என் விகடன் - சென்னை
என் விகடன் - திருச்சி
என் விகடன் - புதுச்சேரி
Published:Updated:

'சீக்கிரம் வா தலைவா!'

இரா.சரவணன்

##~##

''தலைவா... நீ அரசியலுக்குக்கூட வர வேணாம். ஆஸ்பத்திரியில் இருந்து திரும்பி வந்துடு. அது போதும் எங்களுக்கு!'' - ரசிகர்களின் பிரார்த்தனைகள் நெஞ்சை உலுக்குகின்றன. 'ரஜினிக்குப் பயப்படும் விதமாக ஒன்றும் இல்லை’ என மருத்துவமனை நிர்வாகமும், ரஜினி குடும்பத்தினரும் அறிவித்துக் கொண்டே இருந்தாலும், யாராலும்  அவ்வளவு சீக்கிரம் ஆசுவாசமாக முடியவில்லை. 'தலைவருக்கு என்னாச்சு?’ எனத் துடிக்கிற ரசிகனின் சோகத்துக்குக் கொஞ்சமும் குறைவு இல்லாததுதான் எல்லோருடைய பதற்றமும்!

ரஜினிக்கு என்னதான் ஆச்சு?

கடந்த 29-ம் தேதி ஏவி.எம். ஸ்டுடியோவில் 'ராணா’ படத் தொடக்க விழாவில் கலந்துகொண்ட ரஜினிக்கு, திடீர் வயிற்று வலி. 'ஜீரணக் கோளாறு’ என்றுதான் மயிலாப்பூர் இசபெல்லா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் ரஜினி. கிஷோர் என்கிற மருத்துவர் சிகிச்சை அளித்தார். வயிற்று வலிக் குக் காரணம் உணவில் ஏதோ தவறு எனத் தெரிய வந்தது. 'ஃபுட் பாய்சனை’க் குணப்படுத்தும் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. லேசான மயக் கத்தில் இருந்த ரஜினி அன்று மாலையே, 'ஐ’ம் ஆல் ரைட்!’ என வீடு திரும்பினார்.

'சீக்கிரம் வா தலைவா!'

இதற்கிடையில் பல இடங்களில் இருந்தும் நல விசாரிப்புகள். அதனால், 'வீட்டுக்கு யாரும் வர வேண்டாம்’ என அறிக்கை கொடுக்காத குறையாகத் தடுத்து அணை போட்டார்கள்.

தொடர்ந்து கடந்த 4-ம் தேதி ரஜினிக்கு லேசான காய்ச்சல். வீட்டிலேயே சிகிச்சை எடுத்து இருக்கிறார். ஆனால், கடுமையான மூச்சுத் திணறல் ஏற்பட, மீண்டும் இசபெல்லா மருத்துவமனையில் அனுமதி. கால்களைக் கீழே ஊன்ற முடியாத அளவுக்கு ரஜினிக்கு வலி ஏற்பட, அடுத்தடுத்துப் பல பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. 'செரிமானத்துக்குத் தக்கபடி வயிறு இயல்பாக இல்லை. பல நாட் களுக்கு முன் சாப்பிட்ட உணவு விஷத் தன்மை யைக் குடலுக்குள் ஏற்படுத்தி இருக்கிறது. ஆனாலும், பயப்பட வேண்டாம்!’ என்ற மருத்துவர்கள், ரஜினி அதற்கு முந்தைய ஒரு வாரம் உட்கொண்ட உணவுகள் அனைத்தையும் பட்டியலிடச் சொன்னார்கள். உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்காக மும்பை சென்ற ரஜினி, வரும் வழியில் பிரசித்தியான ஹோட்டல் ஒன்றில் அசைவ உணவு சாப்பிட்டாராம். பதப் படுத்தப்பட்ட அந்த உணவில் கிருமித் தொற்று இருந்து இருக்கலாம் என டாக்டர்கள் சந்தேகப்பட்டனர். அதனால், வயிற்றுப் பகுதியின் விஷத் தன்மையை நீக்கவும், கிருமித் தொற்று வேறு எங்கெங்கு பரவி இருக்கிறது என்பதுபற்றி அறியவும் தொடர்ந்தன பரிசோதனைகள். அதிலேயே ரஜினியின் உடல் சோர்ந்தது. இதற்கிடையில், நுரையீரலில் நீர் கோத்திருந்ததால் மூச்சுத் திணறலும் அடிக்கடி ஏற்பட்டது. 'பயப்படும்படி ஒன்றும் இல்லை’ என்றனர் டாக்டர்கள். சிகிச்சை தொடர்ந்துகொண்டு இருந்த நிலையிலேயே 9-ம் தேதி காளிகாம்பாள் கோயிலுக்கும், பாம்பன் சுவாமிகள் ஆசிரமத்துக்கும் ரஜினி அழைத்து வரப்பட்டார். அங்கே சென்று வந்தால், ரஜினி தைரியமாகிவிடுவார் என்பது லதாவின் நம்பிக்கை. அது அப்படியே பலித்தது. காய்ச்சல் வெகுவாகக் குறைய, சட்டென உற்சாகமானார் ரஜினி. ஆனாலும், அவரால் சரியாக நடக்க முடியவில்லை. கை, கால்களில் வீக்கம் வடியாத நிலையில், வீல் சேரிலேயே வீடு வந்து சேர்ந்தார்.

'சீக்கிரம் வா தலைவா!'

13-ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியானபோது, மீண்டும் ரஜினி உடல்நிலை சம்பந்தமான வதந்தி பரவியது. ஆனால், அன்றைக்கு இரண்டு நிமிட மூச்சுத் திணறலைத் தவிர, ரஜினிக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. அடுத்தடுத்து விசாரிப்புகள் தொடர, 'நான் நல்லபடி இருக் கேன். அதுவும் சந்தோஷமா இருக்கேன்னு மீடியாக்களுக்குச் சொல்லிடுங்க’ எனச் சொல்லி இருக்கிறார் ரஜினி. அன்று மாலையும் ரஜினி உற்சாகமாகவே இருந்திருக்கிறார்.

ஆனால், இரவே ரஜினிக்குக் கடுமையான மூச்சுத் திணறல். போரூர் ராமச்சந்திரா மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர் தணிகாசலம் தலைமையிலான ஆறு மருத்துவர் கள் குழு ரஜினியைப் பரிசோதித்தது. இரு சிறப்பு மருத்துவர்களும் அழைக்கப்பட்டார்கள். வயிறு, இரைப்பை, குடல் பாதிப்புகளை ஆரம் பத்திலேயே உறுதி செய்தவர்கள், சிறுநீர் பரிசோதனை மேற்கொண்டார்கள். உப்புகளைச் சரிவர பிரிக்க முடியாத அளவுக்கு கிட்னியின் செயல்பாடு குறைந்து இருந்தது தெரிய வந்தது. கை, கால்களில் மட்டும் அல்லாது முகமும் வீக்கம் அடைந்தது. இது ஒருபுறம் இருக்க, மூச்சுத் திணறலும் ரஜினியை வாட்டத்தொடங் கியது. திரவ உணவுகளைக்கூட ரஜினியின் உடல் ஏற்றுக் கொள்ளவில்லை. ஒரே வாரத் தில் ஆறு கிலோ எடை குறைந் தார் ரஜினி. இதற்கிடையில் குறைவான ரத்த அழுத்தம் வேறு. அதனால், எந்த சிகிச்சை யையும் ரஜினியின் உடல் ஏற்காது என்பது தெரிந்து, அவரை முழுமையான ஓய்வி லேயே வைத்திருந்தார்கள்.

15-ம் தேதி பரிசோதனையில் ரஜினியின் மூச்சுக் குழலில் கிருமித் தொற்று பரவி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மூச்சுக் குழல் தொடங்கி, நுரையீரல் வரைக்குமான திணறலுக்கு அந்தக் கிருமித் தொற்று தான் காரணம். வயிறு சம்பந்தமான பிரச்னைகளைச் சுலபமாகக் குணப்படுத்திவிட முடியும் என நினைக்கும் மருத்துவர்கள், நுரையீரல் கிருமித்தொற்றை நீக்க முடியாமல் திணறி வருகிறார்கள்.

இது குறித்து நம்மிடம் பேசிய மருத்துவர்கள் சிலர், ''வைரஸ் தாக்குதல்களின் வீரியம் நமது கண்டுபிடிப்புகளைத் தாண்டி அதிகமாகி வருகிறது. தற்போது ரஜினியைத் தாக்கி இருக்கும் வைரஸ்

'சீக்கிரம் வா தலைவா!'

தொற்றும் அந்த அளவுக்கு வீரியமானதுதான். அடிக்கடி உடல் ரீதியான பாதிப்புகளை இந்த வைரஸ் ஏற்படுத்தியபடியே இருக்கும். வெளி நாட்டு மருத்துவர்களுடன் கலந்து பேசி அந்த வைரஸ் தாக்குதலைக் குணப்படுத்த முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது.

இப்போதைக்கு கிட்னி, வயிறு உள்ளிட்ட பாகங்களையும் சரி செய்ய வேண்டும்.  ரஜினியின் உடல் ஆபரேஷனைத் தாங்கும் அளவுக்கு இல்லை. அதற்காகக் கொஞ்சம் நிதானமாகக் காத்திருக்கிறோம்!'' என்கிறார்கள் பொறுமையாக.

''ரஜினி எப்போது மக்கள் முன் தோன்றிப் பேசுவார்?'' எனக் கேட்டால், ''கொஞ்ச நாள் அவர் சிகிச்சை யில் இருக்க வேண்டும். இப்போது அவருக்கு முழு ஓய்வு தேவைப்படுகிறது!'' என்கிறார்கள் மருத்துவர்கள்.

'சீக்கிரம் வா தலைவா!’