என் விகடன் - சென்னை
என் விகடன் - திருச்சி
என் விகடன் - புதுச்சேரி
Published:Updated:

முல்லை நிலத்தில் 'பாலை'!

நா.கதிர்வேலன்

##~##

''கிரேக்கர்களின் காவியங்களான இலியட், ஒடிசி ஆகியவற்றின் பாதிப்பில் 'டிராய்’, ரோமாபுரி வரலாற்றில் இருந்து ஸ்பார்டகஸ்’, 'கிளாடியேட்டர்’, சீனா வாழ்ந்த, வீழ்ந்த வரலாற்றை வைத்து 'தி லாஸ்ட் எம்பரர்’ போன்ற படங்கள் உருவாகி இருக்கின்றன. தொன்மையான நாகரிக இனங்களுக்கு என்று இவ்வளவு திரைப்படங்கள் உருவாகும் போது, தமிழர்கள் வாழ்ந்த வரலாற்றைச் சித்திரிக்கும் படம் ஒன்றை உருவாக்கணும்னு ஆசை. 'பாலை’ நிலத்தில் களம் இறங்கிட்டோம்!'' - புன்னகையுடன் ஆரம்பிக்கிறார் இயக்குநர் செந்தமிழன்.

முல்லை நிலத்தில் 'பாலை'!

 ''தமிழ் அடையாளத்தின் எந்தச் சூழலைப் பிரதிபலிக்கும் 'பாலை’?''

''கி.பி. 300-ல், சங்க கால முல்லை நிலத்தில் நடைபெறும் கதை. பட்டாடை அணிந்து, கிலோ கணக்கில் நகைகள் சூடி, குதிரை மேல் ஏறிக் கம்பீரமாக வரும் அரசர்களைத்தான் நாம் சினிமாக்களில் பார்த்திருக்கிறோம். ஆனால், அப்படி எல்லாம் யாரும் அந்தக் காலத்தில் பவனி வரலை. அந்த யதார்த்தத்தை அப்படியே பதிவு செஞ்சி ருக்கோம். படத்தில் துளி மிகை கிடையாது. உயரமான மலையின் மீது ஏறி நின்று மழை எப்ப வரும்னு கணிக்கும் அறிவியல் கைவரப் பெற்றவர்கள் தமிழ் மூதாதையர்கள். ஒரு மகிழ்ச்சியான இனக் குழு கட்டாயப் போருக்குத் தள்ளப்படுகிறது. பெரும் பலங்கொண்ட ஓர் இனக் குழுவை, ஒரு சின்ன குழு எப்படி எதிர்கொள்கிறது என்பதுதான் படம்!''

முல்லை நிலத்தில் 'பாலை'!

''ஆனா, படத்தின் ஸ்டில்களில் காதல்தான் அதிகம் ததும்பி வழியுது?''

''தீவிர காமத்துக்கும் 'பாலை’யில் முக்கிய இடம் உண்டு. செக்ஸை மிகவும் தயக்கம் இல்லாமல், உண்மையாக எடுத்துக்கொண்ட காலம் அது. இப்ப எதையெல்லாம் வெளிப்படை யாகச் செய்யக் கூடாது என்று இருக்கிறதோ, அதை எல்லாம் விலக்கி விடுதலை உணர்வில் தெளிவா இருந்திருக்காங்க. ஆநிரை கவர்தல், கள்வெறி ஆட்டம், களவுக் காதல், கற்பு மணம், முல்லை நிலத்துக் குடியிருப்பு, கிராமத்து வீதிகள், விளக்குகள் என சங்கப் பாடல்களில் இருந்ததை மறு உருவாக்கம் செய்திருக்கோம்!''

''டாக்குமென்டரி சாயல் வந்துடுமே படத்துக்கு?''

''நிச்சயம் அப்படிக் கிடையாது. சங்க கால நீர்க் கடிகாரத்தைக்கூட உருவாக்கி இருக்கோம். காமம், வீரம், குடும்ப அமைப்புன்னு எல்லாமே அச்சுஅசலா வந்திருக்கு. எல்லாருமே புது முகங் கள்தான். கதையை நகர்த்திச் செல்லும் பொறுப்பு உணர்ந்து, ஷம்மு நெருக்கமான காட்சிகளில்கூட வெளிப்படையாக நடித்தார். கூச்சத்துக்கு விடை கொடுத்தார். எதையும் வணிகமாக்காத முயற்சி இது என்பதை மட்டும் மனதில்கொண்டு, இந்த படத்தைப் பாருங்கள்!''