Published:Updated:

சினிமா விமர்சனம் : கண்டேன்

விகடன் விமர்சனக் குழு

சினிமா விமர்சனம் : கண்டேன்

விகடன் விமர்சனக் குழு

Published:Updated:
##~##

ரே ஒரு பொய்... காதலில் என்ன சிக்கல்களை ஏற்படுத்தும் என்பதுதான் 'கண்டேன்’!

பார்வையற்றவர்போல நடித்து, நம்ப வைத்து ராஷ்மியைக் காதலிக்கிறார் சாந்தனு. திருமணம் முடியும் தருணத்தில் உண்மை தெரிந்து சாந்தனுவை உதறுகிறார் ராஷ்மி. சமாதானப் படலங்களுக்குப் பிறகு, பெற்றோர் சம்மதத்துடன் இருவருக்கும் திருமணம் நிச்சயம் ஆகிறது. ஆனால், இப்போது ஒரு அடிதடியில் உண்மையிலேயே சாந்தனுவுக்கு நிஜமாகவே பார்வை பறி போகிறது. இப்போது கண் தெரிவதுபோல நடிக்க வேண்டிய சூழல் சாந்தனுவுக்கு. காதல் என்ன ஆகிறது என்பது க்ளைமாக்ஸ்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சினிமா விமர்சனம் : கண்டேன்

அறிமுக இயக்குநர் முகில் 'எந்த ரிஸ்க்கும் எடுக்க வேண்டாம்’ என்று நினைத்ததோடு, 'எந்த லாஜிக்கும் வேண்டாம்’ என்றும் யோசித்து இருப்பார்போல. முதல் பாதி முழுக்கவே 'அடுத்த ஸீன் இதுதானோ’ என்ற எதிர்பார்ப்புக்குக்கூட இடம் அளிக்காமல், 'பலே பாண்டியா’ காலத்துக் காட்சிகளால் அடுக்கி இருக்கிறார்கள். இடைவேளை ட்விஸ்ட்டுக்குப் பிறகு, சாந்தனு பார்வை தெரிவதுபோல நடிக்கும் அத்தியாயங்கள் மட்டுமே சுமார் சுவாரஸ்யம்!  

'காதலியிடம் பொய் சொல்லிவிட்டோமே!’  என்ற குற்ற உணர்ச்சி வர வேண்டிய இடங்களில் தேமே என்று இருக்கிறார் சாந்தனு. ஆனால், அதே 'தேமே’ பார்வை இல்லாதவராக நடிக்கும் சமயங்களில் கை கொடுக்கிறது. 'செம ஸ்கோப் உள்ள ஹீரோயின் கேரக்டர்’ என்று ஷூட்டிங்குக்கு முன்னர் ஏமாந்ததில் தொடங்கி, க்ளைமாக்ஸ் வரை ஏமாந்துகொண்டே இருக்கும் ராஷ்மியின் உறுத்தாத அழகு படத்தின் ரிலாக்ஸ் கஃபே!

'தான் தண்ணி அடிக்கிறப்போ... தக்காளி ஊறுகாயை நக்கிச் சாப்பிடுறது, அடுத்தவன் காசுன்னா... ஆமைக் குஞ்சு கேட்குதா... அனகோண்டா குஞ்சு கேக்குதா?’, 'போலீஸ்கிட்ட பொய் சொல்லக் கூடாதா? டாக்டர்கிட்டயும் வக்கீல்கிட்டயும்தானே பொய் சொல்லக் கூடாது!’ - சந்தானத்தின் சாம்பிள் சிக்ஸர்கள் இவை. பின்பாதி முழுக்க ஒற்றை ஆளாகத் தியேட்டர் பாப்புலேஷனை இருக்கவைக்கிறார் சந்தானம்! ஆனால், சமயங்களில் 'மாற்றுத் திறனாளி’களை எல்லை மீறிக் கிண்டல் அடிப்பது சரியா சந்தானம்?  

கமிஷனர் ஆசிஷ் வித்யார்த்தியே, 'கமிஷனரோடு எனக்கு முக்கியமான மீட்டிங் இருக்கு’ என்று சொல்லிக் கிளம்புகிறார். படத்தின் 'லாஜிக் மேஜிக்’ மேளாவுக்கு இது ஒரு நல்ல்ல்ல்ல உதாரணம். படத்தின் முக்கியத் திருப்பங்கள் அனைத்தையும் கதாபாத்திரங்கள் 'நினைத்துப் பார்ப்பதாக’வே காட்டி

சினிமா விமர்சனம் : கண்டேன்

இருப்பதால், அவ்வப்போது வரும் சுவாரஸ்யமான காட்சிகளையும் 'கற்பனையோ’ என்று சந்தேகிக்க வேண்டி இருக்கிறது. சாந்தனு ராஷ்மியைப் பார்த்தால், சிரித்தால், கண்ணடித்தால், 'ஏய்... பாட்டைப் போட்ராதீங்கப்பா’ என்று தியேட்டர் கோரஸையும் மீறி பாடல் வந்தே விடுகிறது.  

விஜய் எபிநேசரின் இசையில் முணுமுணுக்கவைக்கும் 'உன்னைக் கண்டேனே’ பாடலுக்கு, ஜாலி கேலியாக நடனம் அமைத்திருக்கிறார் டான்ஸ் மாஸ்டர் ராபர்ட்.  

சாந்தனுவுக்கு நிச்சயிக்கப்பட்ட கிராமத்துப் பெண்ணின் முகம் காட்டாமலேயே சதாய்ப்பதுபோன்ற இடங்களில் மட்டுமே ஈர்க்கிறது இயக்கம். மற்றபடி, லாஜிக்கை மறந்து, துறந்தால் கண்டேனைக் கண்டு ரசிக்கலாம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism