Published:Updated:

அஜித்தின் ரோல்மாடல்!

எம்.குணா

##~##

 டிகர் அஜித் பலருக்கு ரோல் மாடலாக இருக்க, 'போட்டோகிராபி, ஏரோ மாடலிங்கில் என் குரு இவர்தான்’ என்று அஜித் கைகாட்டும் நபர்... அரவிந்த். சினிமா வட்டாரத்தில் 'ஹெலிகேம்’ அரவிந்த்.  

'' 'சீவலப்பேரி பாண்டி’ படத்துக்கு நான்தான் ஒளிப்பதிவாளர். அதுக்கப்புறம் விளம்பரப் படங்கள் பண்ண ஆரம்பிச்சிட்டேன். ஒளிப்பதிவில் புதுசா ஏதாவது பண்ணணும்னு எனக்குள் ஐடியா ஓடிட்டே இருந்துச்சு. அதுக்காக வெளிநாடுகளில் சுத்த ஆரம்பிச்சேன். அப்போதான் ஹெலிகேம் அறிமுகம் ஆச்சு.

ஓரளவு டாப் ஆங்கிள் ஷாட் எடுக்கணும்னா, ஜிம்மி ஜிப் (நீளமான க்ரேன்) பயன்படுத்தணும். ஆனா, ஒரு ஷாட் முடிஞ்சதும் ஜிம்மி ஜிப்பை இடம் மாத்துறது பெரிய வேலை. இல்லைன்னா ஹெலிகாப்டரை வாடகைக்கு எடுக்கணும். அது செலவு பிடிக்கிற வேலை. இந்த ரெண்டுக்கும் மாற்றா அமைஞ்சதுதான் ஹெலிகேம்; அதாவது ஹெலிகாப்டர் கேமரா. பெரிய சைஸ் ரிமோட் ஹெலிகாப்டரில், ஸ்பெஷலா டிசைன் பண்ணின கேமராவைப் பொருத்தி, அதைப் பறக்கவெச்சுப் படம்பிடிப்பது.

இதனால் நேரமும் மிச்சம்; செலவும் குறைவு. நாமே ஹெலிகேம் செய்வோம்னு அதுக்கான பொருட்களைத் தேடினேன். அமெரிக்கா, இத்தாலி, ஜெர்மன், சீனா-னு அலைஞ்சு தேவையான பொருட்கள் வாங்கி அசெம்பிள் பண்ணி ஹெலிகேமை உருவாக்கினேன்.

அஜித்தின் ரோல்மாடல்!

'நண்பன்’ படத்தில் விஜய் ஒரு கேமராவை செட் பண்ணிப் பறக்கவிடுவாரே, அதுக்குப் பேர் 'மல்ட்டி ரோட்டர்’. அதுல கேனான்-5ஞி மாதிரி சின்ன கேமராவை செட் பண்ணலாம். ஆனா, நாங்க பயன்படுத்தும் ஸ்பெஷல் டிசைன் கேமராவுக்கு ஹெலிகேம்தான் செட் ஆகும். 'நண்பன்’ படத்தில் ஒரு சீனுக்காக எட்டு அடி உயரமும், 50 கிலோ எடையும் உள்ள பெரிய ஹெலிகாப்டர் கேமராவைப் பயன்படுத்தினேன். கிட்டத்தட்ட மினி ஹெலிகாப்டர் அது. அந்த மாதிரி பெரிய ஹெலிகேம் பண்ணும்போது ரிஸ்க் ஜாஸ்தி. ஆர்ட்டிஸ்ட் பக்கத்தில் இருந்து கிளம்பி, மேலே பறக்கும்போதோ அல்லது மேலே இருந்து கீழே இறங்கும்போதோ ஆர்ட்டிஸ்ட் மேல மோதுறதுக்கோ, காயம் ஏற்படுறதுக்கோ வாய்ப்பு இருக்கு. அதனால் அதுக்கு மாற்றா ஃப்ளை கேமராவை உருவாக்கி இருக்கேன். 'சூது கவ்வும்’ படத்தில் பணப்பையைத் திருடும் ஹெலிகாப்டர் ஃப்ளை கேமரா டைப்தான். அதில் ரிஸ்க் ரொம்பக் கம்மி. இன்றைய ஸ்டார்கள் ஃப்ளைகேம் வெச்சு ஷூட் பண்ண ரொம்பவே ஆர்வம் காட்டுறாங்க. ஏன்னா, அதுல ஷூட் பண்ணிப் பார்த்தா, பார்க்க பிரமிப்பா இருக்கும்.

அஜித்தின் ரோல்மாடல்!

விஜய் நடிக்கும் 'ஜில்லா’ ஷூட்டிங் போயிருந்தேன். விஜய் வீடு செட் போட்டிருந்தாங்க. அந்த வீட்டில் இருக்கும் ஜன்னல் வழியா ஃப்ளைகேமை உள்ள கொண்டுவந்து கிச்சன், ஹால், பூஜை ரூம்னு எல்லாத்தையும் ஒரே டேக்ல ஷூட் பண்ணிக் காட்டினேன். விஜய், மோகன்லால் ரெண்டு பேரும் அசந்துட்டாங்க. படத்தோட டைரக்டர் நேசன், 'படத்தோட க்ளைமாக்ஸ்ல உங்களுக்கு நிறைய வேலை இருக்கும்’னு கட்டிப்பிடிச்சுட்டார்.

அஜித்தின் ரோல்மாடல்!

நடிகர் அஜித், எனக்கு 'தீனா’ பட சமயமே பழக்கம். ஸ்கூல் லீவு விட்டா பசங்க கிரிக்கெட் விளையாடக் கிளம்புற மாதிரி, ஷூட்டிங் இல்லைன்னா நாங்க ரெண்டு பேரும் வீட்ல சொல்லிக்காம அச்சரப்பாக்கம் ரன்வேயில் ஏரோ மாடலிங் பண்ணக் கிளம்பிடுவோம். ரெண்டு பேர் வீட்லயும் செம திட்டு விழும். கண்டுக்கவே மாட்டோம்.

அஜித் நடிக்கிற 'வீரம்’ படத்துல செம  ட்ரெயின் ஃபைட் ஒண்ணு இருக்கு. ஒடிஸா மாநிலம் ராயகடாவில் பத்து நாட்கள் ஷூட் பண்ணினோம். படுவேகமாகப் போகும் ரயில் மேல் அஜித் சண்டை போட, ஃப்ளைகேம் சுத்திச் சுத்திப் படம் பிடிச்சது. அந்தச் சண்டைக் காட்சியை ரஷ் போட்டுப் பார்த்தபோது அஜித் கண்ணில் கண்ணீரே வந்துடுச்சு. 'நான் ஃபைட்ல எவ்வளவோ கஷ்டப்பட்டிருக்கேன். அதெல்லாம் வெளியே தெரிஞ்சதே இல்லை. இதுல ஃபைட் சீனைப் பார்க்கிறப்ப பிரமிப்பா இருக்கு’னு சிலாகிச்சார். அப்புறம் என்ன... அன்னைக்கு ராத்திரி அவர் செலவில் தல பார்ட்டிதான்'' என கலகலவெனச் சிரிக்கிறார் அரவிந்த்.