Published:Updated:

சினிமா விமர்சனம் : சிக்கு புக்கு

சினிமா விமர்சனம் : சிக்கு புக்கு

சினிமா விமர்சனம் : சிக்கு புக்கு

சினிமா விமர்சனம் : சிக்கு புக்கு

Published:Updated:
##~##
ப்பாவின் காலத்தில் ஆரம்பிக்கும் காதல், தலைமுறை தாண்டி மகனின் காலத்தில் கனியும் பயணமே... சிக்குபுக்கு!

அப்பா ஆர்யாவின் பூர்வீக வீட்டை விலைக்கு வாங்க இந்தியா வருகிறார் மகன் ஆர்யா. (ஆம்...  இரட்டை வேடம்!) விமானப் பயணத்தில் அறிமுகமாகும் ஸ்ரேயாவோடு பூக்கும் நட்பு... தொடரும் ரயில், பஸ், கார் பயணங்களில் காதலாகப் பரிணமிக்கிறது. மறுபுறம், ஃப்ளாஷ்பேக் நினைவுகளில் அப்பா ஆர்யாவுக்கும், ப்ரீத்திகா ராவுக்கும் (அறிமுகம்) காதல். ஆனால், ப்ரீத்திகாவை மனமுருகி ஒருதலையாகக் காதலித்துக்கொண்டு இருக்கிறார் அவரது அத்தை மகன் அனுப் குமார் (அறிமுகம்). ஆர்யாவுக்கும் அனுப் குமாருக்கும் நட்பு பலமாகிறது. இறுதியில் உண்மை தெரியும் வேளையில், அப்பா ஆர்யா என்ன முடிவு எடுக்கிறார், மகன் ஆர்யா - ஸ்ரேயா காதலின் க்ளைமாக்ஸ் என்ன ஆனது?

சினிமா விமர்சனம் : சிக்கு புக்கு

கொரிய மொழி 'தி கிளாஸிக்’ திரைப்படத்தைத் தழுவி 'சிக்குபுக்கு’ ட்ரிப் அடித்து இருக்கிறார் அறிமுக இயக்குநர் மணிகண்டன். 'இரண்டு தலைமுறை, இரண்டு காதல்’ என்று படம் ஆரம்பிக்கும்போது, 'ஆஹா!’ என்று ஆச்சர்யம் ஏற்படுகிறது. ரசிக்கும்படியோ, கொண்டாடும்படியோ இல்லாமல் இரண்டு காதல்களும் 'தேமே’ என்று கடக்கும்போது 'ஐயோ’ என்று சோகம் எழுகிறது.

வெரைட்டி நடிப்புக்கு எவ்வளவோ ஸ்கோப் உள்ள இரண்டு கேரக்டர்கள். 70-களின் பின்னணியில் காவலர் பயிற்சியில் ஈடுபட்டு இருக்கும் இளைஞன், 2010-ன் ஃப்ரீக்-அவுட் இளைஞன்! இரண்டு கதா பாத்திரங்களுக்கு ஆர்யாவின் உடல்மொழி என்னவோ பாந்தமாகப் பொருந்துகிறது. ஆனால் நடிப்பு? கடைசி வரை அலட்டிக்கொள்ளாமலேயே வருகிறார், போகிறார்.

இடை வளைவுகளை மட்டுமே நம்பாமல், நடிக்க முயற்சித்து இருக்கும் ஸ்ரேயா. கங்கிராட்ஸ்! ஆனால், நடிப்பு... கண்களை உருட்டி, குரலைக் குழைத்து பார்த்துப் பழகிய 'ஜெனிலியா’ மேனரிஸங்கள். என்ன கொடுமை ஸ்ரேயா! புதுமுகம் ப்ரீத்திகா ராவ் மழை பனித் துளிபோல ஃப்ரெஷ். ஆனால், நடிப்பு..? வெயில் பனித் துளி!

தொய்வடையும் படத்தை ஆங்காங்கே தூக்கிக்கொண்டு ஓடுவது சந்தானம், சாமிநாதன், பாண்டு கூட்டணிதான். 'இவ்வளவு உயரமா இருக்க... பொறக்குறதுக்கே ரெண்டு நாள் ஆகி இருக்கும்போல!’ என்று போகிற போக்கில் சந்தானம் அடிக்கும் கமென்ட்கள் கலகல லகலக. போலீஸ் பயிற்சியில் இருந்து விடுபட சந்தானம் போடும் திட்டங்களும், அதன் விளைவுகளும்... சிரிப்பு மத்தாப்பூ!

சினிமா விமர்சனம் : சிக்கு புக்கு

படத்தில் காதல்தான் பிரதானமே. ஆனால், காதல் உணர்வு காட்சிகளில் ஏக வறட்சி.  ஆர்யா-ப்ரீத்திகா ராவ் காதலில் இருக்கும் கொஞ்சநஞ்ச அழுத்தம்கூட, இரண்டாம் தலைமுறைக் காதலில் இல்லை. இதனாலேயே அவர்கள் பிரிந்துவிடுவார்களோ என்கிற பரிதவிப்பு நமக்குள் எழவே இல்லை. ஆர்யாவிடம் அவ்வப்போது காதல் மொழி பேசும் ஸ்ரேயா, எந்தக் குறுகுறுப்பும் இல்லாமல் அப்பா பார்த்த  மாப்பிள்ளைக்கு ஏன் சம்மதிக்கிறார்? ஒளியால் இரு காலங்களையும் அழகாக வேறுபடுத்திக் காட்டியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் குருதேவ்.  ஹரி-லெஸ்லி இசை, ஓசை யாகவே கடந்து செல்கிறது.

மழை ஓய்ந்த ரயில் ஜன்னல் பயண அனுபவம் ஏற்படுத்தி இருந்தால், 'சிக்கு புக்கு’-வில் உற்சாகமாகவே பயணித்து இருக்கலாம்!