூத்துக்குடியில் கட்-அவுட் வைப்பதில் தி.மு.க - விஜய் தரப்புக்குள் மோதல் நடந்தது. அரசியலில் அனல் கிளப்பிய இலங்கைத் தமிழர் விவகாரத்தை விஜய்யும் விடவில்லை. போரை நிறுத்தும்படி பிரதமருக்குத் தந்தி கொடுக்கச் சொன்னார். 'ஒரு கோடி பேர் கொடுக்க வேண்டும்' என்றும் உத்தரவு வந்தது. தியேட்டர் கவுன்ட்டரில் நிற்பது மாதிரி தந்தி அலுவலகம் முன்கூடினார்கள் ரசிகர்கள். அடுத்து, உண்ணாவிரதம்!

பழ.நெடுமாறன், தா.பாண்டியன் ஆகியோர் இருந்த மேடையில், ''சீமானும் அமீரும் தனிப்பட்ட முறையில் பேசினால் குற்றம். ஆனால், விஜய் ரசிகர்கள் சேர்ந்து சொன்னால், அது சட்டம். விஜய் கோட்டையைப் பிடிப்பது நிஜம்" என்று வலுவாக அரசியல் விதைத்தார் இயக்குநர் வி.சி.குகநாதன்.

பாய்ச்சல் விஜய்... பதில் சொல்லும் அஜீத்!

எல்லாமாகச் சேர்ந்துகொண்டுதான், இந்த ஜூன் 22 விஜய் பிறந்த நாளை கவனத்தோடு பார்க்க வைத்திருக்கிறது அவரின் ரசிகர்களை. கடந்த ஒரு மாத காலமாக விஜய்யும் சந்திரசேகரனும் பல்வேறு பிரமுகர்களிடம் கருத்துக் கணிப்பு நடத்தி வருகிறார்களாம். 'சின்ன வயசிலயே பெரிய கூட்டம் கூடிட்டு வருது. அதனால தாமதப்படுத்தாம கட்சி ஆரம்பியுங்கள்' என்று பெரும் பாலானவர்கள் சொல்லி வருகிறார்களாம்.

அனைத்து மாவட்டத் தலைவர்களும் கடந்த வாரத்தில் ஒருநாள் வரவழைக்கப்பட்டார்கள். அங்கு ஆழம் பார்க்கப்பட்ட விஷயம் - புதுக் கட்சி! கட்சியை ஆரம்பிக்க இதுதான் சரியான நேரம் என்று மாவட்டத் தலைவர்கள் அனைவரும் சொல்லி இருக்கிறார்கள். 'ரஜினி ஆரம்பிக்கிறேன், ஆரம்பிக்கிறேன் என்று சொல்லி ஏமாற்றம் தந்ததால், அவரது ரசிகர்கள் சோர்ந்து போனார்கள். நமக்கும் அப்படி ஆகிவிடக் கூடாது' என்று எஸ்.ஏ.சந்திரசேகரனின் மனதில் இருந்த அதே கவலையை இவர்களும் வெளிப்படுத்த, விஜய் கம்மென்று கேட்டுக்கொண்டாராம்.

'இன்றைக்கு இருக்கிற தலைவர்களுக்கு வயது ஆகிவிட்டது. உங்களைப் போன்ற இளைஞர்தான் வரணும்' என்று மற்றொருவர் சொல்ல, "ஏம்ப்பா, எனக்கு 35 வயசுதானே ஆகுது? அதுக்குள்ள என்ன அவசரம்?" என்று மடக்கினாராம் விஜய். "ராகுல் காந்திக்கு 38 வயசுதான். அஸ்ஸாம்ல மகந்தா சி.எம்.ஆக வந்தப்ப அவருக்கு 38 வயசுதான்னு சொன்னாங்க. அமெரிக்க ஒபாமாவுக்கே என்ன வயசுங்கறீங்க?" என்று தங்கள் இளைய தளபதியை மடக்கினாராம் ஒரு சூட்டிகையான மாவட்டத் தலைவர். அதற்குப் பலத்த கைத்தட்டல்.

"நிறைய படங்கள் கமிட் ஆகியிருக்கும்போது அரசியல் வேணுமா?" என்று விஜய் கேட்க, "நீங்க கட்சி அறிவிங்க. மற்றதை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம். படத்தில் நடிப்பதை நிறுத்தச் சொல்லவில்லையே!" என்று பதில் வர, ஆழ்ந்த யோசனையில் இருந்தாராம் விஜய். இத்தனை விவாதங்கள் இதற்கு முந்தைய சமயங்களில் நடந்தது இல்லை என்கிறார்கள்.

இதற்கெல்லாம் விஜய்யின் அப்பா சந்திரசேகரன் என்ன சொல்கிறார்?

"92-ல் விஜய் ரசிகர் மன்றம் ஆரம்பமானது. 5 ஆண்டுகள் கழித்து, அதை நற்பணி மன்றம் ஆக்கினோம். போன வருடம் அதை இயக்கமாக ஆக்கினோம். முன்பு விஜய் ரசிகர்களாக இருந்தவர்கள் இன்று பொதுச் சேவைத் தொண்டர்கள்! விஜய் 166 ஏழைக் குழந்தைகளைப் படிக்கவைக்கிறார். இந்த ஆண்டு பிறந்த நாளின்போது 3 இடங்களில் கம்ப்யூட்டர் மையங்கள் திறக்க இருக்கிறோம். விஜய் செய்யும் சேவையை இயக்கத் தொண்டர்களும் தொடர்ந்து வருகிறார்கள்" என்றவரிடம், "நீங்கள்தான் அரசியலுக்கு நுழைய விஜய்யைக் கட்டாயப்படுத்துவதாகச் சொல்கிறார்களே?" என்று கேட்டோம்.

"விஜய் இன்னும் சின்னக் குழந்தை இல்லை. சினிமாவுக்கு வர வேண்டும் என்று முடிவு செய்தவர் அவர்தான். அப்போது அதற்குத் தளம் அமைத்துக் கொடுத்தேன். இப்போது அரசியலுக்கு வர விஜய் விரும்புகிறார். அதற்கும் களம் அமைத்துத் தருகிறேன். அரசியலுக்கு வர அவருக்கு எல்லாத் தகுதிகளும் இருக்கின்றன. இந்த வருடம் கட்சி, அடுத்த வருடம் முதல்வர் என்றெல்லாம் அவசரக் கணக்கும் போட மாட்டார். இந்திய இளைஞர்களுக்கு ராகுல் காந்தியைப் போல தமிழக இளைஞர்களுக்கு விஜய் என்று ஆகும்! ஓர் உதாரணம் சொல்கிறேன்... 'ரசிகன்' படத்தைத் தெலுங்கில் பண்ண வந்த வாய்ப்பையும், 'ஒன்ஸ்மோர்' படத்தை ஹிந்தியில் பண்ணலாம் என்ற அழைப்பையும் நிராகரித்தவர் விஜய். அவருக்குத் தமிழன் என்பதில்தான் முழுப் பெருமை. பணமெல்லாம் இரண்டாம்பட்சம்தான். அவர் அரசியலுக்கு வருவார், வருவார்!" என்று கால, நேரம் சொல்லாமல் முடித்துக்கொண்டார் சந்திரசேகரன்.

இந்த முகாமில் இருந்து வரும் தீபாவளி ரிலீஸ் 'வேட்டைக்காரன்'. இது விஜய்க்கு 49-வது படம். 50-வது படத்துக்குத் தலைப்பு - 'உரிமைக் குரல்'!?

'உழைக்கிறவன் எங்கெல்லாம் இருக்கானோ, அங்கு எல்லாம் என் உரிமைக் குரல் ஒலிச்சிட்டே இருக்கும்' என்று எம்.ஜி.ஆர். கர்ஜித்த அதே சினிமா டைட்டில். விஜய் கர்ஜனை எப்போது?

பாய்ச்சல் விஜய்... பதில் சொல்லும் அஜீத்!
அஜீத் கருத்து என்ன?

'தளபதி' விஜய் முடிவைப் பார்த்துக்கொண்டு 'தல' அஜீத் களத்தில் குதிக்கலாம் என்ற எதிர்பார்ப்புகள் உண்டு. 'விஜய் உள்ளூர தி.மு.க. அனுதாபி' என்ற சித்திரிப்புகள் உள்ளதுபோல, 'அஜீத்துக்குப் பிடித்த தலைவர் ஜெயலலிதா' என்று சாயம் பூசும் ஜாலங்களுக்கும் பஞ்சம் இல்லை.

"அடுத்து நீங்கள்தானா, பாஸ்?" என்று அவரிடமே கேட்ட போது, "கன்னட நடிகர் ராஜ்குமார் சொன்ன வார்த்தைகளைத்தான் நான் இந்தக் கேள்விக்குப் பதிலாகச் சொல்ல முடியும். 'நான் அரசியலுக்கு நிச்சயம் வர மாட்டேன். ஏனென்றால், எனக்குப் பொய் பேசத் தெரியாது' என்று சொன்னார் ராஜ்குமார். இதுதான் என் கருத்தும், நிலையும். போதுமா? உங்கள் சந்தேகம் தீர்ந்ததா?" என்றார் அஜீத் 'அசல்' சிரிப்புடன்!

 

"நடிகர்கள் கட்சி தேறாது!"

நடிகர்கள் நாடாளக் கிளம்புவது குறித்து முன்னாள் அமைச்சரும், எம்.ஜி.ஆரின் நம்பிக்கைக்கு உரியவராக வும் இருந்த ஹண்டேயிடம் கேட்டோம். "எம்.ஜி.ஆரைப் பொறுத்தவரை கட்சியின் கடைசித் தொண்டன்கூட அவரைச் சந்தித்துப் பேசி கருத்துரைக்கலாம். ஏன், குறையே சொல்லலாம். அதுதான் அவரது பலம்.எல்லோரையும் கையில் பச்சை குத்திக்கொள்ள அவர் உத்தரவிட்டது எனக்குப் பிடிக்கவில்லை. அதனால் கட்சி அலுவலகத்துக்குச் சில நாட்கள் போகாமல் இருந்தேன். ஒருநாள் எனது மருத்துவமனைக்கு வந்துவிட்டார். கார ணம் கேட்டார். 'நான் விசுவாசமாக இருப்பேன். ஆனால், அடிமையாக இருக்க மாட்டேன்' என்றேன். என்னைக் கட்டிப்பிடித்துக்கொண்டார். 'நான் யாரையும் கட்டாயப்படுத்தவில்லை' என்றார். அவரைப் புண்படுத்திவிட் டோமோ என்று கண்ணீர்விட்டேன். அவர் யாரையும் இழக்க மாட்டார். எதிரியையும் நண்பனாக்கிக்கொள்ளும் திறமை அவருக்கு உண்டு. தன்னைக் கடுமையாக எதிர்த்த மதுரை முத்துவைக் கட்சியில் சேர்த்துக்கொண் டார். இது போன்ற தனித் திறமைகளால்தான் தி.மு.க-வை அவரால் வீழ்த்த முடிந்தது. அப்படிப்பட்ட எம்.ஜி.ஆருடன் யாரையும் ஒப்பிட முடியாது.

இப்போது நிறைய நடிகர்கள் கட்சி தொடங்குகிறார் கள். விஜயகாந்த் தனிக் கட்சி ஆரம்பித்தார். பத்து சத விகித வாக்குகளை வாங்கினார். அதனால் அவருக்குக் கிடைத்த பயன் என்ன? ஏதோ ஒரு கட்சியின் வாக்கு வங்கி குறையும். அவ்வளவுதான்! இன்னும் பத்துப் பதினைந்து வருடங்களுக்கு விஜயகாந்த் நிலை இது தான். ஓட்டு சிதறுவது தவிர, வேறு எதுவும் நடக்காது. தி.மு.க-வும் அ.தி.மு.க-வும் இன்று மிகப் பெரிய சக்தி கள். இதற்கு மாற்று எதுவும் இல்லை. புதிதாகக் கட்சி ஆரம்பிப்பவர்கள் கதையும் விஜயகாந்த் கதிதான். எம்.ஜி.ஆர். கட்சி துவங்கியபோது, தி.மு.க-வுக்கு எதிரான சக்தி என்பது வெற்றிடம்தான். அது எம்.ஜி.ஆரின் சாதுர்யத்தால் வெற்றி இடமானது. இப்போது வெற்றிடம் எதுவும் இல்லை" என்று தீர்க்கமாகச் சொல்கிறார் ஹண்டே!

 
பாய்ச்சல் விஜய்... பதில் சொல்லும் அஜீத்!
-
பாய்ச்சல் விஜய்... பதில் சொல்லும் அஜீத்!
                            
      
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு