Published:Updated:

ரஜினி சிங்கப்பூர் ரிப்போர்ட்!

இரா.சரவணன்படம் : ஜி.அழகிரிவேல்

ரஜினி சிங்கப்பூர் ரிப்போர்ட்!

இரா.சரவணன்படம் : ஜி.அழகிரிவேல்

Published:Updated:
##~##

''ஹலோ! நான் ரஜினிகாந்த் பேசறேன்... எவ்வளவு சீக்கிரம் திரும்பி வர முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் வந்துடுறேன் ராஜாக்களா... பணம் வாங்கறேன்... ஆக்ட் பண்றேன். இதுக்கே நீங்க இவ்வளவு அன்பு காட்டுறீங்கன்னா, உங்களுக்கு நான் என்ன கொடுக்கிறது? என்ன சொல்றது? நீங்க கொடுக்கிற அன்புக்கு நான் என்னத்தைத் திருப்பிக் கொடுக்கப் போறேன் கண்ணா... நீங்க எல்லாம், நம்ம ஃபேன்ஸ் எல்லாம் தலை நிமிர்ந்து வாழ்ற மாதிரி நான் நடந்துக்கிறேன் கண்ணா... சீக்கிரமே வந்துடுறேன்'' - அந்த மின்சார காந்தக் குரல் தழுதழுப்பும் நெகிழ்ச்சியுமாக வெளியாக, ரஜினி ரசிகன் ஒவ்வொருவனின் விழிகளிலும் கண்ணீர் அணை கட்டிக்கொண்டது!  

 'தலைவரின் குரலில் ஏன் இத்தனை தழுதழுப்பு? ஒருவேளை அவருக்கு உண்மையிலேயே பெரிய பிரச்னையோ?’ என அப்பாவி ரசிகனின் மனது பதறித் தவிக்கிறது. 'இது தலைவரின் நிஜப் படம்தானா?’ என இணையத்தில் வெளியான புகைப்படங்களைப் புலனாய்வு செய்த ரசிகன், 'அந்தக் குரலும் ஏன் மிமிக்ரியாக இருக்கக் கூடாது?’ என சந்தேகத்தில் மருளுகிறான். எளிமையும் உண்மையுமாகத் தன் வாழ்வியல் கோட்டை வகுத்துக்கொண்ட ரஜினியின் அசாத்திய சம்பாத்தியம் இந்த அன்புதான்!

ரஜினி சிங்கப்பூர் ரிப்போர்ட்!

ரசிகர்களோ, மீடியாவோ அறியாத ரகசியத்தில், ரஜினி தனி ஆம்புலன்ஸில் ஏர்போர்ட் கிளம்பும் தருணத்தில், அவரோடு நெருங்கிப் பேசிக்கொண்டு இருந்தவர் ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி மாணவரான சுகந்தன். ரஜினிக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர் சௌந்தரராஜனின் மகன். ரஜினி ரசிகன். நலம் விசாரித்த சுகந்தனிடம் வாஞ்சையோடு பேசிய ரஜினி, அவருடைய உள்ளங்கையில் ஆட்டோகிராஃப் போட்டார். ''ரஜினி சார் ரொம்ப நல்லா இருக்கார். நல்லாப் பேசுறார்.

ஏர்போர்ட்டுக்குக் கிளம்பும் அவசரத்தில்கூட என்னை அக்கறையோட விசாரிச்சு, 'அப்பா மாதிரி பெரிய டாக்டராவும், அப்புறம் தாத்தா (குமரி அனந்தன்) மாதிரி பெரிய தலைவராவும் வரணும்’னு வாழ்த்தினார். அப்போ, நான் அவர்கிட்ட ஆட்டோகிராஃப் கேட்டேன். பேப்பர் ஏதும் இல்லாததால், 'கையைக் காட்டு கண்ணா’ என்றவர், 'காட் இஸ் கிரேட்!’னு எழுதி ஆட்டோகிராஃப் போட்டுக் கொடுத்தார். தனக்கு எவ்வளவு இக்கட்டான சூழலிலும் தன் ரசிகனின் மனம் வருந்திவிடக் கூடாதுன்னு நினைக்கிறார் பாருங்க... அதான் சார் ரஜினி!'' என்கிறார் நெகிழ்ச்சியுடன்.

''சிங்கப்பூர் கிளம்பிய ரஜினி சாரை நான் பக்கத்தில் இருந்து பார்த்தேன். ரொம்பத் தைரியமாவும் உற்சாகமாவும் இருக்கார். அவரைத் தனி ஆம்புலன்ஸில் கொண்டுபோக வேண்டியதே இல்லை. அவ்வளவு ஹெல்த்தியா இருந்தார். டாக்டர்களிடம் நல்லா சிரிச்சுப் பேசுறார். ஒரு டாக்டரா சொல்றேன், நிச்சயம் அவர் சீக்கிரமே குணமாகி வருவார். 'எந்திரன்’ மாதிரி இன்னொரு ஹிட் கொடுப்பார்!'' எனச் சிலிர்க்கிறார் தமிழிசை சௌந்தரராஜன்.

சிங்கப்பூரில் உள்ள மவுன்ட் எலிசபெத் மருத்துவமனையில்தான் ரஜினி அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். மருத்துவர்கள் சௌந்தரராஜன், முரளிதரன் உடன் இருக்க, ரஜினிக்கு சிங்கப்பூர் மருத்துவர்கள் சிகிச்சை மேற்கொள்கிறார்கள். ''அனுமதிக்கப்பட்ட முதல் நாளே ரஜினியின் உடம்பில் இருந்த வீக்கம் வடிந்துவிட்டது. இரண்டு நாட்கள் டயாலிஸிஸ் நடந்தது. 'இனி பயம் இல்லை’ என்கிற அளவுக்கு ரஜினியே தைரியம் தெரிவித்ததால், மூன்றாவது நாளே தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்து சாதாரண வார்டுக்கு ரஜினி மாற்றப்பட்டார். இரண்டு நாள் டயாலிசிஸ் மூலமே ரஜினிக்கு கிட்னி ஓரளவுக்கு இயல்பு நிலைக்குத் திரும்பி இயங்கத் தொடங்கிவிட்டது. ரஜினி, உறவினர்களோடு நன்றாகச் சிரித்துப் பேசுகிறார். சிங்கப்பூர் தமிழ்ச் சங்க நிர்வாகிகள் அவரைச் சந்திக்க விரும்புவதாகத் தகவல் சொல்லப்பட, 'ஓ... சந்திக்கலாமே’ என வரச் சொன்னார் ரஜினி. ஆனாலும், இப்போதைக்கு அவருக்கு ஓய்வு அவசியம் என்பதால், நாங்கள் அவர்களை அனுமதிக்கவில்லை. பேரக் குழந்தைகளோடு குழந்தையாக ரஜினி கொஞ்சி விளையாடிக்கொண்டு இருக்கிறார்!'' என்கிறார்கள் அங்கு இருக்கும் மருத்துவர்கள்.

''அடுத்து, ரஜினிக்கு கிட்னி மாற்று சிகிச்சை நடக்கப்போகிறதாமே?'' எனக் கேட்டால், ''மிகுந்த உற்சாகத்தோடு இருக்கும் ரஜினிக்கு கிட்னி மாற்று சிகிச்சை அநேகமாகத் தேவைப்படாது. இன்னும் சில நாட்களில் கிட்னி முழுமையான செயல்பாட்டைத் தொடங்கிவிடும்!'' என்கிறார்கள் நம்பிக்கையாக.

சென்னையில் ராமச்சந்திரா மருத்துவமனையைச் சுற்றி ரஜினி ரசிகர்கள் வலம் வந்ததைப்போலவே சிங்கப்பூர் மவுன்ட் எலிசபெத் மருத்துவமனையிலும் தமிழ் ரசிகர்களின் கூட்டம். ஆனால், 'சந்திக்க வாய்ப்பே இல்லை’ என ரஜினியின் உறவினர்கள் மறுத்துவிட்டதாலும் மருத்துவமனை நிர்வாகத்தின் கெடுபிடியாலும் ரசிகர்கள் தளர்ந்துபோனார்கள்.  

தென் கிழக்கு ஆசியாவிலேயே மிக நவீனமான மவுன்ட் எலிசபெத் மருத்துவமனையில் வி.வி.ஐ.பி-க்களுக்கு மட்டுமே சிகிச்சை. ரஜினியைப்போல் 30-க்கும் மேற்பட்ட பிரசித்தி பெற்ற புள்ளிகளுக்கு சிகிச்சை நடக்கிறதாம். இங்கு சிகிச்சை எடுத்துக்கொள்ளச் சொல்லி ரஜினி குடும்பத்தினருக்கு வழிகாட்டியது அமிதாப் பச்சன் என்கிறார்கள். 373 வார்டுகள் கொண்ட மருத்துவமனையில் ரஜினி அனுமதிக்கப்பட்டு இருக்கும் அறை எண்கூட ரகசியமாக வைக்கப்பட்டு இருக்கிறது. அனைத்துப் பகுதிகளிலும் கேமரா கண்காணிப்பு இருப்பதால், ரசிகர்களால் ஹாஸ்பிடல் வளாகத்தைக்கூட நெருங்க முடிய வில்லை.

உள்ளூர் மீடியாக்களின் தொடர் படையெடுப்பு பொறுக்காமல் வெளியே வந்த ரஜினி மருமகன் தனுஷ், ''இங்கே வந்ததுக்கு அப்புறம் ரஜினி சார் நல்லா இருக்கார். உற்சாகமா இருக்கார். உங்களைச் சந்தித்துவிட்டுத்தான் சென்னைக்குப் போவார்!'' என்று சொன்னார். அதுவே, இப்போதைக்கு அந்த வளாகத்தைச் சுற்றிக்கொண்டு இருக்கும் ரஜினி ரசிகர்களுக்கான ஆறுதல்!