ஸ்பெஷல் -1
Published:Updated:

சினிமா விமர்சனம் : விருதகிரி

சினிமா விமர்சனம் : விருதகிரி

##~##
வெ
ளிநாட்டில் தீவிரவாதிகளின் கைகளில் சிக்கிய பெண்ணை, அதிரடி ஆக்ஷன் மூலம் காப்பாற்றும் போலீஸ் ஹீரோவே... ஆங்... விருதகிரி!

 போலீஸ் அதிகாரி விஜயகாந்த், திருநங்கைகளைக் கடத்திக் கொலை செய்து, அவர்களின் உடல் உறுப்புகளை வெளிநாடுகளில் விற்கும் கும்பலை முடக்குகிறார். அந்த நேரத்தில் விஜய காந்த்தின் நண்பரின் மகளான மாதுரி இடாகி (அறிமுகம்) மேற்படிப்புக்காக ஆஸ்திரேலியா போகிறார். அங்கு சர்வதேசத் தீவிரவாதக் கும்பல் மாதுரியை மடக்கிக் கடத்துகிறது. பெண்ணை மீட்கச் செல்லும் விஜயகாந்த், தீவிரவாதிகளை முறியடித்து, எப்படிக் காப்பாற்றுகிறார் என்பதே கதை.

'டேக்கன்’, 'வாசபி’ எனச் சில படங்களின் கலவையாக 'ஜக்குபாய்’ வெளியானது. அதன் தொடர்ச்சியாக 'விருதகிரி’யை வெளியே விட்டு இருக்கிறார் விஜயகாந்த். அவர் இயக்கி உள்ள முதல் படம். 'நான் விருதகிரி. பஞ்ச பூதங்களையும் கட்டி ஆள்றவன்டா’ என ஓப்பனிங்கிலேயே எகிறல். ஸ்காட்லாந்து யார்டில் பயிற்சி எடுக்கச் செல்லும் விஜயகாந்த், அந்த நாட்டுப் பிரதமரைத் தீவிரவாதிகளிடம் இருந்து காப்பாற்றி, ஸ்காட்லாந்து யார்டுக்கே பயிற்சி கொடுக்கிறார். இருக்காதா... பின்னே!

பல தடவை பழக்கப்பட்ட கேரக்டரில், பஞ்ச் பொறி பறக்க பட்டையைக் கிளப்புகிறார் விஜயகாந்த். திருநங்கைகளைக் கொன்று, உடல் உறுப்புகளைக் கடத்தும் காட்சிகள் திரைக்கதையில் திகீர் திருப்பம் கொடுக்கிறது. கொஞ்ச நேரத்தி லேயே கடத்தல் கும்பலைத் தனியே விட்டுவிட்டு, பொலிடிக்கல் பொடிமாஸ் போடுகிறார் விஜயகாந்த்.

சினிமா விமர்சனம் : விருதகிரி

'அண்ணே, நீங்க வர மாட்டீங்கன்னு நினைச்சோம். வந்துட்டீங்களே?, நான் வரக் கூடாதுன்னுதான் எல்லாரும் நினைக்குறாங்க. ஆனா, காலம் என்னை வரவழைச்சுடுச்சு’, 'பைப் மட்டும்தான் போட்டாங்க. தண்ணீர் வரலை..., பைசா வாங்கிட்டு ஓட்டு போட்டா, பைப் மட்டும்தான் வரும்’, 'சேனல்காரங்க எடுக்குற படத்துக்கு மட்டும் எங்கேயும் திருட்டு டி.வி.டி. கிடைக்க மாட்டேங்குதே... என்ன மர்மம் இது?’ இப்படி காட்சிக்குக் காட்சி பறந்து வரும் பஞ்ச் பதறவைக்கிறது. வில்லனை விசாரிப்பதற்காக விஜயகாந்த் கரன்ட் ஷாக் கொடுக்கும் ஸீனில், 'இது தமிழ்நாடு இல்ல. இங்கே 24 மணி நேரமும் கரன்ட் சப்ளை உண்டு. நீ தப்பிக்க முடியாது’ என்று கண்கள் சிவக்க விஜய்காந்த் பேசுவது அட்டாக்கின் உச்சகட்டம்.  

படம் முழுக்க ஆஸ்திரேலியர்களும், அல்பேனியர்களும் பேசும்போது அவர்களின் குரல் டெஸிபலைக் குறைத்து பின்னணியில் தமிழ் டப்பிங் கொடுத்து இருப்பது ஓ.கே-தான். ஆனால், விஜயகாந்த் உள்பட பல கேரக்டர்கள் மேஜர் சுந்தர்ராஜன் கணக்காக, 'வாட் இஸ் யுவர் டிமாண்ட்? உங்க கோரிக்கை என்ன?’ என ஒரே வசனத்தை இரு மொழிகளில் பேசுவது செம காமெடி.

சினிமா விமர்சனம் : விருதகிரி

ஆஸ்திரேலியாவில் தாக்குதலுக்கு உள்ளாகும் இந்திய மாணவர்கள் பற்றிய விஷயத்தையும் திரைக்கதைக்குள் கொண்டு வந்திருப்பது புத்திசாலித்தனம். ஆனால், அது காட்சியில் விறுவிறுப்பாக இல்லாமல் வசனத்தில் மட்டும் முடங்கிவிடுகிறது. 'சர்வதேசத் தீவிரவாதிகள்’ என பில்ட்-அப் எல்லாம் கடுமையாக இருக்கிறது. ஆனால், அத்தனை பேரும் விருதகிரியின் பின்னங்காலில் அடி வாங்கிச் செத்து விழுகிறார்கள்.

சுந்தர் சி பாபுவின் இசை எதிர்பார்ப்பு எதுவும் கொடுக்காமலேயே கடந்துவிடுகிறது. பூபதியின் ஒளிப்பதிவு, ஆக்ஷன் காட்சிகளில் மட்டுமே வேகம் எடுக்கிறது.

விஜயகாந்த்துடன் ஒரு பொலிடிக்கல் டூர் அடித்த எஃபெக்ட்!