Published:Updated:

இளைய தளபதிகளுக்குள் புது வம்பு!

இளைய தளபதிகளுக்குள் புது வம்பு!

இளைய தளபதிகளுக்குள் புது வம்பு!

இளைய தளபதிகளுக்குள் புது வம்பு!

Published:Updated:
##~##
'இ
யக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரனின் மகன்!’ என்று விஜய் அறிமுகம் செய்யப்பட்ட காலம் அது. கருணாநிதியின் ஒவ்வொரு பிறந்த நாளுக்கும் ஆளுயர போஸ்டர் அடித்து வாழ்த்துவார் எஸ்.ஏ.சி. 'நீங்க தி.மு.க. அனுதாபியா?’ என்று கேட்டால்,  'நான்  கலைஞரின்  தமிழுக்குத் தலை வணங்குகிறேன்!’ என்று விளக்கம் கொடுப்பார்!

'விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகரன்’ என்று காலம் மாறியது. மு.க.ஸ்டாலின் மேயராக இருந்த சமயம், அவரைச் சந்தித்துப் பொது மக்களுக்கென அரிசி மூட்டைகளை அன்பளிப்பாகக் கொடுத்தார் விஜய். தொடர்ந்து, 'தமிழ் சினிமாவில் எனக்குப் பிடிச்ச ஹீரோ விஜய். நான் சினிமா தயாரிச்சா, அவரைவெச்சுத்தான் என் முதல் படத்தை எடுப்பேன்!’ என்று சொல்லி, 'குருவி’ தயாரித்தார் ஸ்டாலினின் மகன் உதயநிதி. தளபதி ஆதரவாளர்களுடன் களை கட்டினார் இளைய தளபதி. ஒரு நிகழ்ச்சியில், 'முதல்வர் குடும்பத்து வாரிசுகளான உதயநிதி, தயாநிதி, அருள்நிதி பெயர்களை உச்சரித்தாலே ஒரு வைப்ரேஷன் ஏற்படுகிறது. அந்த அளவுக்கு அற்புதமான தமிழ்ப் பெயர்கள்!’ என்று கருணாநிதி முன்னிலையில் புகழாரம் சூட்டினார் விஜய்.

அதுவரை அனைத்தும் சுகம். டெல்லி சென்று ராகுல் காந்தியை விஜய் எந்த நேரத்தில் சந்தித்தாரோ தெரியவில்லை... அதில் இருந்து அவருக்குச் சிரம தசை. 'தொடர்ந்து விஜய் படங்கள் ஃப்ளாப். அதற்கான நஷ்டஈடு வழங்கினால்தான், அவரது அடுத்த படத்தைத் திரையிட அனுமதிப்போம்’ என்று கிட்டத்தட்ட ஆறு மாதங்களாக தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் 'போராடி’ வருகிறார்கள். இதற்கிடையே நிகழ்ந்த ஜெயலலிதா- விஜய் சந்திப்பினை ஆளும் கட்சித் தரப்பு புருவம் உயர்த்திப் பார்த்தது.

இளைய தளபதிகளுக்குள் புது வம்பு!

ஜெயலலிதாவுடன் திருமண வீட்டில் நிகழ்ந்த நேருக்கு நேர் சந்திப்பில், அதுவரை 'ஜெ’ பற்றி மனதில் இருந்த பிம்பங்கள் அத்தனையும் தகர்ந்தது விஜய்க்கு. தி.மு.க, காங்கிரஸைவிட அ.தி.மு.க-தான் தனக்கு ஏற்ற சாய்ஸ் என்ற முடிவுக்கு வந்தார். 'அ.தி.மு.க-வில் சேர்ந்தால், அரசியல் எதிர்காலம் எப்படி இருக்கும்?’ என்று குடும்ப ஜோசியரிடம் ஆலோசிக்கப்பட்டது. '108 பசுக்களை கன்றுகளோடு சேர்த்து தானம் கொடுத்தால், அரசியல் பிரவேசம்... அமோகம்!’ என்றாராம் ஜோசியர். (பரிகாரம்கூட, ஜெ பாணிதானா?)

உடனடியாக உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சியில் விஜய் ரசிகர் நற்பணி மன்ற விழா நடத்தப்பட்டது. நிகழ்ச்சியில் 108 பசு, கன்றுகளைத் தானமாக வழங்கினார் விஜய். தொடர்ந்து, தனது சென்னை கல்யாண மண்டபத்தில், 300 அரிசி மூட்டைகளை ஏழைகளுக்கு இலவசமாகக் கொடுத்தார். தனி ஆளாக போயஸ் கார்டன் சென்று அ.தி.மு.க-வில் சேர்ந்தால், சாயங்காலம் செய்தித்தாள் தலைப்புக்கு மட்டும்தான் பயன்படும் என்பதால், தனது ரசிகர் மன்ற பலத்தை இரு கழகங்களுக்கும் திரட்டிக் காட்டி, பிறகு        அ.தி.மு.க-வில் இணையலாம் என்ற முடிவில் இருந்தார். ஜரூராக ஜனவரி மாதம் திருச்சியில் ரசிகர் மன்ற மாநாட்டை பிரமாண்டமாக நடத்த ஏற்பாடுகள் நடந்தன.

இந்த நிலையில், திடீரென விஜய் நடித்து சில வாரங்களாக ரிலீஸுக்குக் காத்திருக்கும் 'காவலன்’ படத்துக்குத் தியேட்டர்கள் இல்லை என்று பரபரப்பு கிளப்பினார்கள். அதே நேரம் உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பில் வெளியாகும் 'மன்மதன் அம்பு’ படத்துக்கு தாராளமாக, ஏராளமாக தியேட்டர்கள் கிடைத்தன. அந்தப் படத் தயாரிப்புக் குழுவினரின் காய் நகர்த்தல்கள்தான் விஜய்க்கு சிக்கல் உண்டாக்குகின்றன என்பது ஒரு தகவல். ஆனால், அதை அடியோடு மறுக்கிறார்கள் உதயநிதி தரப்பினர். ஆளும் கட்சியினரின் ஆசீர்வாதம் இல்லாமல், இந்த நெருக்கடி சாத்தியம் இல்லை என்று விஜய் காதுகளில் ஓதப்பட, குழப்பத்தின் உச்சத்தில் திளைத்தார். 'உடனடி, தடாலடி அரசியல் என்ட்ரி அவசியமா? அல்லது சினிமா கேரியரை ஸ்டெடி பண்ணலாமா?’ என்ற யோசனையுடனேயே ஷங்கர் இயக்கும் தமிழ் 'த்ரீ இடியட்ஸ்’ பட வேலைகளில் முனைப்பானார்.

இளைய தளபதிகளுக்குள் புது வம்பு!

அடி மேல் இடியாக, இப்போது 'த்ரீ இடியட்ஸ்’ படத்தில் விஜய் இல்லை. விஜய்க்குப் பதில் சூர்யா நடிப்பார் என்று ஒற்றை வரித் தகவல். 'ஷங்கர் இந்தப் புதிய படத்துக்காக, விஜய்க்கு புது ஹேர் ஸ்டைல் வடிவமைத்தார். ஒரேயடியாக குளோஸ் கட் பண்ணியதில் விஜய் அப்செட். ஷங்கரின் அசோசியேட் ஒருவரை அழைத்து, எஸ்.ஏ.சந்திரசேகரன் டோஸ்விட்டதாக ஒரு தகவல். இதில் அப்செட் ஆன ஷங்கர், விஜய்யை விலக்கினார்’ என்று கிசுகிசு பாணியில் செய்திகள் உலவின. ஆனால், அவசர அவசரமாக ஷங்கரை அழைத்த 'மேலிடம்’, 'விஜய்யை படத்தில் இருந்து விலக்குமாறு அறிவுறுத்தியதால்தான், இந்தத் தடாலடி மாற்றம் என்றும் வம்பு பரவுகிறது.  

'தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது?’ என்று உணர முடியாத அளவுக்குக் குழப்பத்தில் சிக்கித் தவிக்கிறார் விஜய். அடுத்தடுத்த சம்பவங்களின் வீரியம் உறைப்பதற்குள், மேலும் மேலும் அதிரடிகள் அரங்கேறி, அதிர்ச்சி அலைகள்.

'இனி மேலும், தன்னந்தனியாக எதையும் சமாளிக்க முடியாது!’ என்று இறுதியும் உறுதியுமாக முடிவெடுத்த விஜய், எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க மேடைகளில் தலை காட்ட முடிவெடுத்துவிட்டாராம்.

'ஒரு தடவை முடிவு எடுத்துட்டா... என் பேச்சை நானே கேட்க மாட்டேன்’ என்று வசனம் பேசியவர், பல தடவை யோசித்தே இந்த முடிவுக்கு வந்திருக்கிறார்.

சொல்லிவைத்துக் கில்லி அடிப்பாரா?