விகடன் பொக்கிஷம்
தொடர்கள்
Published:Updated:

கதையோட தம்பிரான்!

கதையோட தம்பிரான்!


08-07-09
கதையோட தம்பிரான்!
கதையோட தம்பிரான்!
கதையோட தம்பிரான்!
 
ம.கா.செந்தில்குமார்
கதையோட தம்பிரான்!
கதையோட தம்பிரான்!

ம்பலத்தில் கருணாகரன் லோகிததாஸ். சுருக்கமாக ஏ.கே.லோகிததாஸ். மலையாள திரைக்கதை மும்மூர்த்திகளில் ஒருவர். எளிய மக்களின்வாழ்க்கை யைக் கதைகளாக்கி வெற்றி பெற்ற திரைக்கதை ஆசிரியர்.

ஹீரோவுக்கேற்ற கதை, ஹீரோ கைகாட்டுபவரே இயக்குநர் என்ற கமர்ஷியல் சினிமா உலகத்தில், கதைக்கு ஏற்ற நடிகர்களைத் தேர்வுசெய்து வெற்றிபெற்ற மகா கலைஞன். பல தமிழ் இயக்குநர்களின், ரசனையாளர்களின் ஆதர்ஷமான லோகிததாஸ்இன்று நம்மிடையே இல்லை. கடந்த வாரம் நிகழ்ந்த அவரது மரணம் மலையாள திரைப்பட உலகைப் பெரும் துயரில் ஆழ்த்தியிருக்கிறது.

1985-ம் ஆண்டு 'சிந்து சாந்தம் ஆகி ஒழுகுனு' என்ற நாடகத்தின் மூலம் மாநில அரசு விருதோடு வாழ்க்கையைத் துவங்கியவர் லோகி. அதன்பிறகு இவரை விருதுகள் தொடர்ந்து அலங்கரித்து வந்திருக்கின்றன. சிபிமலையிலுடன் இவர் சேர்ந்து பணியாற்றிய 'கிரீடம்', 'பரதம்' என அனைத்துப் படங்களும் சூப்பர் ஹிட். இவர் இதுவரை தனது திரைக்கதைக்காக 14 முறையும், டைரக்ஷனுக்காக 4 முறையும் ஃபிலிம் கிரிட்டிக் விருதுகளைப் பெற்றுள்ளார். திலீப், மீரா ஜாஸ்மின், மஞ்சுவாரியர் என்று லோகிததாஸ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்திய யாரும் இதுவரை சோடை போனதில்லை. மம்மூட்டி, மோகன்லால் என மலையாள சூப்பர் ஸ்டார்களோடு நெருக்கமான நட்பில் இருந்தாலும், லோகிததாஸ் யாரிடமும் கால்ஷீட் கேட்டுச் சென்றதில்லை.

லோகியைத் தேடித்தான் அத்தனை பேரும் வருவார்கள். லோகியின் மறைவுக்குப் பின் மலையாள பத்திரிகை ஒன்றுக்கு கமல்ஹாசன் அளித்த பேட்டியில், "இவர் முதல் படத்துக்குத் திரைக்கதை எழுதியதில் இருந்தே 'எனக்கொரு ஸ்கிரிப்ட்டை ரெடி பண்ணிக் கொடுங்கள்' என்று கேட்டுக்கொண்டே இருந்தேன். போன மாதம்கூட 'சந்திப்போமா?' என்று கேட்டுபோன் செய்தேன். 'வருகிறேன்' என்றார். சந்திக்காமலேயே விடைபெற்றுவிட்டார். லோகி என்னுடைய நண்பர் எனச் சொல்வது சரியில்லை. அவர் என் நெருங்கிய உறவினர்'' என உருக்கமாகச் சொல்லி இருக்கிறார்.

ஷூட்டிங்கை ஒரே ஷெட்யூலில் முடித்துவிடுவது லோகிததாஸின் ஸ்டைல். இதற்காக நடிகர்களிடம் கால்ஷீட் தேதிகள் கேட்கவும் மாட்டார். லோகிததாஸ் சொல்லும் தேதியில் அத்தனை பேரும் ஆஜராகிவிடுவார்கள். லோகிததாஸின் மிகப் பெரிய அடையாளம் எளிமை. கதை, வசனம் எழுத ஃபைவ் ஸ்டார் ஹோட்டல் அறைதான் வேண்டும் என தயாரிப்பாளரிடம் அவர் அடம்பிடித்தது இல்லை. சொர்ணூர் என்ற இடத்தில் உள்ள அரசாங்க கெஸ்ட் ஹவுஸில் 200 ரூபாய் வாடகை அறையில் தங்கி தன் படங்களுக்கான திரைக்கதையை எழுதுவது லோகியின் பழக்கம். கதைக்கு அவர் கொடுக்கும் முக்கியத்துவத்தால் மலையாளப் பட உலகமே அவரை 'கதையோட தம்பிரான்' என்று செல்லமாக அழைத்தது. எங்கே சென்றாலும் சாலையோர பெட்டிக் கடை களில்தான் சாப்பிடுவார்.

"ஆட்டோகிராஃப் பார்த்துவிட்டு என்னிடம் நட்பாக நெருங்கினார் லோகி. வாழ்வின் அடித்தட்டு மக்களின் மேல் அவர் மிகவும் பரிவுகொண்டு இருந் தார். அவரது வெற்றி பெற்ற திரைக்கதைகளில் அந்தப் பரிவு பளிச்சென்று தெரியும். அவரோடு இணைந்து ஒரு படமாவது செய்ய வேண்டும் என்பது என் கனவாக இருந்தது. லோகிததாஸின் மரணம் மொழிகளைக் கடந்து படைப்பாளிகள் அத்தனை பேருக்குமான இழப்பு'' என மனம் நெகிழ்கிறார் இயக்குநர் சேரன்.

'கதையோட தம்பிரான்' இப்போது நம்முடன் இல்லை. அவரது கதைகள் மட்டும் எப்போதும் நம்முடன் பேசிக்கொண்டு இருக்கும்!

 
கதையோட தம்பிரான்!
-
கதையோட தம்பிரான்!