Published:Updated:

சினிமா விமர்சனம் : ஆரண்ய காண்டம்

விகடன் விமர்சனக் குழு

சினிமா விமர்சனம் : ஆரண்ய காண்டம்

விகடன் விமர்சனக் குழு

Published:Updated:
##~##

ரு கேங்ஸ்டர் குரூப்பில் நடக்கிற சிலந்தி வலைப் பின்னல்களே 'ஆரண்ய காண்டம்’!

''ஈவு இரக்கம் எவ்ளோ ரேட்டுப்பா?'' எனக் கேட்கிற கேங் லீடர் ஜாக்கி ஷெராஃப். அவரது தளபதி சம்பத், தனியே தொழில் பண்ண நினைக்கிறார். குருவிடம் அனுமதி கேட்க வரும்போது ஈகோ வெடிக்கிறது. இன்னொரு பக்கம் ஜாக்கி ஷெராஃப் வலுக் கட்டாயமாக வைத்துக் 'குடும்பம்’ நடத்தும் யாஸ்மினுக்கும் (அறிமுகம்), கும்பலின் 'சப்ப’ ரவிகிருஷ்ணாவுக்கும் காதல். இந்த இரு கதைகளின் முடிவு பதறடிக்கிற க்ளைமாக்ஸ்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தொடக்கம், முடிவு, விளக்கம் என்ற ஃபார்முலாக்களை உடைத்து, தடதடக்கிற  திரைக்கதையை உலகத் தரத்தில் உருவாக்க எடுத்த முயற்சிக்காகவே, அறிமுக இயக்குநர் குமாரராஜா தியாகராஜனை ஆரவாரமாக வரவேற்கலாம்!  

சினிமா விமர்சனம் : ஆரண்ய காண்டம்

சுமோ கும்பல் சேர்க்காமல், வெகு சில மனிதர்களை வைத்துப் பண்ணப்பட்ட நிழல் உலகத்தின் நுணுக்கமான பதிவு அசத்தல். காலையில் அப்போதுதான் குளித்து முடித்து வருகிற யாஸ்மினை, பல் துலக்காமல் படுக்கையில் தள்ளி அறைகிற ஜாக்கியின் குரூரத்தைக் காட்டும்போதே படம் பளிச் என்று டேக் ஆஃப் ஆகிறது. ''வயசாயிருச் சுல்ல வேலைக்காவ மாட்ட...'' என சம்பத் சொல்ல, சட்டென்று பல் இளிப்பதும், ''அவளை எங்கேயாச்சும் வெளியே கூட்டிப் போ'' என ரவிகிருஷ்ணாவிடம் பணம் கொடுத்துவிட்டு, அதில் இருந்து ஒரு நோட்டைப் பிடுங்கிக்கொள்வதுமாக  ஜாக்கி ஷெராஃபின் வக்கிரத்தைச் சொன்னதில் அத்தனைக் கச்சிதம்!

முக பாவங்களில் மிரட்டுகிறார் ஜாக்கி. கண்களில் வழியும் வன்மத் தில், அசரடிக்கிற வில்லன். ''அவரைக் கேட்டுத்தானே பண்ணேன்'' எனக் கொந்தளிப்பதில் இருந்து, வெறி பிடித்து ஓடித் திட்ட மிடுவது வரை சம்பத்... அபாரம்.

ஜமீனாக வருகிற சோமசுந்தரம், அவரது பையனாக வரும் வசந்த் இருவரும் யாருப்பா? தமிழ்த் திரைக்குப் பிரமாதமான வரவுகள்! உதட்டில் ரத்தம் கசிய, ''உன்னாலதான் முடியலன்னா... என்னை ஏன் அடிக்கிற'' எனக் குமுறுவதும் ஜாக்கியை நினைத்து வெடவெடப்பதுமாக யாஸ்மினும் நடிக்கத் தெரிந்த நல்வரவு!

சினிமா விமர்சனம் : ஆரண்ய காண்டம்

படத்தின் பெரிய ப்ளஸ் வசனமும் ஒளிப்பதிவும். ''என்னைப் பொறுத்தவரைக்கும் சப்பயும் ஒரு ஆம்பளதான், ஆம்பளைங்க எல்லாமே சப்பதான்...'' இப்படி எல்லா ஏரியாவிலும் ஷார்ப்பான வசனங்கள். விதவிதமான கோணங்களில் மிரட்டும் பி.எஸ்.வினோத்தின் கேமரா, படத்தை அடுத்த தளத்துக்குத் தூக்கிச் செல்கிறது. ரத்தம் கொப்பளிக்கும் கொலைகளுக்கு மென்மையாகக் கரையும் யுவனின் பின்னணி இசை, படம் முழுக்கவே புதிய அனுபவம். கேங்ஸ்டர் படங்களில் பார்த்துப் பழக்கப்பட்ட பல விஷயங்கள் இதிலும் இருப்பது அலுப்பு. லீடருக்கு அடுத்த இடத்தில் இருப்பவ னோடு மோதல், ஒரு 'சப்ப’ கேரக்டர் ட்விஸ்ட்டுக் குப் பயன்படுவது, தாதா தன் ஆளையே கோபத்தில் போட்டுத் தள்ளுவது என ஆங்காங்கே க்ளிஷேக் கள். திடுதிப்பென்று சம்பத்துக்கு மட்டும் வாய்ஸ் ஓவர் போடுவதால், கதை யார் கோணத்தில் நடக்கிறது என்ற குழப்பம். படம் முழுக்க ஆடு அறுப்பது மாதிரி கூட்டம் கூட்டமாகக் கொன்று குவிக்கிறார்கள்... ஏன் இந்தக் கொலைவெறி?

இருந்தாலும், சொல்வோம்... 'ஆரண்ய காண்டம்’ ஒரு முக்கியமான முயற்சி!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism