என் விகடன் - கோவை
என் விகடன் - மதுரை
என் விகடன் - புதுச்சேரி
என் விகடன் - திருச்சி
Published:Updated:

சினிமா விமர்சனம் : குள்ளநரி கூட்டம்

விகடன் விமர்சனக் குழு

##~##
'தி
வால்’ இளைஞன் காதல் சவாலில் ஜெயிக்கும் மற்றும் ஒரு தமிழ் சினிமா!

வெட்டி ஆபீஸர் விஷ்ணுவுக்கும் ரம்யா நம்பீசனுக்கும் காதல். ரம்யாவின் போலீஸ் அப்பா, 'மிலிட்டரி அல்லது குறைந்தபட்சம் போலீஸ் மாப்பிள்ளைக் குத்தான் என் பெண்’ என்கிறார் கறாராக. விஷ்ணுவின் அப்பாவோ, மழைக்குக்கூட காவல் நிலைய வாசல் மிதிக்கக் கூடாத வெறுப்பில் இருப்பவர்.  ஆனாலும் காதலில் ஜெயிக்க அப்பாவுக்குத் தெரியாமல், எஸ்.ஐ தேர்வில் கலந்துகொள்கிறார் விஷ்ணு. அங்கு தகுதியானவர்களைக் கட்டம் கட்டிக் கழிக்கப் பார்க்கும் 'நரிக் கூட்ட’ சதியை முறியடித்து, அப்பாவைச் சமாதானப்படுத்தி காதலியின் கை பிடித்தாரா என்பது க்ளைமாக்ஸ்!

சினிமா விமர்சனம் : குள்ளநரி கூட்டம்

தமிழ் சினிமாவின் 'யுத்த ரத்த’ பூமியான மதுரையில், கலகலவென ஒரு மென்மையான கதைக் களம் அமைத்ததற்கு அறிமுக இயக்குநர் ஸ்ரீபாலாஜியைப் பாராட்டலாம்!

அப்பாவி இளைஞனாக விஷ்ணு கச்சிதம். எசகுபிசகாக அறிமுகமாகும் ரம்யா நம்பீசனிடம் மிஞ்சி, பின் கெஞ்சும் காட்சிகளிலும்... பிற்பாதி லட்சிய வெறித் துரத்தல்களிலும் இயல்பாக ஈர்க்கிறார். படம் முழுக்க 'முகம் மட்டுமே காட்டும்’ ஹீரோயினாக ரம்யா நம்பீசன். விஷ்ணுவைக் கலாய்க்கும்போதும், மாமியாரின் அதீத அன்பு மழையில் அவஸ்தைப்படும்போதும் துறுதுறு.  

  'ரயில் ஓடுறதுக்கு முன்னாடி புகைவிட்டுப் பார்த்ததில்லை’ என்று தம்மடிக்கும் சூரி, டீக்கடை அப்புவைக் கலாய்க்கும் வைரவன், மினிஸ்டர் மச்சான் பாண்டி, அவரது அசிஸ்டென்ட் மாயி சுந்தர், 'இப்பதான் வெற்றி உன்னை நினைச்சேன், பழைய சோறு இருந்தாச் சாப்பிடுவானே’னு என்று வெள்ளந்தி அம்மாவாக வரும் பாண்டியம்மா, வடையை ஒளித்து வைத்து விஷ்ணுவை அவமதிக்கும் ரீ-சார்ஜ் பெண் என ஒவ்வொரு கேரக்டரும் அவரவர் ஏரியாவில் செமத்தியாக ஸ்கோர் செய்கிறார்கள்.  

ரம்யா, விஷ்ணுவின்

சினிமா விமர்சனம் : குள்ளநரி கூட்டம்

1,500 கடனை சில்லறைக் காசுகளாக அடைத்து, இறுதி ஒற்றை ரூபாயில் காதல் நம்பிக்கை புதைப்பது... ரசனை எபிசோட்.  

அதிரிபுதிரித் திருப்பங்களும், பளீர் பொளேர் அதிரடிகளும் இல்லாத படத்தில், எளிய, இனிய வசனங்களால் கலகல சுவாரஸ்யம் சேர்க்கிறது சி.கிளைட்டனின் பேனா.

சினிமா விமர்சனம் : குள்ளநரி கூட்டம்

சப் - இன்ஸ்பெக்டர் பதவிக்கான உடல் தகுதித் தேர்வு எவ்வளவு கடினமான விஷயம் என்பது ஊருக்கே தெரிந்த ஒன்று. அதில் எந்தப் பயிற்சியும் எடுக்காமல் விஷ்ணு 'ஜஸ்ட் லைக் தட்’ ஸ்டார்களை அள்ளுவது சாத்தியமா? இயல்பாக நகரும் கதையில், மூன்று போலீஸ் அதிகாரிகளை விஷ்ணுவும் அவரது நண்பர்களும் சடாரென்று கடத்தி, 'தமிழக மானம்’ காப்பதெல்லாம்... இனிமா சினிமா!

எஸ்.ஐ தேர்வுக் காட்சிகள் வரையிலும் வேறு விசேஷம் இல்லாததால், ஆங்காங்கே தங்கித் தேங்கி ரொம்பவே நிதானமாகப் பயணிக்கிறது திரைக்கதை. அத்தனை மெதுவான பயணத்தின்போது பாடல் ஸ்பீட் பிரேக்கர்கள் வேறு!  

பின் பாதி லாஜிக் மீறல்களை மறந்தால், இந்த குள்ளநரிகளின் குதூகல ஆட்டத்தை ரசிக்கலாம்!