Published:Updated:

சினிமா விமர்சனம் : எத்தன்

விகடன் விமர்சனக் குழு

சினிமா விமர்சனம் : எத்தன்

விகடன் விமர்சனக் குழு

Published:Updated:
##~##

ரே கடனைத் திருப்பிக் கேட்டுத் துரத்த, கிரெடிட் கார்டு கடன்களை வசூலிக் கும் வேலையில் சேர்ந்து தன்னைத் துரத்துபவர்களைத் திருப்பித் துரத்தும்... 'எத்தன்’!

 'பிசினஸ் மேக்னட்’ லட்சியம் கொண்ட விமலுக்கு, தொட்ட எதுவும் துலங்காமல் பட் பட்டென்று உடைந்து, எக்கச்சக்கக் கடன் கழுத்தை நெரிக்கிறது. கடன் துரத்தல்களுக்கு இடையில், சனுஜாவுடன் நட்'பூ’. இதனால் கட்டாயத் திருமண வில்லன் மாமனிடம் இருந்து சனுஜாவைக் காப்பாற்ற வேண்டிய 'கடமை’யும் வந்து சேர, கடன்கார விமல், எப்படிக் காவல்காரனாக மாறுகிறார் என்பதைக் கொஞ்சம் விறுவிறுப்பும் நிறைய கலகலப்புமாகச் சொல்கிறார் அறிமுக இயக்குநர் சுரேஷ்.

சினிமா விமர்சனம் : எத்தன்

கதாநாயகன் ஒரு மிமிக்ரி கலைஞன் என்பதை மேம்போக்காகக் காட்டாமல், அதையே கடன்காரர் களைச் சமாளிக்கும் யுக்தியாகப் பயன்படுத்தி இருப்பது புத்திசாலித்தனம். கலகல கதையில் மீண்டும் மீண்டும் பணச் சிக்கலே சுற்றிச் சுழல்வது அலுப்பு. ஆனாலும், முதல் பாதி சலிப்பை இரண்டாம் பாதியின் பரபரப்பு ஈடுகட்டுகிறது.

ஹெல்மெட் மாட்டிக்கொண்டு சைக்கிளில் சுற்றுவது, 'பிட் அடிக்கிறது எவ்வளவு கஷ்டம்?’ என்று வகுப்பு எடுப்பது, 'எனக்கே தெரியாமல் என் பேர்ல உலக வங்கியில் இந்தியா கடன் வாங்கும்போது, நான் மட்டும் கடன் வாங்குறது தப்பா?’ என 'லகலக லாஜிக்’ கொடுப்பது என்று விமல் கடன் மன்னன். அதிலும், 'அண்ணே, 'எந்திரன்’ படம் பார்க்க வந்திருக்கீங்களா...

பிரமாண்டமா இருக்காமே?’ என்று கடன் கொடுத்தவரிடம் விமல் விசாரிக்க, 'உன்னையவிடவா பிரமாண்டமா படம் காட்டிறப் போறாங்க?’ என்று நொந்து வெந்த வேதனையில் அவர் பதில் அளிப்பது குபீர் கிச்சுகிச்சு!  

சனுஜாவுக்கு பார்க்கச் சலிக்காத குழந்தை முகம். அதனாலேயே அவர் மாமனைக் கண்டு மிரள்வது கூடுதல் பரிதாபம் கொடுக்கிறது. ஆனால், அந்த போர்ஷன் அப்படியே 'கில்லி’யின் ஜல்லி!  

தன்னிடம் கடன் கேட்பவரிடம், நமீதா போஸ்டரைத் தொட்டு வரச் சொல்வதும், அவர் வந்தவுடன், 'இப்பவே நீ இந்த ஓட்டம் ஓடுற... உனக்குக் கடன் கொடுத்தா, இன்னும் வேகமா ஓடுவே’ என்று மறுக்கும் சிங்கம்புலி, படம் முழுக்க காமெடி கேம் ஷோ நடத்துகிறார். ஒரே காட்சியில் வந்தாலும் போலிச் சாமியார் எம்.எஸ்.பாஸ்கர் 'குபீர்’ சிரிப்பை வரவழைக்கிறார்.

சினிமா விமர்சனம் : எத்தன்

மகனுக்காக பார்த்துப் பார்த்துக் கட்டிய வீட்டை ஜெயப்பிரகாஷ் விற்றுக் கடன் அடைப்பது எத்தனை உருக்கமாகக் காட்சியாகி இருக்க வேண்டும்! அதிலுமா காமெடி ராவடியைத் திணிப்பது? இப்படி எங்கும், எப்போதும் காமெடி செய்வதால், கலங்கவைக்க வேண்டிய ஸீன்கள் கவனமே பெறாமல் கடந்துவிடுகிறதே டைரக்டர் சார்? 'அப்பாடா படம் முடிவுக்கு வருகிறது’ என்று நிமிர்ந்து உட்காரும்போது, சேஸிங், சம்பத் என்ட்ரி என்று இழுத்தடிக்கிறார்கள்.

வில்லன்களிடம் மாட்டிக்கொண்ட விமல், வாக்கி-டாக்கியில் போலீஸ் கேட்பதற்காக, ''இது தூத்துக்குடியா?'' என்று கேட்பதும், அதற்கு வில்லன் மெனக்கெட்டு இடம் சொல்வதும்.. சீரியஸ் கிச்சுகிச்சு!

முதல் பாதியில் வரும் காமெடிக்கு தாஜ்நூரின் பின்னணி இசை செம எரிச்சல். காமெடி டயலாக்கு களுக்கு டொய்... டொய் என்று எஃபெக்ட் கொடுப்பது எல்லாம் ஏன் நண்பா?

இருந்தாலும் எத்தன்.. காமெடி சித்தன்!