என் விகடன் - திருச்சி
ஸ்பெஷல் -1
Published:Updated:

சினிமா விமர்சனம் : பொன்னர்-சங்கர்

விகடன் விமர்சனக் குழு

##~##
கு
ருவின் சபதத்தையும் அன்னையின் சபதத்தையும் ஒருசேர நிறைவேற்றும் வாரிசுகள் இந்த... பொன்னர்-சங்கர்!

'அம்மாவுக்காகப் பழிவாங்கும் படலத்தை நிறைவேற்றும் பாச மகன்கள்’ என்ற வழக்கமான கதைக்கு வரலாற்றுப் பின்னணி சேர்த்த வகையிலும் அதில் அசத்தல் பிரமாண்டம் காண்பித்த வகையிலும் கவனம் கவர்கிறது தியாகராஜனின் இயக்கம். பீரியட் சினிமாக்களின் சலிப்படையவைக்கும் புராதன வசனங்கள் தவிர்த்த, உறுத்தாத கருணாநிதியின் தமிழ் ஆறுதல்!

சினிமா விமர்சனம் : பொன்னர்-சங்கர்

பொன்னர், சங்கர் என இரட்டைக் குதிரைச் சவாரி கிடைத்தும் ஸ்கோர் செய்ய முடியாத தடுமாற்றம் பிரஷாந்தின் நடிப்பில். அனல் கிளப்பும் போர்க் களக் காட்சிகள் தவிர, மற்ற இடங்களில் நெஞ்சு நிமிர்த்தி வலம் வருவதோடு சரி! தாமரை நாச்சியாராக குஷ்பு. 'வாழ்க்கையின் அரிச்சுவடியைப் படிக்க பள்ளிக்கூடம் தேவை இல்லை... பள்ளியறை போதும்’ என்கிற பிரகாஷ்ராஜின் முன், ஆக்ரோஷத்துடன்  உறைவாளை உருவும் இடத்தில் மட்டும் முத்திரை பதிக்கிறார். 'ராக்கியண்ணன்’ ராஜ்கிரண் வழக்கம்போல ஸ்கோர் செய்திருந்தாலும், சங்கரை ஏனோ 'ஷங்கர்’ என்கிறார்!  

பிரகாஷ்ராஜ், விஜயகுமார்,பொன்வண்ணன், நெப்போலியன் என்று பலரின் பெர்ஃபார்மன்ஸ் நிறைவு. ஆனால், திரைக்கதையில் அவர்களுக்கான ஸ்கோப்... ப்ச்! முத்தாயி, பவளாயியாக பூஜா சோப்ரா, திவ்யா பரமேஸ் வரன். படத்தில் கேரக்டர்போலவே அவர்கள் இடுப்பிலும் ஆடை நிற்பேனா என்கிறது!  

எந்த இடத்திலும் துறுத்தாமல் உறுத்தாமல் பீரியட் ஃபிலிமுக்கான பிரமாண்ட பிரமிப்பு சேர்த்திருக்கும் முத்துராஜின் கலை இயக்கம் படத்தின் பளிச் ஹீரோ. ஷாஜி குமாரின் ஒளிப்பதிவு, போரின் ஆவேசத்தையும் அரண்மனையின் அழகையும் சிந்தாமல் சிதறாமல் படம் பிடித்து இருக்கிறது.

பொன்வண்ணனும் அவரது மகன் ரியாஸ் கானும் இறந்து அவர்கள் சடலங்களுக்குத் தீயும் மூட்டுகிறார்கள். ஆனால், இறுதிக் காட்சியில் கத்திக் காய பேன்டேஜுடன் பொன்வண்ணன் உயிர் பிழைத்து அமர்ந்து இருப்பது எப்படி? குஷ்புவின் காதல் திருமணத்தால் அப்பா விஜயகுமாரைவிட, அதிகம் ஆத்திரம் அடைவது அண்ணன் பொன்வண்ணன்தான். ஆனால், பிற்காலத்தில் பொன்வண்ணன்,

சினிமா விமர்சனம் : பொன்னர்-சங்கர்

குஷ்புவின் குடும்பத்தோடு இணக்கமாக இருப்பதும் விஜயகுமார் வில்லனாக உருவெடுப்பதும் என்ன லாஜிக்? குஷ்புவின் மீது உள்ள கோபம்  காரணமாக, தன் மகன் பொன்வண்ணனின் குடும்பத்தை உயிரோடு கொளுத்த விஜயகுமார் ஆணையிடுவது ஏன்? இப்படியும் இன்ன பிறவுமாக காட்சிக்குக் காட்சி தொக்கி நிற்கும் சந்தேகப் படுதாக்கள், படத்துடன் நம்மை ஒன்றவிடாமலே செய்கின்றன!

ஆனாலும்,  அபாரமான கிராஃபிக்ஸ் காட்சிகள், அலுப்புத் தட்டாத வசனங்கள், அசரவைக்கும் பிரமாண்டம் எனக் கொஞ்சம் ஈர்க்கவும்தான் செய்கின்றனர் பொன்னர் - சங்கர்!