Published:Updated:

சினிமா விமர்சனம் : முத்துக்கு முத்தாக

விகடன் விமர்சனக் குழு

சினிமா விமர்சனம் : முத்துக்கு முத்தாக

விகடன் விமர்சனக் குழு

Published:Updated:
 ##~##
'ஐ
ந்து பெண் பெற்றால் அரசனும் ஆண்டி ஆவான்.’ சரி, ஐந்து ஆண்கள் பெற்றால்?! தங்களது ஐந்து ஆண் குழந்தைகளைப் பாராட்டிச் சீராட்டி 'முத்துக்கு முத்தாக’ வளர்த்த பெற்றவர்களின் கதை!

இளவரசு - சரண்யா தம்பதியினர் தங்களின் ஐந்து பிள்ளைகளையும் தங்கமாகத் தாங்குகிறார்கள். பிள்ளை களும் அப்பா - அம்மா என்றால் உருகி மருகுகிறார்கள். திருமணம், வேலை என்று நான்கு மகன்களும் விலகிச் செல்ல, துணைக்கு இருந்த ஒரு மகனும் கொலைப் பழியில் சிறை செல்கிறார். மருமகள்களின் உதாசீனத் துக்கு ஆளாகித் தனித்துவிடப்படும் இளவரசு - சரண்யா தம்பதியினர் எடுக்கும் முடிவு, துன்பமும் துயரமுமான க்ளைமாக்ஸ்!

சினிமா விமர்சனம் : முத்துக்கு முத்தாக

அப்பா - அம்மா மீது பாச மழை பொழியும், காதலித்த பெண்ணைக்கூட விட்டுக்கொடுக்கும், சொன்ன சொல் கேட்கும் 'மகன்’களின் கதாபாத்திரங்களை வைத்து கதை பண்ணியிருக்கிறார் இயக்குநர் இராசுமதுரவன். 'இந்தக் காலத்துல இப்படிலாம் எந்தப் பசங்களைப் பார்க்க முடியுது!’ என்று தியேட்டரில் தாய்க் குலங்கள் உச்சுக் கொட்டுவது படத்தின் பலம். ஆனால், 'இந்தக் காலத்துல இப்படியா அழுவாச்சி காமிப்பாங்க!’ என்று  ரசிகர்கள் அங்கலாய்ப் பது பலவீனம்!

படம் நெடுக இடம், வலம் எனக் கிடைக் கும் சந்து இடைவெளிகளில்கூட புதுப் புது கேரக்டர்கள் தலை காட்டிக்கொண்டு இருந்தாலும், இளவரசு - சரண்யா ஜோடி மட்டுமே மனதில் நிற்கிறார்கள். உதடு கடித்து, கண்ணீர் உகுத்து, நெஞ்சில் அறைந்து அழுது, அன்பு வெளிப்படுத்தாமல் 'அண்டர்ப்ளே’ நடிப்பிலேயே உணர்வூட்டுகிறார் இளவரசு. முதல் கவளத்திலேயே ருசி உணர்ந்து சரண்யா மீது அர்த்தம் உள்ள பார்வை பார்த்து, 'இதுவரை வாழ்க்கைல உன்னைச் சந்தோஷமாத் தானம்மா வெச்சிருந்தேன்!’ என்று கேட்கும்போது நெகிழவைக்கிறார்!

'ஆஸ்துமா அம்மா’வாக சரண்யா. நட்ராஜ் இட்லித் தட்டோடு பஸ் ஸ்டாண்டில் கெஞ்சும்போது, 'ஏங்க சாப்பிட்டுப் போவோம்ங்க... இல்லைன்னா, பிள்ளை உக்கிருவான்!’ என்று இளவரசுவிடம் இறைஞ்சும் இடத்தில், தமிழக அம்மாக்களின் பிரதிபலிப்பாக மின்னுகிறார்.

சோகமும் சோகையுமாக நகரும் திரைக்கதையில் விக்ராந்த் - மோனிகா லவ் டிராக் மட்டும் ஒரு டீஸ்பூன் சுவாரஸ்யம். ஹாரிஸ் - ஓவியா காதல் காட்சிகள் சம்பிரதாயச் சடங்குகளாகக் கடந்து செல்கின்றன. இது ஜவுளிக் கடை டிரையல் ரூம் சீஸனோ... பெண்கள் உடை மாற்றுவதை வில்லன்கள் ரகசியமாகப்படம் பிடிக்கும் திருப்பத்துக்கு இந்தப் படமும் தப்பவில்லை! ஐந்து மகன்களுள் நட்ராஜிடம் மட்டுமே கதாபாத்திரத்துக்குத் தேவையான அழுத்தம் இயல்பாக வெளிப்படுகிறது.  

சினிமா விமர்சனம் : முத்துக்கு முத்தாக

ஸ்டீரியோ டைப் காட்சிகளுக்கு இடையில் சிங்கம்புலி காமெடி, கிளிஷேவாக இருந்தாலும் ஆறுதல் அளிக்கிறது. பேரக் குழந்தைகள் பெற்று எடுக்கும் வரை அன்பாக இருக்கும் அத்தனை மருமகள்களும் க்ளைமாக்ஸுக்கு முன்னர் வில்லி அவதாரம் எடுப்பது ஏன் டைரக்டர் சார்?

ஐந்து மகன்களும் அப்பா - அம்மா மீது அவ்வளவு உயிராக இருக்கும்போது, இறுதியில் ஏன் அவர்கள் அந்த அதிர்ச்சி நெகிழ்ச்சி அளிக்க வேண்டும்?  

இப்படியான கேள்விகள் எழாத வகையில், திரைக்கதையில் 'உயிரோட்டம்’ சேர்த்து இருந் தால், படத்தை 'முத்துக்கு முத்தாக’க் கொண்டாடி இருக்கலாம்!