Published:Updated:

சபாஷ் சரித்திரம்!

நா.கதிர்வேலன்படங்கள் : பொன்.காசிராஜன், உசேன்

சபாஷ் சரித்திரம்!

நா.கதிர்வேலன்படங்கள் : பொன்.காசிராஜன், உசேன்

Published:Updated:
##~##

மிழ் சினிமாவின் 'ஆடுகளம்’ ஆனது தேசிய விருதுகள் மேடை. வரலாறு காணாத விருதுகளைக் கைப்பற்றி ஆச்சர்ய அலை பரப்பி இருக்கிறது நம் இளைஞர் படை!

 தனுஷ், வெற்றிமாறன், கிஷோர், தினேஷ் உள்ளிட்ட 'சேவல் சண்டை’க்காரர்களுடன் முதல் சந்திப்பு....

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''என் அப்பா, ஒரு விஞ்ஞானி. அம்மா... நாவலாசிரியை. என் அக்கா, டாக்டர்.  இப்படி ஒரு குடும்பத்தில் இருந்து சினிமாவுக்கு ஒருத்தன் வர்றதுக்கு எவ்வளவு எதிர்ப்புகள் இருக்கும். ஆனா, அந்த எதிர்ப்புகளுக்கு நன்றி. அதுதான் என்னை இன்னும் இன்னும் 'பெர்ஃபெக்ஷன்’ நோக்கி ஓடச் சொல்லிட்டே இருக்கு!'' - தன்மையாகச் சிரிக்கிறார் வெற்றிமாறன்.

சபாஷ் சரித்திரம்!

''பாலுமகேந்திரா சாரிடம் சினிமா கத்துக்கிட்ட வருடங்கள் ரொம்பச் சந்தோஷ மான தருணங்கள். சிறந்த இயக்குநருக்கான இந்தத் தேசிய விருது அறிவிப்புகூட அவரது 60-வது பிறந்த நாளில் கிடைச்சதுதான் இன்னும் கொண்டாட்டம்.

போன வருஷம் பாலா சார், இந்த வருஷம் நான். கூடவே, சீனு ராமசாமின்னு எங்க டைரக்டர் ஸ்கூல் பசங்க அடுத்தடுத்து ஜெயிப்பது ரொம்ப சந்தோஷம்!'' என வெற்றிமாறன் நிறுத்தும் இடத்தில் 'கமா’ போட்டுத் தொடர்கிறார் தனுஷ்.

''நிச்சயம் என்னை நான் ஒரு ஸ்டார்னு நினைச்சு நடிச்சு இருந்தா, கே.பி. கருப்புக்கு அத்தனை ஜீவன் வந்திருக்காது. இது வெற்றிமாறன் எனக்குள் புகுந்து வாங்கித் தந்த விருது. கே.பாலசந்தர், கமல் சார், பாலா, அமீர்னு நான் எதிர்பார்க்காத மாஸ்டர்களிடம் இருந்து வரிசையாப் பாராட்டுகள். 'அநேகமா சிறந்த நடிகர் விருது பெற்றதில் நீங்க ரொம்ப  இளையவரா இருக்கலாம்’னு சொல்றாங்க. ரொம்ப சந்தோஷமா இருந்தாலும், அது எதையும் நான் மனசுக்குக் கொண்டுபோகலை. கொண்டுபோகவும் முடியலை.

சபாஷ் சரித்திரம்!

ரஜினி சார் பூரண குணமாகி வந்த பிறகுதான், இது ஒரு கொண்டாட்டமா என் மனசுல பதியும். பரிசு கிடைச்சதும் ரஜினி சார்கிட்ட சொன்னேன். 'ரொம்ப சந்தோஷம். இன்னும் இன்னும் மேலே வரணும் தனுஷ்!’னு என் தலை மேல் கைவெச்சு ஆசீர்வாதம் பண்ணார். எனக்குத் தொழில் கற்றுக்கொடுத்த என் வாத்தியார் செல்வா அண்ணனுக்குக் கௌரவம் சேர்த்துட்டேன். அது போதும் எனக்கு!''- நெஞ்சில் கை வைத்து நெகிழ்கிறார் தனுஷ்.

''எனக்கு இது ரெண்டாவது படம்தான். லெனின்-வி.டி.விஜயன் சார்கிட்டே எடிட்டிங் கத்துக்கிட்டப்ப, தேசிய விருது பத்தி கனவுகூட கண்டது இல்லை. என் குரு லெனின், இப்போ வெற்றிமாறனுக்கு போன் பண்ணி நன்றி சொல்லி இருக்கார். அவ்வளவு அருமையான மனுஷனுக்குப் பெருமை சேர்த்த திருப்தி ஒண்ணே போதும்!'' என்று மிகப் பணிவாகப் பேசுகிறார் எடிட்டர்  கிஷோர்.

ஒற்றைக் கைலியை வீசி விருது கொய்த உற்சாக உதறல் டான்ஸ் மாஸ்டர் தினேஷின் உடல் மொழியில். ''மாநில விருது, அடுத்தடுத்த வருடங்களில் விகடன் விருதுகள்... எல்லாம் கிடைச்சது. ஆனா, தேசிய விருது எதிர்பாராத தருணத்தில் கிடைச்சு இருக்கு. 'மனதைத் திருடிவிட்டாய்’ படத்தில் ஆரம்பிச்ச பயணம், 'மின்னலைப் பிடித்து’ வளர்ந்து, 'ஆல் தோட்ட பூபதி’யை ஆடவெச்சு, 'சீனா தானா’வை சிரிக்கவெச்சு, 'ஊரோரம் புளிய மரம்’னு வந்து 'யாத்தே’னு நிக்குது. கைலியே துணை!'' என்று சிரிக்கிறார் தினேஷ்!

''அறிமுகமான 'நாயகன்’ படத்துல ஆரம்பிச்சு இதுவரை எல்லாப் படத்திலும் 'நல்லா நடிச்சிருக்கீங்க’ன்னு பாராட்டு வாங்கிட்டே இருக்கேன். ஆனா, நூறாவது படமா நான் நடிச்ச 'தென்மேற்குப் பருவக்காற்று’ படத்துக்காக எனக்கு தேசிய விருதே வாங்கிக் கொடுத்துட்டீங்க... ரொம்ப நன்றி தம்பி!'' சீனு ராமசாமியிடம் கை கூப்பிச் சொல்லும் சரண்யாவின் கண்களில் ஆனந்த நீர்த் திவலைகள்!

சிறந்த பாடலாசிரியர், சிறந்த நடிகை, சிறந்த பிராந்திய மொழித் திரைப்படம் என்று இதமாக மூன்று தேசிய விருதுகளைத் தட்டி இருக்கிறது 'தென்மேற்குப் பருவக்காற்று’. பெருமிதத்தின் விளிம்பில் தளும்பும் கவிப்பேரரசு வைரமுத்து, சரண்யா, இயக்குநர் சீனு ராமசாமி மூவருக்கும் வாழ்த்துகள் சொன்னோம். ''இதில் கதை என்பது நிலம்தான். தூய்மையான தமிழ் நிலத்தின் கதைக்கு, பெண்களின் உழைப்பு, கருணை, பேரன்பு என மனித மதிப்பீடுகளைப் பக்க பலமாக அடுக்கி இருந்தோம். விருது குறித்த தகவல் வந்ததும் என் தாய் முகம்தான் என் நினைவுக்கு வந்தது. எந்த எதிர்பார்ப்பும் இல்லாத ரொம்ப சராசரி ஆத்தா. 'வெயிட் போட்டுட்டமே’னு கவலைப்பட்டுக்கிட்டே ஊருக்குப் போனால், 'என்ன ராசா இளைச்சுட்ட?’னு என் கன்னத்தைத் தடவிக் கொடுக்கிற ஆத்தா. அவங்களுக்கும், என் ஆதர்ச வல்வெட்டித்துறை பார்வதி அம்மாவுக்கும், சினிமா ஆசிரியர் பாலுமகேந்திராவுக்கும், சீமானுக்கும் இந்த விருதுகளை சமர்ப்பிக்கிறேன்!'' என்கிறார் சீனு ராமசாமி.

சபாஷ் சரித்திரம்!

அவரது தோளில் தட்டிக் கொடுத்துவிட்டுத் தொடர்ந்தார் வைரமுத்து. ''எனக்கு சீனு முன்னே பின்னே அறிமுகம் இல்லை. 'உங்க பாடல்கள் வேண்டும்’ என்று வந்தார். 'கதை என்னன்னு சொல்லுங்க’ன்னு தயாரானேன். 'படத்தையே முடிச்சுட்டேன். அதைப் பாருங்க. எங்கெங்கே பாடல்கள் இருந்தால் அழகுன்னு நீங்க தீர்மானிங்க!’ என்றார். படம் பார்க்க உட்கார்ந்தேன். இடைவேளை தாண்டுவதற்குள்ளேயே கண்களில் நீர் திரையிட்டுவிட்டது. எங்க தேனிப் பக்கம் பெரும்பாலும் மழை மறைவுப் பிரதேசம். பார்க்கப்படாத வாழ்க்கை, சொல்லப்படாத கதைன்னு கேமரா வழியாக சினிமா பார்த்ததாக இல்லாமல், என் ஜன்னல் வழியாக, தெருவைப் பார்த்த மாதிரி இருந்தது. அந்தப் படத்தின் பாடல்கள் எழுதும்போது, எனக்கு அவ்வளவு அவசரம். கபிலன் கல்யாணத்துக்கு நாள் குறிச்சாச்சு. மண்டபம் பார்க்கணும், அழைப்பிதழ் தயாரிக்கணும்னு அந்த இறுக்க நெருக்கடிகளுக்கு மத்தியிலும் 'கள்ளிக்காட்டில் பிறந்த தாயே’ எழுதும்போது மனதில் ஈரம் கசிந்தது. தண்ணீரில் வீசப்பட்ட கற்களென என் வரிகள் அமிழ்ந்துவிடாமல், காற்று அடைத்த பந்தென அவற்றைக் கண்ணீரில் மிதக்கச் செய்தார். எனது நினைவில், பாடல் கிளைமேக்ஸுடன் முடிந்த படங்கள் 'முதல் மரியாதை’யும், 'தென்மேற்குப் பருவக்காற்றும்’தான்!

எங்க அம்மாவுக்கு நான் செலவுக்குப் பணம் கொடுப்பேன். என்ன வேணுமோ, அதை வாங்கித் தருவேன். ஆச்சர்யமா அவங்க 'அம்மாபத்தி எழுதி இருக்கானாமே’னு அம்மாவே தேடிப் பிடிச்சு பாட்டைக் கேட்டுட்டு அழுதிருக்கு. எனக்கு தேசிய விருது புதிது அல்ல. ஆனால், என் மண்ணின் பெருமைகளைச் சொன்னதுக்குக் கிடைச்ச அங்கீகாரம்தான் அழகு. அதை அனுபவிக்கிறேன். எப்பவும் நான் மட்டுமோ, இன்னும் ஒருத்தரோதான் டெல்லிக்கு ஃப்ளைட் பிடிப்போம். இந்தத் தடவை தனி ஃப்ளைட் பிடிக்கலாம்போல இருக்கு!''- மீசை தடவி கம்பீரமாக உரக்கச் சிரிக்கிறார் வைரமுத்து.

அதுவரை மௌனமாக இருந்த சரண்யா மென்குரலில் பேசத் தொடங்கினார். ''இவங்க ரெண்டு பேருமே வார்த்தைகளில் கெட்டிக்காரங்க. எனக்கு என் சந்தோஷத்தைச் சொல்ல வார்த்தைகளைத் தேடணும். தமிழ் சினிமாவில் 'அம்மா’ன்னா அழகா இருப்பாங்க. ஆனா, எனக்கு எப்பவும் அச்சு அசலா நம்ம வீட்டுச் சகோதரிகளை அடையாளம் காட்டணும்னு ஆசை. வியர்வையில் புடவை கசங்கி, தன்னைப்பத்தி கவனம் இல்லாத அம்மாக்கள்தான் தமிழக அடையாளம். அப்படி ஒரு வீராயியாகத்தான் என்னை மக்கள் ஏத்துக்கிட்டாங்க. மார்க்கெட்டுக்குப் போனால், 'இவ்வளவு அழகா இருக்கீங்க... படத்துல வியர்வையும் எண்ணெய் வழியுற முகமா இருக்கீங்களே’னு பெண்கள் கையைப் பிடிச்சுக்குவாங்க. அசல் வாழ்க்கை அப்படித்தானே இருக்குன்னு அவங்களுக்கு அந்த இடத்தில் புரியவைக்க முடியாது. சிரிச்சுட்டே வந்துடுவேன். எங்க அப்பா இயக்குநர் ராஜ், தேசிய விருது பெற்றவர். இப்போ எனக்கும் அந்த கௌரவம் கிடைச்சிருச்சுன்னு அவருக்குக் கரை கொள்ளாத சந்தோஷம். என்னை வழி நடத்தும் கணவர் பொன்வண்ணனுக்கும் இந்த விருதில் சரிசமப் பங்கு இருக்கு. ஒரு விருது இவ்வளவு சந்தோஷம் கொடுக்குமா?'' - நன்றியில் நனைகின்றன சரண்யாவின் விழிகள்!

சபாஷ் சரித்திரம்!

நவரச 'மைனா’வில் நகைச்'சுவை’யைக் குத்தகைக்கு எடுத்த தம்பி ராமையாவுக்குச் சிறந்த குணச்சித்திர நடிகருக்கான அங்கீகாரம்.

''புதுக்கோட்டைக்குப் பக்கத்துல இருக்குற ராராபுரம்தான் என் சொந்த ஊரு. அப்பா, தமிழ்ப் புலவர். நமக்குப் படிப்பு ஏறலை. வள்ளி திருமணம் நாடகம் நடிப்பேன். சினிமா பாட்டு வரிகள்ல வேற வார்த்தைகளைப் போட்டு காமெடியாப் பாடுவேன். கவிதை எழுதி, மியூஸிக் போட்டு, டி.ராஜேந்தர் மாதிரி பிரபலம் ஆகணும்னு சென்னைக்கு வந்தேன். வேற வேற வேலை பார்த்துட்டுத் திரிஞ்சேன். கல்யாணம் முடிஞ்சு ரெண்டு குழந்தைங்களும் ஆச்சு. பட்ட கஷ்டங்களைச் சொன்னால், புல்லும் புறாவும்கூட தண்ணி குடிக்காது. வடிவேலுகூட சேர்ந்து 'பிறகு’ படத்தில் கொஞ்சம் காமெடி பண்ணேன். ஒரு ஸீன்ல நடிச்சிட்டு வந்ததும், 'பங்காளி... நீ பிறவி நடிகன்’னு சொன்னார் வடிவேலு. அவர் அப்படி சாமான்யமா சொல்ல மாட்டார்.

சபாஷ் சரித்திரம்!

பிரபு சாலமன் 'மைனா’ வாய்ப்பு கொடுத்தப்போ, மனப்பூர்வமா செய்தேன். என்னவோ நடக்கும்னு தோணுச்சு. ஆனா, தேசிய விருது நமக்கு ரொம்ப அதிகம். சாமியை இனிமேல் நல்லாக் கும்பிடணும். கமல், விஜயகாந்த், சரத்னு எல்லோரும் பேசினாங்க. பிரகாஷ்ராஜ் அரை மணி நேரம் என் நடிப்பைப்பத்தி மட்டுமே பேசிட்டு இருந்தார். பாலா சார் 'மைனா பார்த்துட்டு, 'உனக்குப் பல சந்தோஷம் வரும். காத்திரு’ன்னு சொன்னார். சித்தர் வாக்கு பலிச்சுருச்சு.

பொதுவா 45 வயசுல பிரச்னையைத் தாங்கிக்கிற சக்தி, மனசுக்கு இருக்காது. நோயைத் தாங்கிக்கிற சக்தி, உடம்புக்கு இருக்காது. இந்த வயசுல விருதுன்னு பெரிய சக்தியைக் கொடுத்திருக்கு சாமி. எல்லோரும் காலையில் எழுந்து குளிச்சிட்டு சாமியைக் கும்பிடுங்க சாமிகளா!''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism