Published:Updated:

“காதல்ல பிரேக்-அப் தடுக்கமுடியாது!”

சி.காவேரிமாணிக்கம், படங்கள்: கே.ராஜசேகரன்

“காதல்ல பிரேக்-அப் தடுக்கமுடியாது!”

சி.காவேரிமாணிக்கம், படங்கள்: கே.ராஜசேகரன்

Published:Updated:
##~##

''ரெண்டு வாரத்துக்கு முன்னாடி திடீர்னு செல்வராகவன் சார்கிட்ட இருந்து போன். 'இரண்டாம் உலகம்’ படத்துக்கு ரீ-ரெக்கார்டிங் பண்றீங்களா?’னு கேட்டார். படம் பார்த்தேன். அவ்வளவு பெரிய ஸ்கோப். எப்பவுமே செல்வா சார் படத்தோட பின்னணி இசை பெருசா பேசப்படும். எனக்கும் ரீ-ரெக்கார்டிங் ரொம்பப் பிடிக்கும். அதனால், ரொம்ப ரசிச்சி ரசிச்சி செஞ்சிருக்கேன்!'' -ஒரே வாரத்தில் 'இரண்டாம் உலகம்’ படத்தின் ரீ-ரெக்கார்டிங் முடித்த உற்சாகத் துள்ளலில் இருக்கிறார் அனிருத். கோலிவுட்டின் ஜாலிப் பையன். சம்பிரதாயத் தயக்கங்களோ, அலட்டல் பந்தாக்களோ இல்லை. தனுஷ் முதல் சிவா வரை எல்லோருடனும் ஜாலி பண்ணுகிறார். 'ஸாரி... ஆண்ட்ரியா’ என்று ஃபீல் பண்ணுகிறார். இந்தத் தலைமுறை இளைஞனாக பரபர, சரசரவென புகழ் வெளிச்சத்தில் மின்னுகிறார் அனிருத்...  

''என்கிட்டயே நிறையப் பேர் சொல்லியிருக்காங்க... 'சின்ன வயசுல இவ்வளவு புகழ்ச்சி, பிரபலங்களின் நட்பு, விளம்பரம் எல்லாம் நல்லது இல்லைப்பா’னு. ஆனா, '30 வயசுக்குள்ள ஷங்கர், ஏ.ஆர்.முருகதாஸ், கௌதம்மேனன், செல்வராகவன்... இவங்க படங்கள்ல வேலை  பார்த்துடணும்ங்கிறது என் லட்சியம். நான் இன்னும் வேகமா ஓடணுங்க’னு பதில் சொல்வேன்!''  

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''நீங்க பறந்துகூட போகலாம் பாஸ்... ஆனா, இப்போலாம் பாடல்கள் ஆரம்பத்தில் பிடிக்குது; 'ஹிட்’னு சொல்றாங்க. ஆனா, சில வாரங்கள் கழிச்சிக் கேக்கும்போது அவ்வளவா பிடிக்க மாட்டேங்குதே... ஏன்?''

''முன்னாடி எல்லாம் ஒவ்வொரு வாரமும் இவ்வளவு படங்களோ, பாடல்களோ ரிலீஸ் ஆகாது. அதனால் வேற சாய்ஸ் கிடைச்சதும் இதை மறந்துடுறீங்கனு நினைக்கிறேன். ஆனா, ஒரு பாட்டு நல்லா இருந்தா, அது எப்பவுமே நல்ல பாட்டுதான். ரெண்டு வருஷம் கழிச்சிக் கேட்கும்போதும் அந்தப் பாட்டு உங்களை முழுசா கேக்கவெச்சாத்தான், அது ஹிட் பாட்டு!''  

“காதல்ல பிரேக்-அப் தடுக்கமுடியாது!”

''உங்க இசையிலும் மத்தவங்க இசையிலும் உங்களுக்குப் பிடிச்ச பாட்டு எது?''

''என் இசையில் 'வணக்கம் சென்னை’ படத்துல வர்ற 'ஓ பெண்ணே... ஓ பெண்ணே...’ பாட்டு ரொம்பப் பிடிக்கும். மத்தவங்க இசைன்னா.... ம்ம்ம்... அது நிறையப் பாடல்கள் பிடிக்குமே. ஒரே ஒரு பாட்டுதான் சொல்லணும்னா, 'ஹே ராம்’ல ராஜா சார் கம்போஸ் பண்ண 'நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி...’ பாட்டு பிடிக்கும். செம க்ளாஸிக்!''

''யுவன் ஷங்கர் ராஜா, விஜய் ஆண்டனி, ஜி.வி.பிரகாஷ்... இவர்கள் இசையில் ஓர் இசையமைப்பாளராக உங்களைக் கவர்ந்த அம்சங்கள் எவை?''

''யுவனோட கீபோர்டு கம்போஸிங் ரொம்பப் பிடிக்கும். அவர்கிட்ட, 'ரெண்டு, மூணு படம் பண்றதே கஷ்டமா இருக்கு. 100 படங்களுக்கு எப்படி மியூசிக் பண்ணீங்க?’னு கேட்டேன்.  'இன்னும் 100 படங்களுக்கு மியூசிக் பண்ணணும்’னு சிம்பிளா சொல்றார். விஜய் ஆண்டனி சார் ரசிகர்களின் பல்ஸைக் கச்சிதமாப் பிடிச்சு, ஹிட் நம்பர் கொடுத்திடுவார். ஜி.வி.பிரகாஷ் மியூசிக் ரொம்ப ராவா இருக்கும். எனக்கு அந்த ஸ்டைல் ரொம்பப் பிடிக்கும்!''

''ஐஸ்வர்யா தனுஷ், ஸ்ருதி கமல், ஆண்ட்ரியா, கிருத்திகா உதயநிதி... இந்தப் பெண் க்ரியேட்டர்களிடம் நீங்கள் ஆச்சர்யப்படும் விஷயம் என்ன?''

''ஐஸ்வர்யாவின் தைரியம் என்னை ஆச்சர்யப்படுத்தும். '3’ மாதிரி ஒரு படத்தை, முதல் படமா எடுக்கிறது சாதாரணம் கிடையாது. நடிப்பு, பாட்டு, மியூசிக்னு ஸ்ருதி செம டேலென்ட். எந்த ஃபீல்டுல இறங்கினாலும் அதுல டாப் ஸ்பாட் பிடிக்கணும்னு மெனக்கெடுற அவங்க எனர்ஜி பிடிக்கும். ஆண்ட்ரியா, செம ஸ்டைலிஷாப் பாடுறது பிடிக்கும். கிருத்திகா, ரொம்ப ஜென்டில். அவங்க நம்மகிட்ட பேசுற தொனிக்கே, அவங்களுக்கு இன்னும் பெட்டர் வொர்க் கொடுக்கணும்னு தோணும். இவங்க எல்லார்கிட்டயும் நான் பார்த்து ஆச்சர்யப்படுறது, அவங்ககிட்ட கொடுத்த வேலையை உச்சக்கட்ட சின்சியாரிட்டியோட முடிப்பாங்க!''

''உங்க இசையில், பாடல் வரிகளைத் தாண்டி சத்தம்தான் அதிகமா இருக்கு... இருக்கும் மிகச் சில வரிகளும் ஆங்கிலத்தில்தான் இருக்குனு ஒரு குற்றச்சாட்டு இருக்கே!''

''எல்லாமே ஒரு டிரெண்ட்தானே! இன்னைக்கு இருக்கும் சவுண்ட்ஸ் பத்து வருஷம் கழிச்சி இருக்காது. ரெண்டு வருஷத்துக்குப் பிறகு வரப்போற மியூசிக்கை இன்னைக்கே கொடுத்தாதான்,  நாம டிரெண்ட்செட்டரா இருக்க முடியும். ஒருவேளை பத்து வருஷத்துக்குப் பிறகு இசை குறைவாகவும், குரல் அதிகமாகவும் இருக்கலாம். இப்போ தமிழ்ப் பாடல்களை தமிழ்நாட்டு தமிழர்கள் மட்டும் கேட்கிறது இல்லை. உலகம் முழுக்க இருக்கும் தமிழர்கள் கேட்கிறாங்க. அவங்ககிட்ட இருந்து மத்த மொழியைச் சேர்ந்தவங்களுக்கும் அந்தப் பாட்டு ஷேர் ஆகும். அந்த ஷேரிங்குக்கு ஆங்கில வார்த்தைகள் பயன்படும். இப்போ தமிழ் தெரியாதவங்களுக்குக்கூட 'கொலவெறி’னா என்னனு தெரியுமே... அது தமிழ் வார்த்தைதானே! ஆனா, அதுக்காக எல்லாப் பாடல்களும் அப்படித்தான் இருக்கணும்னு அவசியம் இல்லை. தேவையைப் பொறுத்து பயன்படுத்திக்கலாம்!''

“காதல்ல பிரேக்-அப் தடுக்கமுடியாது!”

''பார்ட்டி, ட்ரிங்ஸ், டிஸ்கோ..?!''

''நிறைய பார்ட்டி பண்ணிட்டு இருந்தேன். ஆனா, இப்போ போறது இல்லை. காலேஜ் சமயம் நிறைய ஆல்கஹால் இருந்துச்சு. இப்ப வேலை, பொறுப்பு, சக்சஸ் பிரஷர்னு அதுக்கெல்லாம் நேரம் இல்லாமப்போச்சி. அந்த கல்ச்சர் தப்புனு சொல்ல மாட்டேன். ஆனா, அளவா வெச்சிக்கணும். அந்த மாதிரியான சந்தர்ப்பங்கள்லதான் எல்லா மாதிரியான ஆட்களோடவும் பழக முடியுது!''

''ஆண்ட்ரியாவும் நீங்களும் திரும்ப ஒரு டூயட் சேர்ந்து பாடியிருக்கீங்க... 'பிரேக்-அப்’ முடிஞ்சு ராசி ஆகிட்டீங்களா?''

''அந்தப் பாட்டைப் பாடும் சமயம் நாங்க ரெண்டு பேரும் சந்திச்சுக்கவே இல்லை. 'எங்கேடி பொறந்த...’னு 'வணக்கம் சென்னை’ல வர்ற அந்தப் பாட்டுல ஹீரோ-ஹீரோயின் ரெண்டு பேருமே சண்டை போட்டுக்கிற சிச்சுவேஷன். 'தண்டம், முண்டம்’னுலாம் மாத்தி மாத்தி திட்டிக்குவோம். கிருத்திகா மேம், 'நீங்க ரெண்டு பேரும் பாடுங்க’னு சொன்னாங்க. 'முடிஞ்ச கதையை எதுக்கு ஸ்டார்ட் பண்ணிவிடுறீங்க’னு கேட்டேன். ஆனா, தொழில்ல பெர்சனல் கோபதாபங்களைக் காட்டக் கூடாதுனு  பாடினேன்.  நான் என் ட்ராக் பாடிட்டு, மும்பை போயிட்டேன். அவங்க பாடினதை என் சவுண்ட் இன்ஜினீயர்தான் ரெக்கார்ட் பண்ணார். அதனால அவங்ககூட பேசுற சந்தர்ப்பமே கிடைக்கலை!''  

''சரி... காதல் 'பிரேக்-அப்’ ஆகாம இருக்க மூணு டிப்ஸ் கொடுங்க...''

''நிறையப் பொய் சொல்லாம இருந்தாலே போதும். 'அதான் நெருங்கிட்டோமே’னு அதிகமா அட்வான்டேஜ் எடுத்துக்கக் கூடாது. பார்ட்னரை இறுக்கிப் பிடிக்காம ஃப்ரீயா விட்டுடணும். ஆனா, மூணு இல்லை... மூவாயிரம் டிப்ஸ் கொடுத்தாலும் அதை சின்சியராக் கடைப்பிடிச்சாலும், காதல் பிரேக்-அப் ஆறதைத் தடுக்க முடியாது ப்ரோ!''