"ஏன் சார், இவங்களையே ஹீரோயினா நடிக்க வெச்சிருக்கலாமே?'' என்றால், "கேட்டுப் பார்த்தேனே... 'எந்த டி.வி.டி-யும் பார்க்காம ஒரு ஹாலிவுட் படம் எடுங்க. அதில் நடிக்கிறேன்'னு சொல்லிட்டாங்க. புத்திசாலிப் பொண்ணு சார்''- சந்திப்புக்கு சரி ஜாலி பிள்ளையார் சுழி போடுகிறார் இயக்குநர் வெங்கட் பிரபு.
வறுத்தெடுக்கிற சென்னை வெயிலுக்குச் சில்லென்று இருக்கிற சௌந்தர்யாவின் ஸ்டுடியோவே குட்டி கோவாதான்!
'நீங்கதான் பாஸ் இப்போ ரிப்போர்ட்டர்' என்றதும் வெங்கட் பிரபு முகத்தில் எக்ஸ்ட்ரா எனர்ஜி. "பொதுவா புரொடியூசர்தான் கேள்வி கேட்பாங்க. இப்போ, என்னோட டர்ன். பார்ட்டி சிக்கிக்கிட்டாங்க''-சுட்டுவிரலை நெற்றிப்பொட்டில் தட்டிய வாறு ரவுசை ஆரம்பிக்கிறார் வெங்கட் பிரபு.
"முதன்முதலா புரொடக்ஷனில் இறங்குறீங்க... பெரிய ஹீரோக்களை வெச்சுப் படம் பண்ண முடியும். ஏன் வெங்கட் பிரபு அண்ட் கோ?'' என்று தன்னைப் பற்றிய பிட்டைப் போட்டார் பிரபு.
" 'சென்னை-28' படத்துக்கு கிராஃபிக்ஸ் வொர்க் ஆக்கர் ஸ்டுடியோவில்தான் நடந்தது. அப்பவே உங்களோடு சேர்ந்து ஒரு படம் பண்ணணும்னு முடிவு பண்ணியிருந்தேன். அதுக்குள்ள 'சரோஜா' கமிட் ஆகிட்டீங்க. உங்க இரண்டு படங்களையும் ஒரு ரசிகையா ரசிச்சுப் பார்த்தேன். ஆக்கர் ஸ்டுடியோவோட முதல் தயாரிப்பு, உங்களோட ஹாட்ரிக் வெற்றி இரண்டும் சேர்ந்து இருந்தா நல்லா இருக்குமே... அதான் 'கோவா'.
முதல் இரண்டு படங்களையும்விட, இன்னும் கலர்ஃபுல்லான கதையும், கூடுதல் காமெடி கோட்டிங்கும் வேணும்னு சொன்னேன். அடுத்த பத்தாவது நிமிஷத்தில், நான் எதிர்பார்த்த மாதிரி நீங்க ஒரு கதை சொன்னீங்க. எனக்கு ரொம்ப ஆச்சர்யமா இருந்தது பிரபு'' என்று சிரிக்கிறார் சௌந்தர்யா.
"ஹைய்யோ... நான் மனசுக்குள்ள ஒரு ஸ்க்ரிப்ட் ரெடி பண்ணி வெச்சிருந்தேன். நீங்க கேட்டதும் பில்டப் கொடுக்கிறதுக்காகக் கொஞ்ச நேரம் தீவிரமா யோசிக்கிற மாதிரி பாவ்லா பண்ணிட்டு, டக்குன்னு ரெடியா இருந்த கதையை எடுத்துவிட்டேன்'' என்று வெங்கட் பிரபு தன் தொழில் ரகசியம் சொல்லிச் சிரிக்கிறார்.
|