பாப் மார்லே, எல்விஸ் ப்ரெஸ்லி, பீட்டில்ஸ், ஃபிராங்க் சினாட்ரா, ஸ்டீவி வொண்டர், சாந்தனா, ப்ரூஸ் ஸ்பிரிங்ஸ்டீன், குயீன், டிரேஸி சாப்மேன் போன்ற எத்தனையோ இசைக் கலைஞர்கள் அந்த சிந்தனையில் தாக்குண்டு, சம்பிரதாய இசையை உடைத்துப்போட்டு புதிய புதிய இசை வடிவங்களை உண்டாக்கியவர்கள். அந்த வகையில் பார்க்கப் போனால் தாரை, தப்பட்டை போன்ற விளிம்பு நிலை மக்களின் இசையைத் தமிழ்த் திரையில் அட்டகாசமாக அறிமுகப்படுத்திய பெருமைக்கு உரியவர் இளையராஜா.
ரஹ்மான் இந்திய இசையில் புகுந்து புறப்பட்ட அதே நேரத்தில் ஓசைப்படாமல் ஐரோப்பாவிலும், மத்திய அமெரிக்காவிலும், தென் அமெரிக்காவிலும் நாடோடி மற்றும் பழங்குடி மக்களின் இசை பொது மக்களின் மத்தியில் பெரிய வரவேற்பைப் பெற்று வந்தன. 'World music' எனப்படும் உலக இசைக்கான மேடைகளில் சாதி, மத, இன வேறுபாடுகளைக் களைந்த இசைக் கலைஞர்கள் ஒன்று கூடினார்கள். உலக அமைதி, வறுமையை ஒழிக்க நிதி திரட்டுதல், எய்ட்ஸ் நோய் ஒழிப்புப் பிரசாரம், அணு ஆயுத ஒழிப்புப் போராட்டம் போன்ற பதாகைகளைத் தாங்கி வெம்ப்ளி போன்ற மைதானங்களில் மாபெரும் இசை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. எத்தியோப்பியா வறுமைச் சாவுகள் உலகையே அதிரவைத்தபோது, அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் இசைக் கலைஞர்கள் ஒன்று கூடி, 'USA for Africa' என்கிற இசை ஆல்பத்தைக் கொண்டுவந் தார்கள். சாட்டிலைட் டெலிவிஷன் உபயத்தில் இந்த இசை நிகழ்ச்சிகளை உலகம் பூராவும் உள்ள இசை ரசிகர்களும் கண்டுகளித்தார்கள்.
இசை உலகில் ஏற்பட்டு வந்த இந்த மாற்றங்களை எல்லாம் ஆர்வத்துடன் கவனித்தபடி இருந்தார் ரஹ்மான். இசையில் புதிய மாற்றங்களைக் கொண்டு வர வேண்டும் என்று அவர் மனம் துடித்தது. அதன் அதிரடிப் பாய்ச் சலாக மணிரத்னத்தின் 'திருடா... திருடா' படத்தில் ஒவ்வொரு பாடலையும் ஒவ்வொரு ரகத்தில் இசையமைத்தார் ரஹ்மான். 'வீரபாண்டிக் கோட்டையிலே', 'கொஞ்சம் நிலவு, கொஞ்சம் நெருப்பு', 'தீ தீ தித்திக்கும் தீ' போன்ற பாடல்களின் இசைக் கோவைகள் ரசிகர்களுக்கு மிகப் புதிதாக இருந்தன. முதல் முறையாக அந்தத் தமிழ்ப் பாடல்கள் ஹிந்தி இசையின் டாப் 10 சார்ட்டுகளில் இடம் பெற்றன. அடுத்து வந்த 'டூயட்' படத்தில் ரஹ்மான் கதிரி கோபால்நாத்துடன் இணைந்து கொடுத்திருந்த சாக்ஸபோன் இசை வேறொரு தளத்தில் ரசிகர்களை மயக்கியது.
எல்பி ரெக்கார்டுகள் என்கிற இசைத்தட்டுகள் போய், அடுத்ததாக கேசட் வந்தது. அதற்கும் அடுத்தபடியாக சி.டி. என்கிற குறுந்தகடுகள் வந்ததுதான் இசைப்பதிவு டெக்னாலஜியில் ஏற்பட்ட மாபெரும் புரட்சி. சி.டி-க்களின் மூலம் இசைச் சந்தையில் வந்து குவிந்தன உலக இசைக் கலைஞர்களின் பாடல்கள். 'அடடா, இப்படிப்பட்ட உன்னதமான இசை உலகில் உள்ளதா?' என்று ரசிகர்கள் பரவசப்பட் டார்கள். அதே நேரம், பல இசையமைப்பாளர்களுக் குச் சுலபமாகக் காப்பி அடிக்கவும் இந்த சி.டி-க்கள் உதவின.
பிரபல ஹிந்தி இசையமைப்பாளர் ஆர்.டி.பர்மனைப் பற்றி ஒரு விஷயத்தைச் சொல்வார்கள். சி.டி, இன்டர்நெட், மியூஸிக் டவுன்லோட், இசை டி.வி. சேனல்கள் என்று எதுவும் இல்லாத அந்தக் காலகட்டத்தில் பர்மன் சற்று ஓய்வு கிடைத்தால், உடனே வெளிநாடுகளுக்குப் பறந்துவிடுவார். அங்கே வெளியாகி இருக்கும் புதிய இசைத் தட்டுகளை அப்படியே அள்ளுவார். இந்தி யாவுக்குத் திரும்பி அவற்றைப் போட்டுக் கேட்டு, அப்படியே சூடான சப்பாத்திகளாகப் பிரதி எடுத்துவிடுவார். 'ஷோலே' படத்தில் இந்தியா முழுக்கப் பிரபலமான 'மெஹ்பூபா'கூட அப்படிச் சுட்ட அரபிப் பழங்களில் ஒன்று என்கிறார்கள் இசை ரசிகர்கள்.
ஆரம்ப காலத்தில் டாக்டர் ஆல்பனின் இசைத் தொகுதிகளிலும், 'ஏஸ் ஆஃப் பேஸ்' போன்ற குழுக்களின் இசையிலும் கவரப்பட்ட ரஹ்மான் ('இந்தியன்' படத்தின் 'டெலிபோன் மணி போல்' பாடல் அதே சாயலைக்கொண்டது) பிற்பாடு அந்தப் பாதிப்புகளில் இருந்து தன்னை முழுவதுமாக விடுவித்துக்கொண்டார்.
இந்தியத் திரை இசையில் ஒரு மரபு உண்டு. 'பல்லவி, சரணம், பல்லவி' என்கிற இந்தச் சம்பிரதாயத்தை உடைத்து முதல் 'பின்நவீனத்துவ' இசை வடிவத்தைக் கொண்டுவந்தார் ரஹ்மான். அதற்குத் தமிழைவிட ஹிந்திப் பட உலகம் புதிய களத்தை உருவாக்கிக் கொடுத்தது. 1994-ம் வருடம் பிரபல இயக்குநர்களான சுபாஷ் கை, கோவிந்த் நிஹ்லானி இருவரும் ரஹ்மானைத் தங்கள் படங்களுக்காக 'புக்' செய்தார்கள். அவர்கள் மிகவும் நவீன சிந்தனை உள்ள இயக்குநர்கள் என்பதால், ரஹ்மான் புதிய இசையை அந்தப் படங்களில் கொண்டு வர ஆசைப்பட்டார். அதற்கான இசையை கம்போஸ் செய்யவும் ஆரம்பித்தார். ஆனால், அந்தப் படங்கள் விரைவிலேயே கைவிடப் பட்டன. மனம் தளர்ந்தார் ரஹ்மான். அப்போதுதான் ராம்கோபால் வர்மா 'ரங்கீலா'வுக்குப் பணியாற்றுமாறு அவரை அழைத்தார்.
'ரங்கீலா'... ரஹ்மானின் பிரமாண்ட வளர்ச்சியின் ஆரம்பம் அது!
|