Published:Updated:

அம்மா எப்பவும் ஒரு அடி ஜாஸ்திதான்!

ஆ.அலெக்ஸ் பாண்டியன், படங்கள்: பா.கார்த்திக்

##~##

''சும்மாவே நமக்கு நாக்குல சனி. இதுல ஜாலி பேட்டி வேறயா? இப்பவே சொல்லிடுறேன்... இந்தப் பேட்டியில் வரும் சம்பவங்கள், கருத்துகள், பெயர்கள் யாவும் கற்பனையே. யாரையும் புண்படுத்தும் நோக்கமல்ல... ஆங்!'' கோவா பீச் சுண்டல் வியாபாரி போன்ற கெட்டப்புடன் ஜாலி கேலிக்குத் தயாரானார் ஜான் விஜய்!

''எம்.பி. பொண்ணைக் காதலிச்சு கல்யாணம் பண்ணியிருக்கீங்க. ரன்னிங்... சேஸிங்... ஃபைட்டிங்லாம் இருந்திருக்குமே?''

''விஷயம் தெரிஞ்சதும் என் அம்மாவுக்குப் பயங்கர பயம். அதுவும் அவங்க நார்த் மெட்ராஸ் பார்ட்டி வேற. கல்லைக் கட்டி கடல்ல தூக்கிப் போட்டா என்ன பண்றதுனு எனக்கும் மெர்சல்தான். ஆனா, எங்க மாமா ரொம்ப ரொம்ப ஸ்வீட் அரசியல்வாதி. ஆக்ஷன் ப்ளாக் எதுவும் இல்லாம, நேரா கல்யாண க்ளைமாக்ஸுக்குப் போயிட்டார். என்ன ஒண்ணு, இப்பவும் என்னைப் பார்த்தா 'மாப்பிள்ளை’னு மிரளாம, கொஞ்சம் காமெடியா சிரிப்பார். அதை நம்ம நடிப்புக்குக் கிடைச்ச ஆஸ்கரா நினைச்சுக்க வேண்டியதுதான்!''

''டோனி இப்போ வெச்சிருக்கிற ஹேர் ஸ்டைலுக்குப் பேர் என்ன?''

''அட, அதுக்குப் பேர் வேற இருக்கா? தேங்காய் துருவல் ஹேர் ஸ்டைல்னு வெச்சுக்கலாம். இல்லைன்னா, முள்ளம்பன்றி ஹேர் ஸ்டைல்னு சொல்லலாம். ஆனா, இதெல்லாம் எங்க அண்ணன் செந்தில் எப்பவோ பண்ணிட்டாரு. அதை யாராச்சும் டோனிகிட்ட சொல்லுங்கப்பா!''

அம்மா எப்பவும் ஒரு அடி ஜாஸ்திதான்!

''எத்தனையோ காஸ்ட்யூம் இருக்க, ஏன் அரசியல்வாதிகள் வெள்ளை வேட்டி, சட்டையே போட்டுக்கிறாங்க?''

''ஃபைலை டக்குன்னு எடுத்து ஒளிச்சு வெச்சுக்கலாம்னு இருக்குமோ? எனக்கு ஒண்ணு தோணுது. ஆனா, அதை நான் சொல்லப்போயி, அப்புறம் வேட்டி கட்டின அரசியல்வாதிகள்லாம்  என்னை வாட்டி எடுத்துட்டா? நமக்கு எதுக்குங்க அதெல்லாம். அவங்க வேட்டிதான் கட்டிக்கட்டும்; இல்ல... கோவணம்தான் கட்டிக்கட்டும். ஆளை விடுங்க பாஸ்!''

''நீங்க ஆட்டோல போறப்ப, டிரைவர் மீட்டர் போட மாட்டேன்னு சொன்னா என்ன பண்ணுவீங்க?''

''நம்மகிட்ட யாரும் அந்த டகால்ட்டி வேலை பண்ணமாட்டாங்க. மீறி யாராவது டபாய்ச்சா, அப்புறம் நம்ம ஃப்ளாஷ்பேக்கை எடுத்துவிட வேண்டியதுதான். 'கண்ணா... ஊருக்குள்ள நமக்கு இன்னொரு பேரு இருக்கு... 'ஆட்டோ டிரைவர் ஜான் விஜய்’ நான் காலேஜ் படிக்கும்போதே, சேத்துபட்டு ரயில்வே ஸ்டேஷன் பக்கம் ஆட்டோ ஓட்டினவன். ஹவ் இஸ் இட்... சூப்பர்ல!''

''லஞ்ச போலீஸா நடிச்சிருக்கீங்க. நீங்க  போலீஸுக்கு லஞ்சம் கொடுத்த ஒரு சம்பவம் சொல்லுங்க!''

''கையில பத்து பைசா இல்லாம வறுமையில வாடிய காலம். போதையில தெரியாத்தனமா சிக்னல் போடுறதுக்கு முன்னாடியே ரோட்டை க்ராஸ் பண்ணிட்டேன். சட்டையைக் கோத்துப் பிடிச்ச போலீஸ்காரர் ஓவர் சவுண்டுவிட்டார். 'சார் என்கிட்ட வெறும் நாலு ரூபாதான் இருக்கு. அதுபோக, ஒரு ஊறுகாய் பாக்கெட், ஒரு பாக்கு பாக்கெட் இருக்கு. வேற ஒண்ணும் இல்லை’னு சொன்னேன். 'பரவால்ல... அதெல்லாம் குடு’னு எல்லாத்தையும் வாங்கிக்கிட்டாரு!''  

'' 'There is love after love’னு சொல்றாங்களே... அந்த மாதிரி உங்களுக்குக் கல்யாணத்துக்கு அப்புறம் காதல் வந்திருக்கா... வேற பொண்ணோட?''

''இப்போ என்ன, ஏதாவது சம்பவம் நடக்கணும் உங்களுக்கு... அதானே! கார்ல போற அழகியைப் பார்த்தா, 'ஐயோ’னு மனசு பறக்கும். ரோட்டை க்ராஸ் பண்றப்போ பக்கத்துல ஒரு தேவதையைப் பார்த்தா, ஜிவ்வுங்கும். ஆனா, அதெல்லாம் காமம் பாஸ். காதல் தினமும் வருது. அது என் மனைவியோட மட்டும்! எப்படி... கிரேட் எஸ்கேப்பா!''

''ஜெயலலிதா ஆட்சிக்கு மார்க் போடுங்களேன்?''

''பத்துக்கு பதினொன்னு மார்க். ஏன்னா, அம்மா எப்பவும் எல்லா விஷயத்திலும் ஒரு அடி ஜாஸ்திதான்!''

''சினிமா-100 விழாவுக்கு கருணாநிதியை அழைக்காதது தப்புதானே?''

''உங்க கொடூர எண்ணம் எனக்குப் புரிஞ்சிருச்சு. ஆனா, நான் சிக்கமாட்டேன். நோட் பண்ணிக்கோங்க... சினிமான்னாலே கலைஞர்தான். அப்புறம் அவரைக் கூப்பிட்டா என்ன, கூப்பிடாட்டி என்ன? அழைப்பிதழ்ல பேர் இல்லாததாலேயோ, ஸ்க்ரீனிங்ல அவர் படம் போடாததாலேயோ எங்க கலைஞர் தாத்தா, 'கலைஞர்’ இல்லைனு ஆயிடுமா? அதையெல்லாம் எங்க தாத்தா எதிர்ப்பார்க்கிறதில்லை. அவரு ரேஞ்சே வேற!''

''குவார்ட்டர்... ஹாஃப்... ஃபுல்... உங்க லிமிட் என்ன?''

''அப்படிலாம் குத்துமதிப்பா சொல்லிட முடியாது. என் லிமிட்டை நான் தீர்மானிக்க முடியாது. அதுலாம் நேரம், காலம் கைல இருக்கு. காலையில 11 மணிக்கு முக்கியமான மீட்டிங் இருக்குன்னா, ரெண்டு கட்டிங்தான். அதுவே மத்தியானம்தான் மீட்டிங்னா, நாலு கட்டிங். பாண்டிச்சேரி ட்ரிப்னா, ஒரு நாளைக்கு ரெண்டு ஃபுல் ஓடும் பாஸு!''