என் விகடன் - திருச்சி
சினிமா
Published:Updated:

''ஒவ்வொரு பாட்டுக்கும் ஒரு அர்த்தம்!''

ம.கா.செந்தில்குமார், கவின் மலர்படங்கள் : உசேன்

##~##
ரண்ய காண்டம்... சினிமா ரசனை கொண்டவர்கள் தூக்கிக் கொண்டாடும் புதிய தமிழ்ப் படம். தயாரிப்பாளர் எஸ்.பி.சரண், இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா, நடிகர்கள் சம்பத், அஜய், சோமசுந்தரம், படத் தொகுப்பாளர் பிரவீன் என ஆரண்ய காண்ட குழுவில் ஆறு பேரைச் சந்திக்க வைத்தோம்.
''ஒவ்வொரு பாட்டுக்கும் ஒரு அர்த்தம்!''

''குமாரராஜா கதை சொன்ன விதத்திலேயே இது வித்தியாசமான படம்னு எனக்குப் புரிஞ்சது. எங்க அப்பாவுக்கு இந்தப் படம் ரொம்பப் பிடிச்சிருந்தது. 'படம் ஜெயிக்குதோ இல்லையோ... அதைப்பத்திக் கவலைப்படாதே. நம்ம மனசுக்குப் பிடிச்ச திருப்தியான படம் பண்ணினோம்கிற சந்தோஷமே போதும்டா’னு சொன்னார். கமல் சார் பார்த்துட்டு 'சூப்பர்’னு தோள் தட்டினார். படத்தில், 'ரஜினி பிடிக்குமா... கமல் பிடிக்குமா? கேள்வியை வைத்து பெண்களை மடக்கலாம்’ என்று அஜய்  சொல்லும் ஸீனை அவர் ரொம்ப ரசிச்சார். 'சென்சாரில் அந்த ஸீனை கட் பண்ணச் சொன் னாங்க’ன்னு சொன்னதும் ரொம்பக் கோபப்பட்டார். ரஜினி சாருக்கும் படத்தைப் போட்டுக் காண்பிக்கணும்னு நினைச்சேன். ஆனால், அதற்குள் அவருக்கு உடம்பு முடியாமல் போயிருச்சு. சினிமா, பத்திரிகை நண்பர்கள் மத்தியில் படத்துக்கு சூப்பர் ரெஸ்பான்ஸ்.  ஆனா,  'இப்படிப்பட்ட படங்களைத் தயாரிக்கணுமா?’னு தயங்குற அளவுக்கு ரசிகர்களோட ரெஸ்பான்ஸ் இருக்கு. நாலஞ்சு கமர்ஷியல் படங்களைத் தயாரிச்சுட்டு, அதில் வரும் வருமானத்தை வெச்சு அப்பப்போ இந்த மாதிரி நல்ல படங்கள் எடுக்கலாம்னு திட்டம் இருக்கு'' என எதிர்கால பிளான் சொல்லும் சரணைத் தொடர்கிறார் இயக்குநர் குமாரராஜா.

''லயோலாவுல விஸ்காம் படிச்சேன் சார். சில காரணங்களால் பாதியிலேயே படிப்பை நிறுத்திட்டேன். எந்த இயக்குநர்கிட்டேயும் உதவி இயக்குநரா வேலை செஞ்சது இல்லை. ஒரு குறும்படம், சில விளம்பரப் படங்கள் எடுத்தது மட்டும்தான் என் அனுபவம். 'ஆரண்ய காண்டம்’ ஸ்க்ரிப்டை 2006-ல் முடித்தேன். முதல் சந்திப்பிலேயே கதையைக் கேட்டுவிட்டு, 'இந்தக் கதையை நாம பண்றோம் பாஸ்’ என்று முன் வந்தார் சரண். சப்பை கேரக்டருக்கு ரவிகிருஷ்ணா, ஜமீன் காளையனுக்கு சோமசுந்தரம் என சிலரை மட்டும் மனதில் வைத்து அவர்களுக்கான வசனம் எழுதினேன். ஆனால் சம்பத், அஜய் இருவரும் சரண் சாய்ஸ். ஜாக்கி ஷெராஃப் எதிர்பாராமல் படத்துக்குள் வந்தது எனக்கே ஆச்சர்யம்தான். நினைச்ச மாதிரியே அட்டகாசமா பண்ணிட்டார். 'சுப்பு’ கேரக்டருக்கு பூஜாவைத்தான் மனதில் வெச்சிருந்தேன். அப்போ அவர் 'நான் கடவுள்’ படத்தில் நடிக்கப் போயிட்டதால யாஸ்மின் உள்ள வந்தாங்க'' என்கிறார் குமாரராஜா.

''ஒவ்வொரு பாட்டுக்கும் ஒரு அர்த்தம்!''

படத்தில் ஜமீன்தார் காளையனாக வரும் சோமசுந்தரத்தைப் பார்த்தால் நம்பவே முடியவில்லை. அத்தனை இளமையாக இருக்கிறார்.

''நான் கூத்துப்பட்டறை கலைஞர். 2002-ல் 'சந்திரஹரி’ நாடகத்தில் என் நடிப்பைப் பார்த்து, 'என் படத்தில் ஒரு நல்ல கேரக்டர் இருக்கு. அதில் நீங்கதான் நடிக்கணும்!’னு குமாரராஜா கேட்டார். 'நிறையப் பேர் சொல்லிட்டாங்க. இன்னிக்கு இவரு போல’னு பேசாம இருந்துட்டேன். ஏழு வருஷம் கழிச்சு, மறக்காம என்னைக் கூப்பிட்டு அனுப்பினார் குமாரராஜா. தாடி, மீசை வளர்த்து ரெடியானேன். இப்ப யார்கிட்டேயாவது, 'நான்தாங்க அந்த ஜமீன் கேரக்டர்ல நடிச்சவன்’னு சொன்னா நம்ப மாட்டேங்குறாங்க. சர்ட்டிஃபிகேட் வாங்கி வெச்சுக்கணும்போல'' என்று சிரிக்கிறார் சோம சுந்தரம்.

''ஒவ்வொரு பாட்டுக்கும் ஒரு அர்த்தம்!''

''யோவ், என்னைப் பேச விடுங்கய்யா. படம் முழுக்க ஓடி இருக்கேன்!''- சிரித்தபடி கை தூக்குகிறார் சம்பத். '' 'சார், படம் முழுக்க நீங்க ஓடிக்கிட்டே இருக்கணும். கொஞ்சம் ஃபிட்டா இருங்க’ன் னார் குமாரராஜா. நானும் உடம்பைக் குறைச்சேன். ஷூட்டிங் ஆரம்பிச்சப்போ ஓடுறதுலேயே எக்கச்சக்க டேக் வாங்கி முட்டி ரெண்டும் தேஞ்சுபோச்சு. இந்தப் படத்துக்காக நான் ஓடின தூரத்தைக் கணக்குப் போட்டா, மூணு தடவை சென்னையை ரவுண்ட் அடிக்கலாம். எப்படியோ சம்பத் இப்போ செம ஃபிட்!'' என்கிற சம்பத்தை இடைமறிக்கிறார் அஜய். ''படம் ஓடணும். இல்லை, படத்துல யாராவது ஓடணும். நமக்கு ரிவர்ஸ் ஸ்விங்க். நீங்க ஓடின ஓட்டத்துக்காகவாவது படம் பிச்சுக்கிட்டு ஓடும் பாருங்க'' என்று சொல்ல, ''என்ன... என் படம் உங்களுக்கு விளையாட்டாப் போச்சு. இப்போதான் படம் பிக்கப் ஆக ஆரம்பிச்சிருக்கு. அடுத்தது பாக்ஸ் ஆபீஸ் ஹிட்தான்!'' என்று சரண் சொல்ல, கைதட்டுகிறார்கள் அனைவரும். ''இந்தப் படத்துல எடிட்டிங் ஒருவிதமான ஸ்பெஷலோட இருக்கும். ஆடியன்ஸ் 'என்னடா இன்னும் கட் பண்ணலையே?’ன்னு நினைக்க ஆரம்பிக்கிற நேரத்துல 'கட் பண்ணணும்’னு சொன்னார். அதனால நானே ஒரு ஆடியன்ஸா மாறி பல முறை படம் பார்த்தேன். கரெக்டா சலிப்பு வர்றதுக்கு முன்னாடி கட் பண்ணிட்டேன். ரொம்ப வித்தியாசமான ஓர் அனுபவம் ஆரண்ய காண்டம்'' என்கிற

''ஒவ்வொரு பாட்டுக்கும் ஒரு அர்த்தம்!''

எடிட்டர் பிரவீனைத் தொடர்ந்த குமாரராஜா, ''படத்தைப் பார்த்தவர்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாகப் பாராட்டுவது, பி.எஸ். வினோத்தின் ஒளிப்பதிவையும் யுவன்ஷங்கர் ராஜாவின் பின்னணி இசையையும்தான். பின்னணி இசையை ஆடியோ சிடியாக்கி ரிலீஸ் செய்யப் போறோம். நல்லா கவனிச்சீங்கன்னா, படம் முழுக்க பின்னணியில் ஆங்காங்கே எண்பதுகளின் தமிழ் சினிமா பாட்டுகள் ஒலிக்கும். ஒவ்வொரு பாட்டுக்கும் ஒரு அர்த்தம் இருக்கும். கொஞ்சம் யோசிச்சா புரியும்'' என்று புன்னகைக்கிறார் குமாரராஜா.

வாழ்த்துகள் சொல்லிக் கிளம்பினோம்!