Published:Updated:

Dr.அம்பேத்கர் விடுதலையின் விலாசம்!

Dr.அம்பேத்கர் விடுதலையின் விலாசம்!

Dr.அம்பேத்கர் விடுதலையின் விலாசம்!

Dr.அம்பேத்கர் விடுதலையின் விலாசம்!

Published:Updated:
##~##
டா
க்டர் பாபா சாகேப் அம்பேத்கர் - ஒடுக்கப்பட்ட மக்களின் உரத்த குரல், வரலாற்றின் மனசாட்சி, நூற்றாண்டு காலப் பெருமூச்சு, தந்தை பெரியாரால் 'தலைவர்’ என்று அழைக்கப்பட்ட ஒரே தலைவர். சுருக்கமாக, விடுதலையின் விலாசம்!

2000-ம் ஆண்டிலேயே என்.எஃப்.டி.சி -யால் தயாரிக்கப்பட்டு 10 ஆண்டுகளுக்குப் பிறகு, வெளியாகி இருக்கிறது 'டாக்டர் பாபா சாகேப் அம்பேத்கர்’ திரைப்படம். 'அரசியல் சட்டத்தை உருவாக்கித் தந்தவர்’ என்ற பாடப் புத்தக வரிகளுக்கு அப்பாலான அம்பேத்கரின் போராட்ட வாழ்க்கை துல்லியமான உண்மைகளுடன் திரையில் விரிகிறது. சென்ற நூற்றாண்டின் தீண்டாமைக் கொடுமைகளைப் படக் கதையாக விவரிப்பதில் தொடங்குகிறது படம். பிறகு, சம காலத்தில் ஒரு தலித், கொட்டும் மழையில் இருந்து தப்பிப்பதற்காக கோயில் பக்கம் ஒதுங்க, 'உன் மனசுல என்னடா பெரிய அம்பேத்கர்னு நினைப்பா?’ என்று அடித்து உதைக்கின்றனர் சாதி வெறியர்கள். அப்போது அந்த வழியாக தேசியக் கொடியை ஏந்தியபடி பள்ளி மாணவர்களின் சுதந்திர தின ஊர்வலம் கடந்து செல்கிறது. கொலை செய்யப்பட்ட தங்கள் சக சகோதரனுக்காக நீதி கேட்டு தாழ்த்தப்பட்ட மக்கள் போராட்டத்தைத் தொடங்கும்போது, ஒரு போலீஸ் அதிகாரியின் துப்பாக்கியில் இருந்து தோட்டா சீறிக் கிளம்புகிறது. சில நூற்றாண்டுகளுக்கு முந்தைய காலம், தற்காலம் இவற்றுக்கு இடையில் அம்பேத்கர் என்ற ஆளுமை மிக்க மனிதர் எப்படி உருவானார் என்பதை விவரிக்கத் தொடங்குகிறது படம்.

Dr.அம்பேத்கர் விடுதலையின் விலாசம்!

மேற்கு நாடுகளில் அம்பேத்கர், ஓர் இந்தியன் என்ற முறையில் அவமானப்படுத்தப்பட்டார். இந்தியாவில் அவர் தாழ்த்தப்பட்ட சாதியில் பிறந்தவர் என்ற ஒரே காரணத்துக்காக நிராகரிப்புகளை யும், புறக்கணிப்புகளையும் எதிர்கொள்கிறார். அம்பேத்கருக்கும் மற்றவர்களுக்கும் இடையில் முரண்பாடுகள் ஏற்படும்போது எல்லாம், இறுதியில் அம்பேத்கரே விட்டுக்கொடுக்க நேர்கிறது. இந்தியாவின் மிகச் சிறந்த இயக்குநர்களில் ஒருவரான ஷ்யாம் பெனகல், இந்தப் படத்தின் ஆலோசகராகப் பணிபுரிந்து இருப்பது பல காட்சிகளில் பளிச்சிடு கிறது. உதாரணமாக, பல்கலைக்கழக ஆசிரியர்கள் அறையில் அம்பேத்கர் தண்ணீர் அருந்தும் காட்சி. அம்பேத்கர் தண்ணீர் அருந்த முற்படும்போது திரிவேதி என்ற ஆதிக்க சாதிப் பேராசியரும் மற்றவர்களும், 'அம்பேத்கர், நீங்கள் என்னதான் உயர் கல்வி கற்றிருந்தாலும், நீங்கள் ஒரு தீண்டத்தகாதவர். இந்த தண்ணீரைக் குடிக்கக் கூடாது!’ என்கிறார்கள். அவர்களை ஒரு கணம் உற்றுநோக்கும் அம்பேத்கர், தண்ணீர் குவளையைக் கையில் வைத்துக்கொண்டே, 'மெத்தப் படித்தவர்கள் நீங்கள். என்னால் இந்த தண்ணீர் தூய்மை கெடுகிறது என்று நீங்கள் நினைத்தால், உங்கள் வீட்டில் இருந்து தண்ணீர் கொண்டுவாருங்கள். இல்லையெனில், தண்ணீரைத் தூய்மைப்படுத்துங்கள்!’ என்று அழுத்தமாகச் சொல்லிவிட்டு தண்ணீர் குடிக் கிறார். ஒரு மிடறு குடித்துவிட்டு அம்பேத்கர், திரிவேதி யைப் பார்த்துச் சொல்கிறார், 'ஒரு தீண்டத்தகாதவன் தொட்ட பொருளுக்குத் தீட்டுக்கழிக்கும் மந்திரம் உங்களுக்குத் தெரியுமா? நீங்கள் திரிவேதி ஆயிற்றே!’ என்று சொல்லி நிறுத்தி, பிறகு தானே அந்த மந்திரத்தைச் சொல்கிறார். வேதங்கள், இதிகாசங்கள், உபநிடதங்கள், பைபிள் உள்ளிட்ட மத நூல்கள், பொருளாதாரத் தத்து வங்கள், நீட்ஷே உள்ளிட்ட தத்துவ அறிஞர்கள் என அனைத்தையும் கற்ற ஓர் அறிவாளி, தன் பிறப்பின் காரணமாக அவமானப்படுத்தப்படும் காட்சியில் நம் கண்கள் கசிகின்றன.

மம்மூட்டி 'அம்பேத்கர்’ என்னும் மகத்தான மனிதராகவே மாறியிருக்கிறார். தன் நான்கு குழந்தைகளையும் வறுமைக்குத் தின்னக் கொடுத்துவிட்டு மருகும் காட்சியிலும், காந்தியிடம், 'பாபுஜி, உண்ணாவிரதம் என்கிற ஆயுதத்தை அடிக்கடி பயன்படுத்தாதீர்கள். நீங்கள் இந்த தேசத்துக்குத் தேவைப்படலாம்’ என்று சொல்லும் காட்சியிலும், தள்ளாத வயதில் தடி ஊன்றியபடி மேடையேறி ஒரு லட்சம் தலித் மக்களைப் பௌத்தர்களாக மாற்றி, 'இனி நான் உறுதியாக இந்து அல்ல, எனவே தீண்டத்தகாதவனும் அல்ல!’ என்று முழங்கும் காட்சியிலும்... வரலாற்று நாயகனை வார்த்துத் தந்துள்ளார் மம்மூட்டி.  

அம்பேத்கரின் வரலாற்றைத் திரைப்படமாக்கிய முயற்சிக்காகவே இயக்குநர் ஜாபர் பட்டேலை எவ்வளவு பாராட்டினாலும் தகும். 'தாழ்த்தப்பட்ட

Dr.அம்பேத்கர் விடுதலையின் விலாசம்!

மக்களுக்கான தனி வாக்காளர் தொகுதிக் கோரிக்கையை அம்பேத்கர் கைவிட வேண்டும்’ என்று காந்தி சிறையில் உண்ணாவிரதம் இருக்கிறார். அம்பேத்கர் தனது வீட்டின் சிறிய அறையில் அமர்ந்து சட்டப் புத்தகங்களைப் புரட்டிக்கொண்டு இருக்கிறார். 'தேசத் துரோகி அம்பேத்கர் ஒழிக’ என்கிற முழக்கங்கள் வாசலில். வெளியில் வரும் அம்பேத்கர், 'ஏன் இப்படிச் சத்தம் போடுறீங்க? நாளைக்கு ஒரு கேஸுக்காகத் தயார் பண்ணிட்டு இருக்கேன்’ என்கிறார். போராடும் காங்கிரஸ் பெண்மணியோ, 'காந்திஜியின் உயிரைவிட உங்களுக்குப் பணம் சம்பாதிப்பதுதான் முக்கியமா?’ என்று கேட்கிறார். அதற்கு அம்பேத்கர், 'உங்கள்

தலைவர்களுக்கு வேண்டுமானால், அன்றாட உணவு என்பது பிரச்னையாக இல்லாமல் இருக்கலாம். ஆனால், நான் கோர்ட்டுக்குச் செல்லாவிட்டால் வீட்டில் அனைவரும் பட்டினிதான்!’ என்கிறார். இப்படி இயக்குநரின் திறமைக்கு ஒவ்வொரு காட்சியும் சாட்சி!

அமர் ஹால்டிபூரின் இசையும் அசோக் மேத்தாவின் ஒளிப்பதிவும் படத்துக்குப் பலம் சேர்க்கின்றன.

பள்ளி, கல்லூரி, விடுதியறை, காங்கிரஸ் அமைச்சரவை, இந்து மதம் என எல்லா நிறுவனங்களில் இருந்தும் வெளியேற்றப்பட்டவர், வெளியேறியவர் அம்பேத்கர். இப்படி ஒதுக்கலையே சந்தித்த அம்பேத்கரின் பெயரில் அமைந்த திரைப்படமும் 10 ஆண்டுகளாக வெளியிடப்படாமலே ஒதுக்கப் பட்டது வரலாற்றின் அவமானம்.

'டாக்டர் பாபா சாகேப் அம்பேத்கர்’ படத்தைப் பார்ப்பதன் மூலம், நீங்கள் பார்க்கத் தவறவிட்ட இந்தியாவின் அசல் முகத்தை அடையாளம் காணலாம்!