Published:Updated:

தி ரோட் டு ஆஸ்கர்

ஆ.அலெக்ஸ் பாண்டியன்

##~##

'தி லன்ச் பாக்ஸ்’, 'ஷிப் ஆஃப் தீசியஸ்’, 'விஸ்வரூபம்’, 'செல்லுலாய்ட்’... ரெவ்யூ, ரெவின்யூ இரண்டிலும் அள்ளிய படங்களை விலக்கிவிட்டு இந்தியா சார்பில் ஆஸ்கர் பரிசீலனைக்குத் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறது, 'தி குட் ரோட்’ என்ற குஜராத்தி படம்!

இந்தியா சார்பில் ஆஸ்கர் பரிசீலனைக்குத் தேர்வான ஒரு படத்தின் இயக்குநர் என்ன செய்வார்? கலர்கலராக குர்தா அணிந்துகொண்டு, சேனல்களுக்கு பேட்டியளிப்பார்தானே! ஆனால், 'தி குட் ரோட்’ இயக்குநர் கியான் கோரியா(Gyan Correa)வுக்கு, தன் படம் ஆஸ்கர் பரிசீலனைக்குத் தேர்ந்தெடுக்கப் பட்டது முதல், பஞ்சாயத்துதான்!

'தி குட் ரோட்’ படத்தின் கதை என்ன?

குஜராத்தில் கட்ச் நகருக்குச் செல்லும் மாநில நெடுஞ்சாலையில் நடக்கிறது கதை. விதிமுறைகளை மீறி சரக்கு லாரி ஓட்டும் பாப்புவுக்கு, குடும்பச் சுமை கழுத்தை நெரிக்கிறது. தான் சாலை விபத்தில் இறந்துவிட்டால் குடும்பத்துக்கு காப்பீட்டுப் பணம் கிடைக்கும். அந்தப் பணத்தின் மூலம் குடும்பத்தின் கஷ்டத்தை விரட்டிவிடலாம் என்ற விபரீதத் திட்டத்தோடு லாரியைக் கிளப்புகிறார் பாப்பு.

தி ரோட் டு ஆஸ்கர்

விடுமுறையைக் கழிக்க மும்பையில் இருந்து ஜீப்பில் பயணிக்கும் டேவிட் - கிரண் தம்பதி, தங்களின் ஏழு வயது மகன் ஆதித்யாவை ஒரு தாபாவில் தவறவிடுகிறார்கள். பாப்புவுடன் சேர்கிறான் ஆதித்யா. இதற்கு இடையில் தன் பாட்டியைத் தேடி நகரத்தில் இருந்து வரும் சிறுமி பூனம், வழி தவறி சாலையோரம் இருக்கும் சாய கம்பெனி ஒன்றில் தஞ்சம் அடைகிறாள். ஆனால், அது குழந்தைகளை ரகசியமாக வைத்து விபச்சாரம் செய்யும் இடம் எனத் தெரிய வருகிறது. பாப்புவுக்கு காப்பீடு கிடைத்ததா? ஆதித்யா பெற்றோரோடு சேர்ந்தானா? பூனம் என்ன ஆனாள்?.. போன்ற மர்மங்களை திரைக்கதை முடிச்சில் அவிழ்க்கிறது படம்.

குஜராத் சாலைகளின் யதார்த்த மனிதர்களையும் உண்மைச் சம்பவங்களையும் கொண்டு படத்தை இயக்கிய கியான் கோரியாவுக்கு பூர்விகம் கோவா; படித்தது மும்பையில். ஆவணப் படங்கள் இயக்கி வந்தவர், திடீர் உந்துதலில் குஜராத் சாலைகளில் பல மாதங்கள் பயணித்து, நேரில் கண்ட, கேட்ட விஷயங்களைப் படமாக இயக்கியிருக்கிறார்.

தி ரோட் டு ஆஸ்கர்

சிறந்த குஜராத்திய படத்துக்கான தேசிய விருது, ஆஸ்கர் பரிசீலனைக்குத் தேர்வு என படத்துக்குப் பாராட்டுகள் குவிந்தாலும், ஆரம்பத்தில் இந்தப் படத்தைத் தயாரிக்க எவரும் முன்வரவில்லை. மத்திய திரைப்பட வளர்ச்சிக் கழகத்தின் உதவியுடன் படத்தை கியான் முடிக்க, எந்த எதிர்பார்ப்பும் விளம்பரங்களும் இல்லாமல் வெளியானது படம். தேசிய விருது வென்ற பிறகும், குஜராத் தியேட்டர்கள் படத்தைக் கண்டுகொள்ளவில்லை. இத்தனை பாராட்டு வெளிச்சத்துக்குப் பிறகும், குஜராத்தில் 13 தியேட்டர்களில் மட்டுமே படம் வெளியானது.

''சாலைகள், மொழிகளை, ஊர்களை, மக்களை இணைப்பவை; பொருட்களைக் கொண்டுவந்து சேர்ப்பவை, நமக்கான அன்றாட அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுபவை. இதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. அதே சாலைகள்தான் பல நோய்களுக்கு முக்கியமாக ஹெச்.ஐ.வி-க்கான வழித்தடம். இந்தச் சாலைகளின் வழியேதான் நோய்களும் பரவுகின்றன!'' என்று படத்தைப் பற்றி கியான் பேட்டி அளித்துக்கொண்டிருக்க, 'குஜராத் சாலைகளில் குழந்தைகளை வைத்து விபச்சாரம் செய்வதைப்போலக் காட்டி, மாநிலத்தை அவமதித்துவிட்டார்’ என பல அமைப்புகள் கொந்தளிக்கின்றன!

தி ரோட் டு ஆஸ்கர்

இது ஒரு பக்கம் என்றால், இந்தப் படத்தை இந்தியாவின் சார்பாக உலக அரங்குக்கு எடுத்துச்செல்ல பாலிவுட் தயாராக இல்லை. பாலிவுட்டின் பிரபல இயக்குநர் அனுராக் காஷ்யபின் இணை தயாரிப்பில் உருவான 'தி லன்ச் பாக்ஸ்’ திரைப்படத்தை இந்தியாவின் சார்பாக ஆஸ்கர் பரிசீலனைக்கு அனுப்ப வேண்டும் என்பதில் தீர்மானமாக இருக்கிறது பாலிவுட்.

'தி குட் ரோட்’ படத்தை இந்தியத் திரைப்படக் கழகம் தேர்ந்தெடுத்ததை ஏற்றுக்கொள்ளாமல், தங்கள் எதிர்ப்புகளை சமூக வலைத்தளங்களில் பதிவுசெய்து வருகிறார்கள் பாலிவுட் பிரபலங்கள். 'தி லன்ச் பாக்ஸ்’தான் ஆஸ்கருக்கான இந்தியாவின் சிறந்த தேர்வாக இருக்கும். எங்கோ தவறு நடந்திருக்கிறது’ என்று அனுராக் காஷ்யப் சொல்ல, 'தி லன்ச் பாக்ஸ்’ படத்தைத் தேர்வு செய்யாததால் இந்தியா ஆஸ்கர் பெறும் பொன்னான வாய்ப்பை இழந்துவிட்டது’ என்கிறார் கரண் ஜோஹர்.

தி ரோட் டு ஆஸ்கர்

வெறுக்கும் உள்ளூர் மக்கள், கண்டுகொள்ளாத மீடியா, எதிர்ப்பு காட்டும் இந்தி சினிமா உலகம்... என பல வேகத்தடைகளைத் தாண்டி ஆஸ்கருக்கான பயணத்தைத் தொடர்கிறது, 'தி குட் ரோட்’.