ஹிந்திப் படங்களிலேயே செட்டில் ஆகக்கூடிய வாய்ப்புகள் ஏகப்பட்டது வந்தாலும் தமிழிலும் பல படங்களுக்கு விடாமல் இசைஅமைத்தார் ரஹ்மான். 'இந்திரா', 'மிஸ்டர் ரோமியோ', 'லவ் பேர்ட்ஸ்', 'சங்கமம்' போன்ற படங்கள் அப்போது வெளிவந்தன. இந்தப் படங்கள் ஓடாவிட்டாலும் பாடல்கள் ஹிட். 'இந்திரா' படத்தில் 'தொடத் தொட', 'நிலா காய்கிறது' போன்ற பாடல்களின் மெல்லிசை கிறங்கடித்தது. 'சங்கமம்' படத்தில் சங்கர் மகாதேவனின் குரலில் 'வராக நதிக்கரைஓரம்' பாட்டில் வங்காளத்தின் நாட்டார் இசையைப் பயன்படுத்தியிருந்தார் ரஹ்மான். அதே படத்தில் அவர் இசையமைத்த 'முதல் முதல்' என்கிற பாட்டு தேசிய விருதை வென்றது. 'லவ் பேர்ட்ஸ்' படத்தில் ராப் பாடகர் அப்பாச்சி இந்தியனைப் பாடவைத்திருந்தார் ரஹ்மான்.
ரஹ்மான் தன் இசையில் புதுப் புதுப் படிவங்களை அறிமுகப்படுத்துவதை ரசிகர்கள் ஆனந்தப் பரவசத்துடன் கவனித்தார்கள்.
அப்போது உலக இசைத் துறையில் பின்நவீனத்துவத்தின் தாக்கத்தில் ஏற்பட்ட மாற்றங்களில் ஒன்று, 'அழகான, இனிமையான குரல்தான் பாட வேண்டும் என்பது இல்லை. எப்படிப்பட்ட குரலும் அதன் தன்மைக்கேற்ப அழகானதே' என்பதுதான். மேற்கத்திய இசையில் ப்ரூஸ் ஸ்பிரிங்ஸ்டீன், டீனா டர்னர், ரிச்சர்ட் மார்க்ஸ், பிரயன் ஆடம்ஸ், பான் ஜோவி போன்றவர்கள் தங்களுடைய வித்தியாசமான கரகர குரலில் ஏகப்பட்ட ஹிட்களைக் கொடுத்துக்கொண்டு இருந்தார்கள். 'பாய் ஜார்ஜ்' என்கிற பாடகர் தன்னுடைய 'திருநங்கை'க் குரல் மற்றும் தோற்றத்தால் இசை மேடைகளில் கலக்கிக்கொண்டு இருந்தார். இதற்குஎல்லாம் சிகரம் வைத்தாற் போல் இருந்தது மைக்கேல் ஜாக்சனின் மிக வித்தியாசமான குரல்.
'சொப்ரானோ ஃபால்செட்டோ' என்கிற மேற்கத்திய இசைப் பிரிவின் கீழ் வரக்கூடிய ஜாக்சனின் குரல் பெண்மையும் ஆண்மையும் கலந்து ஒலிக்கக் கூடிய வித்தியாசமான ஒலி. ஒரு திருநங்கையின் குரல் என்றுகூடப் பல விமர்சகர்கள் அதைப் பாராட்டி இருக்கிறார்கள். அந்தக் குரலுக்கு இணையான வேறு ஒரு குரல் இந்த உலகத்தில் இல்லை என்பதே உண்மை. அவருடைய குரலுக்கும் இசைக்கும் பெரிய ரசிகராக இருக்கும் ரஹ்மானின் மனதில் பாடகர்களின் குரல் தன்மையைப் பற்றிய மதிப்பீடுகளும் புரட்சிகரமாக மாறியிருந்தன.
இசைக்கு அழகான குரல்தான் வேண்டும் என்பது இல்லை. வித்தியாசமான எந்தக் குரலுமே இசைக்கு ஏற்றதுதான். அதுவே ஒரு பாட்டுக்கு வேறுவிதமான ஏற்றத்தைத் தந்துவிடும் என்று நம்பும் ரஹ்மான், தன் இசையில் பலப் பல புதிய குரல்களை அறிமுகம் செய்ய வேண்டும் என்று தீர்மானித்திருந்தார். சினிமா இசை என்கிற இரும்புக் கோட்டையின் கதவுகள் இளம் பாடகர்களுக்காகத் திறக்கப்பட்டன.
உன்னிகிருஷ்ணன், சுஜாதா, சுரேஷ் பீட்டர்ஸ், சங்கர் மகாதேவன், சொர்ணலதா, ஹரிஹரன், மகாலக்ஷ்மி, சின்மயி என்று பல வித்தியாசமான குரல்களை ரஹ்மான் பயன்படுத்தத் தொடங்கினார். அவர்கள் பாடிய பாடல்களை வேறு 'பழக்கப்பட்ட' பிரபல பாடகர்கள் பாடியிருந்தால் அந்த ஓசை வித்தியாசமாக இருந்திருக்காது.
சந்தீப் சௌதா என்பவர் ஆரம்பக் காலங்களில் ரஹ்மானுடன் சேர்ந்து பணிபுரிந்தவர். பிறகு, தனியாக இசையமைக்கச் சென்றுவிட்டார். அவரை ஹிந்தியின் 'புவர் மேன்ஸ் ரஹ்மான்' என்பார்கள். ரஹ்மானின் ஸ்டைலிலேயே இசையமைக்கக்கூடியவர். ரஹ்மானின் தேதிகள் கிடைக்காத நிலையில் அவருடைய கடைக்கு முன்னால் கும்பல் கூடியது. ரஹ்மானைப் போலவே இசை போட்டுத் தரச் சொல்லிக் கேட்டார்கள், பல தயாரிப்பாளர்கள். அவரும் சில படங்களுக்கு அதே மாதிரி இசை போட்டுக் கொடுத்தார். ஆனால், ஒரு சில நாட்களுக்கு மேல் தாக்குப் பிடிக்க முடியவில்லை. பெரிய கும்பிடு போட்டுவிட்டார்.
|