தொப்பி, சோடாபுட்டி கண்ணாடி, வாக்கிங் ஸ்டிக் சகிதம் மூன்று அழகிகளுடன் கேட்வாக்கி ஆட்டத்துக்குத் திரி கிள்ளினார் பென்னி தயாள். தொடர்ந்து ராகுல் நம்பியார், ரஞ்சித், விஜய் யேசுதாஸ், நரேஷ் அய்யர், கிரிஷ், கார்த்திக் என்று பின்னணிப் பாடகர்கள் அட்டகாச அழகுடன் வர ஆரம்பித்தார்கள். மீசையையும் கிருதாவையும் இணைத்து 'அசல்' அஜீத் கெட்டப்பில் விஜய் யேசுதாஸ் கிட்டத்தட்ட மிரட்டல்!
கிரிஷ் மேடையில் எட்டிப்பார்க் கும்போது எல்லாம் கைத்தட்டிக் குவித்துவிட்டார் அவரது டார்லிங் சங்கீதா. முள்ளம்பன்றி முடியுடன் வாக்கிங் வந்த ரஞ்சித்துக்கு... ஆச்சர்யமாகப் பெண்கள் பக்கம்தான் எக்கச்சக்க மரியாதை.
அடுத்ததாக பாடகிகள் ரவுண்ட். சட்டை அணியாத ஆண் மாடல் களுடன் வந்து ஃபேஷன் ஷோவை அடுத்த உயரத்துக்கு எடுத்துச் சென்றனர். சுஜாதாவின் மகளும் பாடகியுமான ஸ்வேதா முதலில் மேடைக்கு வர, அவரைத் தொடர்ந்து சுமங்கலி, மதுமிதா, சாருலதாமணி, ஸ்ரீலேகா பார்த்தசாரதி, சுசித்ரா, மஹதி என அடுத்தடுத்து பளிச் புடவையில் பாலீஷ் பளபளப்பு காட்டினார்கள் குயில் குரல் லேடீஸ்.
''அப்பாவி கணக்கா லுக்கைப் போட்டாலும் இந்தப் பசங்கநாங்க மேக்கப் போடுறப்ப கலாய்ச்சுட்டாங்க. நான் அப்பதான் பக்காவா சேலை கட்டி நடந்து பழகுறேன். மனச்சாட்சியே இல்லாம, 'நடையா... இது நடையா?'ன்னு கிண்டல்!'' என்கிறார் சாருலதாமணி. ''நாங்க சும்மாவிடுவோமா? அவங்க ரிகர்சல் பண்றப்ப 'இது இசையருவிக்கு மாதிரி தெரியலையே. 'சிரிப்பொலி' சேனலுக்கு மாதிரி இல்ல தெரியுது'ன்னு வாரிட்டோம்ல!'' என்று சிரிக்கிறார் மஹதி.
|