Published:Updated:

''பெற்றவன் கண்ணீரே பெரிய விருது!''

புதிய போராளி சசிஇரா.சரவணன்

''பெற்றவன் கண்ணீரே பெரிய விருது!''

புதிய போராளி சசிஇரா.சரவணன்

Published:Updated:
##~##

ளவான தாடியும் அழகான சிரிப்பும் சசிகுமாரின் அடையாளம். அடர்ந்தும் படர்ந்தும் கிடக்கும் தாடி... அள்ளிக் கட்டும் தலைமுடி... மறந்தும் சிரிக்காத உதடுகள்... என வழக்கமான அடையாளத்தை அப்படியே துடைத்து எறிந்துவிட்டு, உக்கிர உருவம் உடுத்தி இருக்கிறார் சசிகுமார். 'போராளி’ - தலைப்பின் தகிப்பைச் சொல்லும் புகைப்படங்கள்.

 ''ஈசனுக்குப் பிறகு ஆள் எங்கே எனத் தேடுகிற அளவுக்கு அமைதியாகிட்டீங்களே?''

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''படங்களைத் தவிர்த்து வேறு எந்த விஷயங்களையும் நான் பேசுறது இல்லை. பேச வேண்டிய சேதிகளை என்னோட பாத்திரங்களின் மூலமாகவே பேசுறேன். ஒவ்வொரு படம் முடிஞ்ச பிறகும், இதே அமைதியில்தான் அடுத்த வேலையில் இருப்பேன்... இருக்கேன்!''

''பெற்றவன் கண்ணீரே பெரிய விருது!''

'' 'சுப்ரமணியபுரம்’ என்கிற மெகா ஹிட் படத்தைக் கொடுத்தவரின் இரண்டாவது படம் 'ஈசன்’... ஏன்டா இப்படி ஒரு படத்தை எடுத்தோம் என வருந்துகிறீர்களா?''

''நிச்சயமா இல்லை!

என் படத்தின் முதல் ரசிகன் நான்தான். படத்தை எடுக்கும்போதே, இது அனைத்துத் தரப்பினருக்குமான படமா... இல்லை, குறிப்பிட்ட ஒரு சாராருக்கான படமா என்பது தீர்மானமாகிவிடும். 'சுப்ரமணியபுரம்’ அனைத்துத் தரப்புக்கான படம். அணையை உடைச்சுவிட்ட மாதிரி, அது பாய்ந்து பரவியதில் ஆச்சர்யம் இல்லை. ஆனால், எத்தனையோ பேருடைய வாழ்க்கைக்கு நுழைவு வாயிலா இருக்கிற சென்னை நகரம், சிலரோட வாழ்வைச் சிதைச்சு சின்னாபின்னமாக்கும் மண்ணாகவும் இருக்கு. அந்த பயங்கரத்தைப் பதிவுபண்ணினால், பெற்ற வயிறுகளுக்கான எச்சரிக்கையாக இருக்கும் என எண்ணினேன். 'படம் நீளம்’னு சிலர் சொன்னாங்க. படத்தின் நீளத்துக்காகக் கவலைப்பட வேண்டியது ஒரு தயாரிப்பாளர்தான். 'சுப்ரமணியபுரம்’ மாதிரியே பட்டையைக் கிளப்புற கதை இருக்கு. ஆனால், அதை என்னோட இரண்டாவது படமாப் பண்ண நான் விரும்பலை. 'ஈசன்’ படத்தைப் பார்த்து, நெஞ்சு துடிக்கக் கதறிய ஒரு தந்தையின் கண்ணீர்த் துளிதான் எனக்கான பரிசு. அதைவிடப் பெரிய விருது தேவை இல்லை!''

'' 'ஈசன்’ தோல்விக்குப் பிறகு 'சசி அவ்வளவுதான்’ எனப் பேச்சு கிளம்பியதே... எப்படி உணர்ந்தீர்கள்?''

''நான் யாரைப்பற்றியும் பேசியது இல்லை. எல்லோருக்கும் பிடிச்ச நல்ல பிள்ளையாத்தான் இருந்தேன்; இருக்கேன். 'ஈசன்’ தோல்வியால் யாரும் நஷ்டப்படலை. யாரோட தோல்வியையும் ரசிக்கும் மனோபாவம் எனக்கு இல்லை. அப்படியும் என்னுடைய சறுக்கல் ரசிக்கப்படுதுன்னா, அதிலும் எனக்குச் சந்தோஷம்தான். ஏன்னா, இன்னிக்கு என் தோல்வியை ரசிச்ச வங்க, அன்னிக்கு என் வெற்றியையும் ரசிச்ச வங்கதான். 'சுப்ரமணியபுரம்’, 'பசங்க’, 'நாடோடி கள்’னு நான் திரும்பிப் பார்க்க நேரம் இல்லாமல் ஓடியதை ஆச்சர்யமாப் பார்த்து இருக்காங்க. அதே வேகத்தில் நான் தேசிய விருது வாங்கியதைப் பார்த்து அவங்க திகைச்சு இருக்கலாம். ஆனால், நான் எல்லோருடைய வெற்றிகளையும் ரசிக்கிறேன். இந்த வருஷம் தமிழ் சினிமா நிறைய தேசிய விருதுகளை வாங்கினப்ப, என் மண்ணுக்கான விருதா நெனைச்சுப் பூரிச்சேன். தமிழக மக்களும் இதைக் கொண்டாடணும். மண்ணின் பிரதிபலிப்புகளைப் படம் பிடித்ததற்காக, எந்தக் கலைஞனும் விருதுகளுக்குச் சொந்தம் கொண்டாட முடியாது. தோல்வியை ஒப்புக்கொள்கிற பக்குவம் எப்ப பிறக்குதோ, அப்பவே நாம ஜெயிச்சிட்டோம்னு அர்த்தம். அனுராக் காஷ்யப் ஆபீஸ் போயிருந்தேன். அவரோட 'நோ ஸ்மோக்கிங்’ படத்தின் ஸ்டில்லை ஒட்டி '26 ஆன் ஸ்க்ரீன்’, 'அவுட் ஆஃப் ஸ்க்ரீன் 30’-னு போட்டு இருந்தார். 'என் படம் நாலே நாள்தான் ஓடியது’ என்பதை அவர் பகிரங்கமாகச் சொல்லி இருந்ததைப் பார்த்து மிரண்டுபோனேன். அடுத்து, பாலாஜி சக்திவேல் சார்... 'கல்லூரி படம் ரொம்ப நல்லா இருக்கு’ன்னு ஒரு நண்பர் சொன்னப்ப, 'நான் அந்தப் படத்தைச் சரியா பண்ணலைங்கிறது எனக்கே தெரியும். அடிக்கிற காயத்தைவிட, சொறிகிற காயத்துக்கு நான் ஆளாக விரும்பலை’ன்னு சொன்னாராம். இதைக் கேட்டப்ப, எனக்குச் சிரிப்பு வரலை. தோல்வியை மகுடமா நினைக்கிற மனப் பக்குவம்தான் வந்துச்சு. ஆரம்பத்திலேயே ஜெயிக்கிறதைவிட ஒரு தோல்விக்கு அப்புறம் ஜெயிச்சுப் பாருங்க... காயத்தின் மீது பூசப்பட்ட களிம்பா, அந்த வெற்றி உங்களைப் பூரிக்கவைக்கும்!''

''பெற்றவன் கண்ணீரே பெரிய விருது!''

'' 'போராளி’ங்கிற டைட்டிலும் ஆவேசமான படங்களும் ஈழம் சம்பந்தமான கதையோன்னு யோசிக்கவைக்குதே?''

''இது ஒரு தனி மனுஷனோட போராட்டக் கதை. மக்களுக்காக - மண்ணுக்காக - சோற்றுக்காக - சுதந்திரத்துக்காகன்னு போராடுற எல்லோருமே போராளிகள்தான். பொழுதைக் கழிக்கப் போராடுறவங்களுக்கு மத்தியில், போராட்டமே ஒவ்வொரு பொழுதுமா விடியும் ஒருத்தனோட கதை. கருவேல மரங்களுக்கு மத்தியில் நடிச்சப்பதான், அந்த மரத்தையே நிழலா நினைச்சு வாழும் மக்களோட வலி தெரிஞ்சது!''

''நீங்கள் இயக்க, சமுத்திரக்கனி நடிக்க... அவர் இயக்க நீங்கள் நடிக்க... இந்த நட்புச் சங்கிலி நல்லா இருக்கே?''

''இரண்டு பேர் பிரிஞ்சிட்டாங்கன்னா... அதை அதிர்ச்சியா விசாரிக்கலாம். இரண்டு நண்பர்கள் சேர்ந்து இருக்கிறதை ஆச்சர்யமாப் பார்த்தால் எப்படி? முன்பே போட்ட ஒப்பந்தப்படி, இரண்டு பேரும் சேர்ந்து ஒண்ணா ஓடிக்கிட்டு இருக்கோம். இதே மாதிரி எல்லாரும் சேர்ந்து ஓடணும்கிறதுதான் எங்களோட எதிர்பார்ப்பு. 'நட்பே ஜெயிக்கட்டும்’னு, 'நாடோடிகள்’ படத்தில் பாட்டாகவும் காட்சியாகவும் விரிந்தது எல்லாமே மனசுக்குள் இருக்கிற நட்பால்தான். ஈகோவும் பொறாமையும் இல்லைன்னா... எல்லாருமே நண்பர்கள்தான்!''

''பெற்றவன் கண்ணீரே பெரிய விருது!''

''ஸ்ரீதேவி வீட்டில் டின்னர்... த்ரிஷாவுடன் பேச்சுவார்த்தை... அமலா பாலை ஜோடியாக நடிக்கச் சொல்லி வற்புறுத்தல்... என 'மன்மதன்’ அளவுக்கு உங்களைச் சுற்றி சர்ச்சைகள் கிளம்புவது ஏன்?''

''ஒரு படத்தை முடிச்சிட்டு நான் இடைவெளிவிட்டால், என்னைப்பற்றி அப்போதும் ஏதாவது பேசணும்னு எதிர்பார்க்கிறாங்க. நான் சைலன்ட்டா ஒதுங்கிடுறதால், ஏதேதோ எழுதுறாங்க. ஸ்ரீதேவியை இதுவரைக்கும் நான் நேர்ல பார்த்ததே இல்லை. ஆனா, அவங்க மகளை என் படத்துக்காக நான் பார்க்கப்போனதா எழுதினாங்க. படத்தில் புக் பண்ணுவது சம்பந்தமா எந்த நடிகையிடமும் பேசும் பழக்கம் எனக்கு இல்லை. அப்படி இருக்க, த்ரிஷாகிட்ட பேச்சுவார்த்தை நடக்கிறதா பரபரப்பு... அப்புறம் என் பெயரைச் சொல்லி, அமலா பாலுக்கு யாரோ போன் பண்ணியதா செய்தி. ஒரு கட்டத்துக்கு மேல் பொறுக்க முடியாமல்தான் போலீஸுக்குப் போய் புகார் பண்ணினேன். இப்போ படத்தில் சுவாதி, வசந்தா, நிவேதான்னு மூன்று ஜோடி. இனி எனக்கு யாரும் ஜோடி தேட வேண்டிய அவசியம் இல்லை!''

''உங்க குரு அமீர் அத்தனை விவகாரங்களிலும் பட்டையைக் கிளப்புறார். ஆனால், நீங்க சினிமா தவிர்த்து பொதுவான விஷயங்களில் எப்பவுமே தலையைக் காட்ட மாட்டேங்கிறீங்களே?''

''அமீர் அண்ணன் ஆரம்பத்தில் சில விவகாரங்களில் பேசினப்ப, 'உங்களுக்கு இது தேவையா?’னு ஆதங்கப்பட்டவன் நான். ஆனால், இன்னிக்கு அண்ணன் பண்றது சரின்னுதான் தோணுது. ஒரு குடும்பத்தில் மூணு அண்ணன் தம்பிகள் இருந்தால், எல்லாருமே ஒருத்தரைப்போல் இருக்கிறது இல்லை. அமைதியையே அடையாளமா வெச்சிருக்கார் என் மூத்த அண்ணன் பாலா. எதையும் துணிச்சலா தட்டிக்கேட்கிறார் என் சின்ன அண்ணன் அமீர். இதை எல்லாம் ஆச்சர்யமாப் பார்த்தபடி சினிமா வைச் செய்றதுதான் இந்தத் தம்பியோட வேலை. என்னால் 10 இயக்குநர்கள் உருவாகணும்கிறதுதான் என்னோட ஆசை, இலக்கு எல்லாமே!

எனக்கு 'பசங்க’ பண்ணித் தந்த பாண்டிராஜ் கண்களில் ஆனந்தக் கண்ணீரைப் பார்த்தப்ப மனசுக்குள் உருவான வைராக்கியம் இது. அடுத்து என்னோட அசிஸ்டென்ட் பிரபுவை இயக்குநரா மாத்தப்போறேன். விடியலுக்கான கயித்தைப் பிடிச்சிட்ட சந்தோஷத்தில் கொண்டாடுறான். பிறக்கிறதைவிட, பிரசவிக்கிறதுதான் பெரிய சுகம்!''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism