என் விகடன் - திருச்சி
ஸ்பெஷல் -1
Published:Updated:

''நல்ல பொண்ணாப் பாத்து கல்யாணம் பண்ணிக்கணும்!''

நா.கதிர்வேலன்படம் : கே.ராஜசேகரன்

##~##
செ
ம்மொழிப் பூங்கா வாசலில் ஆட்டோவில் வந்து இறங்குகிறார் அந்த 'ஹீரோ’! பானை வயிறு, மலர்ந்து சிரிக்கும் முகம், அசைந்து அசைந்து கை வீசி நடக்கும் அழகு... 'அழகர்சாமியின் குதிரை’யின் ஆச்சர்ய ஹீரோ  சிவபாலன் என்கிற அப்புக்குட்டி!

'நாயகன்’ கதை சொல்கிறார் அப்புக்குட்டி. ''திருச்செந்தூர் பக்கத்தில் நாதன்கிணறுல நாங்க ஒரு விவசாயக் குடும்பம். அப்பா சித்ரவேல் - அம்மா சந்திராவுக்கு நான் ஒரே பையன். எப்பவும் சினிமா கொட்டகையிலதான் பழியாக்கிடப்பேன். எந்தப் படமா இருந்தாலும் பார்ப்பேன். எனக்குப் படம் பார்க்கணும்... அவ்வளவுதான். அப்பமே சினிமான்னா அவ்வளவு இஷ்டம்!

''நல்ல பொண்ணாப் பாத்து கல்யாணம் பண்ணிக்கணும்!''

நடிக்கணும்னு ஆசை வந்தப்போ, மெட்ராஸுக்கு ஓடி வந்துட்டேன். நேரே ஏவி.எம் ஸ்டுடியோ போயி டைரக்டர்கிட்ட சான்ஸ் கேட்டா, உடனே கொடுத்துருவாங்கன்னு நம்பி வந்தேன். ஆனா, அது அம்புட்டு சுலபம் இல்லன்னு தெரிஞ்சது. கைக்காசும் கரைஞ்சுக்கிட்டே வரவும், வடபழநி சரவணபவனில் வேலைக்குச் சேர்ந்தேன். வேலைக்கு வேலையும் ஆச்சு. சாப்பாட்டுக்குச் சாப்பாடும் ஆச்சு.

நேரம் கிடைக்குறப்பலாம் நடையாய் நடந்து சான்ஸ் கேட்டேன். அடி மேல் அடிச்சதுல அம்மி நகர்ந்தது. 'மறுமலர்ச்சி’ படத்தில் அரை நிமிஷம் வந்து ரெண்டு வார்த்தை டயலாக் பேசுனேன். ஊருக்குப் போய் சொன்னா, யாரும் நம்பலை. 'கில்லி’, 'அழகிய தமிழ் மகன்’ படங்களில் தலை காட்டினேன். அதுவும் பளிச்சுனு பதியலை.

அப்பதான் ஒரு டீக்கடைக்காரர், 'இவர்தான் சுசீந்திரன். 'வெண்ணிலா கபடிக் குழு’ன்னு படம் பண்ணப்போறார்’னு சொல்லி, டைரக்டரை அறிமுகப்படுத்தினார். 'சார், நாலு வார்த்தை சேந்தாப்ல பேசுற மாதிரியும், உருவம் பதியிற மாதிரியும் ஒரு வேஷம் கொடுங்க’ன்னு கேட்டேன். 'நாளைக்கு வந்து பாரு’ன்னு சொல்லிட்டுப் போயிட்டார்.

''நல்ல பொண்ணாப் பாத்து கல்யாணம் பண்ணிக்கணும்!''

மறுநாள், 'இன்னியில இருந்து உன் பேரு அப்புக்குட்டி. படத்துல நடிக்கிற ஏழு பேர்ல நீயும் ஒருத்தன். ஊர்ப் பக்கம் போய்க் கபடி கத்துக்க. இந்த வயிறு, உடம்புலாம் அப்படியே இருக்கட்டும்’னு சொன்னார்.

'வெண்ணிலா கபடிக் குழு’ படத்துல என்னை எல்லாருக்கும் பிடிச்சது. வெளியில பார்க்குறவங்க, 'எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே’ன்னு யோசிச்சிட்டு, 'ஏய், அப்புக்குட்டிய்ய்ய்’னு கை கொடுத்தாங்க. அப்பல்லாம் கண்ல தண்ணீ கட்டிக்கும். ஒரே படத்தில் என்னைத் தெரிய வெச்சாரு எங்க டைரக்டர் சுசீந்திரன்.

திடீர்னு ஒருநாள் கூப்பிட்டுவுட்டு, 'அழகர்சாமியின் குதிரை’ன்னு படம் எடுக்கப் போறேன். நீதான்டா அதில் ஹீரோ மாதிரி’ன்னு சொன்னார். 'நானா... நானா?’ன்னு கேட்டுக்கிட்டே இருக்கேன். நம்பவே முடியலை. டைரக்டர் கிண்டல் பண்றாரோனு யோசிக்கிறேன். கிறுக்குப் பிடிச்ச மாதிரி இருந்தது. முழுக் கதையும் சொன்னார். அப்பவே ஒரு வெள்ளைக் குதிரையைக் கொண்டுவந்து நிறுத்தி, 'இதுகிட்ட

''நல்ல பொண்ணாப் பாத்து கல்யாணம் பண்ணிக்கணும்!''

சுமூகமாகப் பழகி ஃப்ரெண்ட் ஆகிக்கடா’ன்னு சொன்னார். அப்போ இருந்து இப்போ வரை அவர் சொன்னதை அப்படியே செஞ்சுட்டு வர்றேன்!

'என்னத்த பெரிசா சாதிச்சுப்புட்டோம்?’னு இன்னும் கல்யாணம் கட்டிக்கலை. இனிமேதான் நல்ல பொண்ணாப் பார்த்து கல்யாணம் பண்ணிக்கணும். 'அழகர்சாமியின் குதிரை’ யைப் பார்க்க அப்பா, அம்மா இல்லை. சின்னச் சின்னதா நான் நடிச்சப்பலாம் தேடித் தேடிப் பார்ப்பாங்க. 'உன்னைக் காங்கவே இல்லையேடா’ன்னு ரெண்டு மூணு தடவை போய் படம் பார்த்துருக்காரு அப்பா. இப்ப ஒரு படம் முழுக்க வர்றேன். ஆனா, பார்க்கத்தான் அவங்க இல்லை!'' - கண்கள் பனிக்கின்றன அப்புக்குட்டிக்கு!